🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அரசியல் வானில் ஒளிரும் நட்சத்திரம் - பரமக்குடி - திரு.K.A.M.குணா

திரு.K.A.M.குணா அவர்கள் 26.07.1965-இல் இராமநாதபுரம்  மாவட்டம், பரமக்குடியில்  திரு.K.A.முத்துசாமி – திருமதி.வடிவம்மாள் தம்பதியினருக்கு மகனாகப்பிறந்தார். மின் மற்றும் மின்னணுவியலில் துறையில் பொறியியல் (D.E.E) பட்டயம் பெற்றுள்ளார்.  இவருக்கு திருமணமாகி திருமதி.விஜயலட்சுமி என்ற மனைவியும் G.ஹாஷினி என்ற மகளும், G.ராதாகிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனர்.


மாணவப்பருவத்திலிருந்தே திராவிட இயக்கப்பற்றாளராக வளர்ந்தவர், திராவிட முன்னேற்ற கழகத்தில் மாணவரணியிலும், இளைஞரணியிலும் பணியாற்றியபொழுது, கழகம் நடத்திய பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். திரு.வைகோ அவர்களின் நாடாளுமன்ற உரைகளிலும், மேடைப்பேச்சுகளிலும் கவரப்பட்டு, அவரின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தவர், 1993-ஆம் ஆண்டு திரு.வைகோ அவர்கள் மதிமுகவைத் துவங்கியபொழுது அக்கட்சியில் இணைந்தவர், பரமக்குடி நகர இளைஞரணி அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின் பரமக்குடி நகரச் செயலாராக தேர்ந்தெடுக்கப்பட்டு சுமார் பத்தாண்டுகாலம் சிறப்பாக பணியாற்றினார். திரு.குணா அவர்களின் சீரிய கட்சிப்பணியால் கவரப்பட்ட கட்சித் தலைமை 2017-இல் இராமநாதபுரம், மாவட்ட செயளாலராக நியமித்தது. அப்பொறுப்பில் இரண்டாண்டுகாலம் சிறப்பாக பணியாற்றிய நிலையில், 2019-முதல் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். கட்சி நடத்தும் அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொள்ளும் திரு.குணா அவர்கள், திரு.வைகோ அவர்களின் எழுச்சி நடைபயணம், மது ஒழிப்பு போராட்டம், சீமைக்கருவேல மரம் அகற்றும் போராட்டங்களில் கலந்து கொண்டதுடன், திரு.வைகோ அவர்கள் டெல்லியில் நடத்திய போராட்டத்திற்கும் அங்கு சென்று கலந்து கொண்டு வந்துள்ளார். இதன் முத்தாய்ப்பாக 1994-95 களில் திரு.வைகோ அவர்களுடன் போராட்டத்தில் கலந்துகொண்டு கைதாகி, வேலூர் சிறையில் தலைவருடன் பதினைந்து நாட்கள் சிறையில் கழித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


1996 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் மூலம் தன் முதல் தேர்தலை சந்தித்தவர், பரமக்குடி நகர மன்ற உறுப்பினர் பதவிக்கு மதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். பொதுவாக மதிமுக வினருக்கு தோல்விகள் புதிதல்ல, எந்தநிலையில் துவண்டுவிடாத மனஉறுதி பெற்றவர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக, தொடர்ந்து இயக்க நிகழ்வுகளிலும், பொதுதளத்திலும் மக்களுக்காக இயங்கி வந்த திரு.குணா அவர்கள், 2001, 2006 மற்றும் 2011-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் பரமக்குடி நகர மன்றத்திற்கு மதிமுக சார்பில் போட்டியிட்டு “ஹாட்ரிக்” வெற்றி பெற்றார். இவர் நகரமன்ற உறுப்பினராக பதவி வகித்த காலத்தில் காங்கிரீட் சாலைகள், தெருவிளக்குகள், குடிநீர் வசதி,தொகுப்பு வீடுகள், தெருவிளக்குகள், கழிப்பிட வசதி பேன்ற அடிப்படை தேவைகளை நிறைவேற்றி மக்களின் மனங்களை வென்றுள்ளார். 

திரு.குணா அவர்கள் அரசியலில் மட்டுமல்லாது பொதுநலன் சார்ந்த விசயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றி வருபவர்.பரமக்குடியில் 1948 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட  பாரதியார் நடுநிலைப்பள்ளியில் நிர்வாகியாக இருந்த தந்தையார் திரு.முத்துசாமி அவர்களைத் தொடர்ந்து 1989-ஆம் ஆண்டு முதல் நிர்வாகப்பொறுப்பை ஏற்றுக்கொண்டு இன்று வரை சிறப்பாக நிர்வாகித்து வருகிறார். 600 மாணவ-மாணவிகளைக் கொண்ட இப்பள்ளியில் திரு.குணா அவர்களின் துணைவியார் திருமதி.விஜயலட்சுமி அவர்கள் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இராமநாதபுரத்திலுள்ள இராமானுஜம் பஜனை மடம் அமைக்க உதவியதேடு, மடத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார் திரு.குணா அவர்கள். அனைத்து சமுதாய மக்களுடனும் இணைக்கமாக நட்பு பாராட்டும் திரு.குணா அவர்கள் அங்குள்ள நாயுடு-நாயக்கர் மக்களின் உறவுப்பாலமாக விளங்குகிறார். அதன் வெளிப்பாடாக பரமக்குடியிலுள்ள நாயுடு சங்கத்தின் தலைவராக ஐந்து வருடங்களாக இருந்து வருகிறார். மேலும் இராமநாதபுரத்தில் தியாகி.முத்துசாமி அரங்கம் என்று தந்தையார் பெயரில் திருமணமண்டபத்தை நடத்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


அனைத்து தரப்பு மக்களுடனும் நல்லுறவில் இருக்கும் திரு.குணா அவர்கள் வரும்காலங்களில் கட்சியிலும்,நிர்வாகத்திலும் மிகப்பெரிய பதவிகளைப் பெற்று, சார்ந்துள்ள கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved