🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அரசியல் வானில் ஒளிரும் நட்சத்திரம் -பவானி.திரு.S.வெங்கடாசலம்.

திரு.S.வெங்கடாசலம் அவர்கள் 03.04.1970-இல் ஈரோடு மாவட்டம், பவானி அருகேயுள்ள ஆலத்தூர் கிராமத்தில் திரு.சென்ன நாயக்கர் – திருமதி. பழனியம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப்பிறந்தார். உயர்நிலைப் பள்ளி வரை கல்வி பயின்றவர் பெற்றோர்களுக்கு ஆதரவாக விவசாயப்பணிக்கு திரும்பினார். இவருக்கு திருமணமாகி திருமதி.இராதாமணி என்ற மனைவியும்,V.R.திவ்யபாரதி B.E.,M.B.A., என்ற மகளும், Dr.தினேஷ்குமார்.,M.B.B.S., என்ற மகனும் உள்ளனர்.


பெருநிலக்கிழாரான திரு.வெங்கடாசலம் அவர்கள் இளம் வயதிலிருந்தே அஇஅதிமுக அனுதாபியாக வளர்ந்தவர். எல்ஐசி முகவராக நெடுங்காலம் பணியாற்றியதின் மூலம் அப்பகுதிகளில் மிகவும் பரிட்சையமானவர். 1990-ஆம் ஆண்டு தனது இருபதாவது வயதில் அதிமுக-வில் அடிப்படை உறுப்பினராக இணைந்தவர், பின்னர் அதே ஆண்டில் கிளைக்கழக செயலாளராக பொறுப்பேற்று கடந்த 30-ஆண்டுகாலமாக தொடர்ந்து அப்பதவியை வகித்து வருகிறார். ஆளும்கட்சியின் கிளைக்கழக செயலாளராக அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஏழை-எளிய மக்களுக்கு கொண்டு சேர்த்துள்ளார். விவசாயிகளுக்கு வங்கிக்கடன், இலவச பட்டா மாறுதல், மானியங்கள் என பல்வேறு வகையில் தனது கடமையை செவ்வனே நிறைவேற்றியுள்ளார். இதன் மூலம் விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன்கிடைக்கச் செய்ததுடன்,விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டபொழுது நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பலன்பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2017-18 ஆம் ஆண்டுகளில் இப்பகுதி கடும் வறட்சியை சந்தித்தபொழுது ஏழை-எளிய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தன் சொந்த நிதியை வழங்கி அவர்களின் பசியிலும்,வறுமையிலும் பங்கெடுத்துக்கொண்டவர் திரு.வெங்கடாசலம் அவர்கள், அரசியல் தாண்டியும் செயல்பட்டவர். மேலும் , பவானி ஆற்றிலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கும் அப்பாலுள்ள ஆலத்தூர் பகுதி விவசாய நிலங்களுக்கு பாசன வசதியை ஏற்படுத்த விவசாயிகள் தரப்பிலிருந்து முன்னேடுத்து இடைவிடாது முயற்சி மேற்கொண்டு அதை சாதித்தார். இதன் மூலம் சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயக்குடும்பங்களும், 700 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களும் நேரடியாக பயன்பெற்றது. இந்தமாதிரியான பணிகள் எல்லாம் போகிற போக்கில் நடைபெற்றுவிடுவதில்லை. இந்தமாதிரிதிட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமெனில் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, சுற்றுச்சூழல்துறை, நெடுஞ்சாலைத்துறை, வேளாண்பொறியியல்துறை போன்ற அரசின் பல்வேறு துறைகளின் அனுமதியயைப் பெறவேண்டும் திட்டத்திற்கான தெளிவான காரணங்களையும், தேவைகளையும் பட்டியலிட்டு, அதை அந்தந்தத்துறை ஐ.ஏ.எஸ் அந்தஸ்திலுள்ள அதியகாரிகளிடம் அவர்கள் திருப்தியடையும் வகையில் விளக்கி ஒப்புதல் பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. சாதாரண கிளைக்கழக செயலாளரால் ஆகக்கூடிய காரியமல்ல,அதற்கான ஆளுமை வேண்டும், அந்த ஆளுமை திரு.வெங்கிடாசலம் அவர்களிடம் இருப்பதை கற்றரிந்த பெருமக்கள் ஒப்புக்கொள்வர். இதுதவிர ஆலத்தூர் உயர்நிலைப்பள்ளியில் முதலிடம் பெறும் பள்ளி மாணவ-மாணவியருக்கு ரூ.5000/- ரொக்கமாக பரிசு வழங்கி வருகிறார்.

2006 ஆம் ஆண்டு இவரது துணைவியார் திருமதி.இராதமணி அவர்கள் ஆலத்தூர் ஊராட்சி மன்றத் துணைத்தலைவராக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பவானி நிலவள வங்கியில் இயக்குனராகவும் பதவி வகித்து வரும் திரு.வெங்கடாசலம் அவர்கள், நீண்ட நாட்கள் அரசியலில் இருந்தபோதிலும் நேரடியாக தேர்தல் களத்தை சந்திக்காமல் இருந்து வந்தார். கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆலத்தூர் ஊராட்சி மன்ற வேட்பாளராகக் களமிறங்கி வெற்றி வாய்ப்பை இழந்தார். அரசியலில் வெற்றியும், தோல்வியும் யாருக்கும் நிரந்தரமானதாக இருந்ததில்லை என்பது கடந்த கால வரலாறு உணர்த்தும் செய்தி. நீண்டகால அரசியல்வாதியாக இதை முழுமையாக உணர்ந்துள்ள திரு. வெங்கிடாசலம் அவர்கள், மக்கள் நலப்பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதுடன், அரசியல் களத்திலும் முழுநேர அரசியல்வாதியாக இயங்கிக்கொண்டு வருகிறார்.


பரந்துவிரிந்த நட்புவட்டமும், ஆளுமையும், எந்தநேரத்தில் யாரும் தொடர்புகொள்ளக்கூடிய எளிய மனிதராகவும், அவசரத் தேவைகளுக்கு ஓடோடி உதவிடும் பண்பும், சாதாரணமாக 30-ஏக்கர் நிலமுடைய பெருநிலக்கிழார்களிடம் காணமுடியாத குணங்கள் என்பதை சமகாலத்தில் நாம் ஒவ்வொருவரும் அனுபவரீதியாக உணர்ந்ததே. ஏழை எளிய பாமர மக்களும், கற்றரிந்தவர்களும் விரும்பும் இந்தகுணம், திரு.வெங்கடாசலம் அவர்களை வருங்காலங்களில் உயரிய இடத்தில் வைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. பன்முகத்தன்மையுடய திரு.வெங்கடாசலம் அவர்கள் தன் திறமைகளை உணர்ந்து உள்ளூர் அரசியலைத்தாண்டி சிந்திக்கவும், செயல்படவும் வேண்டும் என்றும், சாதி,மதம்,மொழி,இனம் கடந்து அனைவருக்கும் பணியாற்றி சமுதாயத்திற்கும், அவர் சார்ந்துள்ள கட்சிக்கும் பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved