🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அரசியல் வெற்றிடம் - நிரப்புவாரா? - அரவக்குறிச்சி திரு.G.கலையரசன்.

திரு.G.கலையரசன் B.Sc., M.B.A.,L.L.B., அவர்கள் 27.02.1972-இல் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகேயுள்ள தடாகோவில் கிராமத்தில் திரு.கோபால் – திருமதி.சரஸ்வதி தம்பதியினருக்கு மகனாகப்பிறந்தார். திரு.கோபால் அவர்கள் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர். திரு.கலையரசன் அவர்கள் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் புள்ளியியல் துறையில் இளங்கலை பட்டமும், திருநெல்வேலியிலுள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டமும், திருப்பதி சட்டக்கல்லூரியில் எல்.எல்.பி பட்டமும் பெற்றுள்ளார். இவருக்கு திருமணமாகி திருமதி.K.திலகவதி என்ற மனைவியும் K.அகல்யன் என்ற ஒரே மகனும் உள்ளனர்.


மாணவப்பருவத்திலிருந்தே திராவிட இயக்க பற்றாளராக, தி.மு.கழகத்தில் இணைந்து பணியாற்றி வந்த திரு.கலையரசன் அவர்கள், தனது கல்லூரி படிப்பிற்குப்பிறகு கழக ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்டார். திரு.வைகோ அவர்களின் மேடைப்பேச்சிலும், மேலவைப்பேச்சிலும் கவரப்பட்டு, அவரை முன்மாதிரியாக ஏற்றுக்கொண்டு, அரசியல் பாதையை அமைத்துக்கொண்டவர். அதனடிப்படையில் திரு.வைகோ அவர்கள் ம.தி.மு.கழகத்தை 1993-இல் துவங்கியபொழுது, அக்கட்சியில் இணைந்து முன்களப்பணியாளராக தீவிரமாக கட்சிப்பணியாற்றினார். கட்சியில் துடிப்பாக செயலாற்றியதன் விளைவாக ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர், மாவட்ட துணைஅமைப்பாளர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் போன்ற பல்வேறு பதவிகள் தேடிவந்தன. முழுநேர தீவிர அரசியல்வாதியான திரு.கலையரசன் அவர்கள் தொடர்ந்து அரசியலில் அடுத்தடுத்த நிலைகளில் வளர்ந்துகொண்டு வந்தவர், 2009 முதல் 2018 வரை ம.தி.மு.க அரவக்குறிச்சி ஒன்றியச்செயலாளர் பதவி வகித்துள்ளார். இதன்மூலம் 2016-இல் சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் மதிமுக வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பைப் பெற்றார்.மேலும் ம.தி.மு.க மாநில ஆபத்து உதவிகள் செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.


கட்சியில் அடுத்தடுத்த பதவிகள் தேடிவரும் அளவிற்கு கடுமையாக உழைத்த திரு.கலையரசன் அவர்கள், ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து இலங்கை அதிபர் இராஜபக்சே 2012-இல் இந்தியா வந்தபொழுது மத்தியப்பிரதேசம் மாநிலம் சாஞ்சிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டார். மீண்டும் 2013-இல் இலங்கை அதிபர் ஆந்திர மாநிலம் திருப்பதி கோவிலுக்கு வந்தபொழுது கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி கைதானார். கட்சியின் உறுப்பினர் சேர்க்கையில் தொடங்கி, பல்வேறு பொதுக்கூட்டங்களை தலைமையேற்று நடத்தியுள்ளார். தவிர கட்சி அழைப்பு விடுத்த போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மறியல்களில் கலந்துகொண்டு பலமுறை கைதாகியுள்ளார். இதுதவிர ஆண்டு தோறும் கட்சி நடத்தும் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் மாநாட்டு ஏற்பாடுகளில் பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாவீரன் கட்டபொம்மன் பிறந்தநாளிலும், நினைவு நாளிலும் கட்சித்தலைவருடன் சென்று மாலை மரியாதை செலுத்தத் தவறாதவர் திரு.கலையரசன் அவர்கள்.

கட்சியுடன் ஏற்பட்ட மனக்கசப்பைத் தொடர்ந்து கால்நூற்றாண்டுகள் பயணித்த கட்சியிலிருந்து 2018-இல் விலகியவர், அதிமுக-வில் இணைந்து தன் அரசியல் பயணத்தை தொடர்ந்தார். கட்சி மாறினாலும் உழைப்பை மாற்றிக்கொள்ளாத இயல்பின் காரணமாக ஒன்றியக் கழக செயலாளர் பதவி ஒருசில மாதங்களில் தேடி வந்தது. 2019- செப்டம்பர் மாதம் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டதிலிருந்து, கட்சிக்காக கடுமையாக உழைத்து வருகிறார் திரு.கலையரசன். கட்சிப்பணிகளுக்கிடையே சமுதாய அமைப்புகளின் வேண்டுகோளை ஏற்று சிறப்பு அழைப்பாளராக கூட்டங்களில் பங்கேற்று வரும் திரு.கலையரசன் அவர்கள், மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலையை சென்னையில் அமைக்க கடும் அழுத்ததை கொடுத்து வருகிறார்.


கடும் அரசியல் பணிகளுக்கிடையே குடும்பத் தொழிலான விவசாயத்திலும் கவனம் செலுத்தி வரும் திரு.கலையரசன் அவர்கள் ரியல் தொழிலும் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வளர்ந்து வரும் இளம் அரசியல் தலைவரான திரு.கலையரசன் அவர்கள் வரும்காலங்களில் அரசியலில் மிகப்பெரிய பொறுப்புகளைப்பெற்று தொட்டிய நாயக்கர் சமுதாயத்திலுள்ள அரசியல் வெற்றிடத்தை, சமுதாய மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிட வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved