ஒன்றியக்குழு உறுப்பினர் - ஸ்ரீவில்லிப்புத்தூர்.திருமதி.சுந்தரி கோவிந்தராஜ்
திருமதி.சுந்தரி கோவிந்தராஜ் அவர்கள் 1976-இல் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகேயுள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தில் திரு.சுந்தரப்ப நாயக்கர் – திருமதி.சேதுராம் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகளாகப் பிறந்தார். இவர் நடுநிலைப்பள்ளி வரை கல்வி பயின்றுள்ளவர், அதே கிராமத்தைச் சேர்ந்த உறவினரான திரு.கோவிந்தராஜ் (இவர் பற்றி மேலும் விபரங்களை அறிய நீலநிறத்திலுள்ள பெயரை க்ளிக் செய்யவும்) அவர்களை மணமுடித்துள்ள இத்தம்பதியினருக்கு G.சந்தியா. M.Sc என்ற மகளும் G.பாலாஜி என்ற மகனும் உள்ளனர்.
நீண்டகாலமாக அரசியலில் ஈடுபட்டு வரும் திரு.கோவிந்தராஜ் அவர்களை மணமுடித்ததின் மூலம் நேரடி அரசியலில் ஈடுபாடில்லாமல் இருந்தாலும், அரசியல் பற்றிய புரிதலும், விழிப்புணர்வும் பெற்றிருந்தார் திருமதி.சுந்தரி கோவிந்தராஜ் அவர்கள். தன் கணவர் திமுக-வில் கிளைக்கழக செயலாளராகவும், ஒன்றிய விவசாய அணிச்செயலாளராகவும் பணியாற்றிய பொழுது சிறந்த குடும்பத்தலைவியாகவும், நிர்வாகியாகவும் இருந்து குடும்பத்தை வழிநடத்தியதுடன், தன் குழந்தைகளின் கல்வியிலும் எவ்வித குறையுமின்றி பார்த்துக்கொண்டவர் திருமதி.சுந்தரி அவர்கள். குடும்பத்தின் முழுப்பொறுப்பையும் தன் தோள்களில் சுமந்து கொண்டதின் மூலம் திரு.கோவிந்தராஜ் அவர்கள் முழுநேர அரசியல்வாதியாக சிறப்பாக பணியாற்ற முடிந்தது.
தன் பங்களிப்பிற்கான பலனும் திருமதி.சுந்தரி அவர்களுக்கே கிட்டியது. ஆம், அரசியலில் ஈடுபட்டு வரும் நம் சமுதாய ஆண்கள் அதன் மூலம் பொருளீட்டுபவர்கள் அல்ல. இது தமிழகம் முழுதும் வியாபித்திருக்கும் குணம். தங்களுக்கு கிடைத்த சொற்ப நிலங்களில் கிடைக்கும் வருவாயை வைத்துகொண்டு குடும்ப நிர்வாகம், குழந்தைகளின் கல்வி, உற்றார்-உறவினர் வீட்டு விஷேசங்கள் தவிர ஊருக்கு உழைக்கும் கணவரின் தினசரி அரசியலுக்கும் பணம் கொடுத்து சமாளிக்கும் கம்பள குலத்துப் பெண்களின் பங்களிப்பு மகத்தானது. இப்படியெல்லாம் குடும்பத்தை தூக்கி நிறுத்தி சமூக அந்தஸ்தை தக்கவைத்துக்கொள்வதுடன், சில நேரங்களில் அரசியலும் விட்டுவிடுவதில்லை.
அப்படியொரு வாய்ப்பை 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் மூலம் பெற்றார் திருமதி.சுந்தரி அவர்கள். தனது கணவர் கட்சிக்காற்றிய பங்களிப்பிற்காக அந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மகளிருக்கு ஒதுக்கப்பட்ட ஸ்ரீவில்லிப்புத்தூர் 3-ஆவது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தபொழுது, தனது கணவரின் சார்பில் களமிறங்கியவர் மகத்தான வெற்றி பெற்று, தன் தியாகத்திற்கு ஆறுதல் தேடிக்கொண்டார் திருமதி.சுந்தரி அவர்கள். இந்தப் பதவி காலத்தில் கிராமத்தின் அடிப்படைத் தேவையான குடிநீர் வசதி, காங்கிரீட் சாலைவசதி, தெரு விளக்குகள், போன்றவற்றிற்கு முன்னுரிமையளித்து நிறைவேற்றியுள்ளார். அதுதவிர, தொகுப்பு வீடுகள், ஆழ்துழாய் கிணறுகள், அங்கன்வாடி கட்டிடம், சமுதாயக்கூடம், ஊரணி பராமரிப்பு, மயானக் கூரை அமைத்தல் போன்ற பணிகளை நிறைவேற்றியுள்ளார். ஏழை-எளிய மக்களுக்கு இலவச பட்டா, விவசாயிகளுக்கு பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, கேஸ் இணைப்பு போன்ற பல்வேறு உதவிகளை மக்களுக்குப் பெற்றுத்தந்துள்ளார். தவிர, அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகளை செவ்வனே நிறைவேற்றி பொதுவாழ்விலும் தான் சளைத்தவரல்ல என நிரூபித்துள்ளார் திருமதி.சுந்தரி அவர்கள்.
அதையடுத்து நடைபெற்ற 2011-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதபோதிலும், அதற்காக வருத்தப்படாமல் கட்சிக்கு விசுவாசமாக திரு.கோவிந்தராஜ் அவர்கள், தொடர்ந்து கட்சிப்பணியாற்ற உறுதுணையாக இருந்தவர் திருமதி.சுந்தரி அவர்கள். இதன் மூலம் முழு அர்ப்பணிப்புடன் தொடர்ந்து கட்சிப்பணிகளிலும், பொதுமக்கள் சேவயிலும் ஈடுபட்ட வந்த திரு.கோவிந்தராஜ் அவர்கள், மக்களின் ஒருவனாக இருந்து அவர்களின் சுக-துக்கங்களில் பங்கேற்று, அவர்களின் தேவைகளை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று குறைகளைப் போக்கியுள்ளார். இந்த பொறுமைக்கும் பலனில்லாமல் போகவில்லை, ஆம் மீண்டும் 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுகழகம் சார்பில் போட்டியிடும் வாய்ப்பினைப் பெற்றார் திருமதி.சுந்தரி கோவிந்தராஜ் அவர்கள். ஸ்ரீவில்லிப்புத்தூர் ஒன்றியம் 3-ஆவது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு மீண்டும் போட்டியிட்ட திருமதி. சுந்தரி அவர்கள் தனது இரண்டாவது வெற்றியை ஈட்டியுள்ளார். மக்கள் தங்களுக்களித்த இந்த பொன்னான வாய்ப்பின் மூலம் திரு.கோவிந்தராஜ் (இவர் பற்றி மேலும் விபரங்களை அறிய நீலநிறத்திலுள்ள பெயரை க்ளிக் செய்யவும்) தம்பதியினர் சாதி,மதம், மொழி,இனம் கடந்து அனைவருக்காகவும் பாகுபாடின்றி சீரும், சிறப்புடன் பணியாற்றி பிறந்த சமுதாயத்திற்கும், வாய்ப்பளித்த கட்சிக்கும் பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.