🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஊராட்சி மன்றத் தலைவர்-திருச்சுழி.திரு.N.ஞானபாண்டியன்

திரு.N.ஞானபாண்டியன்., B.Com., அவர்கள் 21.06.1982-இல் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள முத்துராமலிங்கபுரம் கிராமத்தில் திரு.K.நடராஜ்-திருமதி.முத்தம்மாள் தம்பதினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். அருப்புக்கோட்டை, தேவாங்கர் கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியலில் இளங்கலை (B.Com) பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு திருமணமாகி G.லோகேஷ்வரி என்ற மனைவியும், G.மதுஸ்ரீ, G.நந்தனஸ்ரீ என்ற இரு மகள்களும் உள்ளனர்.


திரு.ஞானபண்டியன் அவர்களின் தந்தையார் திரு.கே.நடராஜ் அவர்கள் புரட்சித்தலைவர். எம்.ஜி.ஆர். அவர்களின் தீவிர ரசிகராக இருந்து, பின் புரட்சித்தலைவர் அவர்கள் 1972-ல் அஇஅதிமுக-வைத் துவக்கியபொழுது அதில் இணைந்து, முத்துராமலிங்கபுரம் கிளைக்கழக செயலாளராகப் பொறுப்பேற்றவர், சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தான் மறையும் வரையில் அப்பொறுப்பில் இருந்தார். அந்தவகையில், பிறந்ததிலிருந்தே அதிமுக வாடையில் வளர்ந்தவர் திரு.ஞானபாண்டியன் அவர்கள். அரசியல் வாடை எப்படி பிறந்ததிலிருந்தே சுவாசித்திருந்தாரோ அதேபால் தான் அதிகார வாடையும் ஆண்டாண்டுகாலமாய் சுவாசித்தவர். தந்தையார் திரு.நடராஜ் அவர்கள் கட்சியின் கிளைக்கழக செயலாளராக மட்டும் இருக்கவில்லை, 1986, 1996,2001 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தல்களின் மூலம் பூமாலைபட்டி ஊராட்சிமன்றத் தலைவராக பணியாற்றிவர். 2006 ஆம் ஆண்டில் பூமாலைபட்டி ஊராட்சி தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட காரணத்தால், 2006-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தலில் நரிக்குடி ஒன்றியக்குழு 12-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட திரு.நடராஜ் அவர்களின் வெற்றி தட்டிப்பறிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதேதொகுதியில் 2011-ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட திரு.ஞானபாண்டியன் அவர்களின் தாயார் திருமதி.முத்தம்மாள் அவர்களுக்கு பெருவாரியான வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்டதின் மூலம் தங்களின் முடிசூடா மன்னன் திரு.நடராஜனே என்று மக்கள் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தனர்.

பிறவி அரசியல்வாதியான திரு.ஞானபாண்டியன் அவர்கள், தனது கல்லூரிப் படிப்பின்போதே முத்துராமலிங்கபுரம் கிளையில் இளைஞர்-இளம்பெண்கள் பாசறையை தொடங்கி அதன் செயலாளராக பதவிவகித்தார். தனது கல்லூரி படிப்பிற்குப்பின் சிறிது காலம் ஸ்ரீராம் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தில், நாகபட்டினம் கிளையில் அசிஸ்டென்ட் மேனேஜராகப் பணியாற்றினார். 2007 முதல் 2012 வரையிலும் பின்னர் 2013 முதல் 2018 வரையிலும் ஆனைகுளம் தொடக்ககூட்டுறவு வேளாண்வங்கியில் துணைத்தலைவராக பணியாற்றிய அனுபவமுள்ளவர். தனது தந்தையார் மறைவையடுத்து 2013 ஆம் ஆண்டு முதல் முத்துராமலிங்கபுரம் கிளைக்கழக செயலாளராகப் பணியாற்றி வருகிறார் திரு.ஞானபாண்டியன் அவர்கள். 2019-ஆம் ஆண்டில் நரிக்குடி கிழக்கு ஒன்றியம் இளைஞர்-இளம்பெண்கள் பாசறையின் ஒன்றிய செயலாளராக நியமிக்கப்பட்டார். 2018-ஆம் ஆண்டு முதல் திரு.ஞானபாண்டியன் வகித்த ஆனைக்குளம் தொடக்க கூட்டுறவு வேளாண்வங்கியின் துணைத்தலைவர் பதவியை அவரது துணைவியார் திருமதி.G.லோகேஸ்வரி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பதவிகளும், கௌரவமும் இவரின் குடும்பத்திற்கு எளிதில் கிட்டியதல்ல. திரு.ஞானபாண்டியன் அவர்களின் தந்தையார் திரு.நடராஜ் அவர்கள் சாதி, மதம் கடந்து அனைவருக்கும் ஆற்றிய சேவைகளே அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் அவருக்குப் பெற்றுத்தந்தது. மக்கள் ஆளும்கட்சி பார்த்து வாக்களிக்காமல் திரு.நடராஜ் அவர்களைப் பார்த்தே வாக்களிக்கும் அளவிற்கு தனது ஆளுமையை நிலைநாட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தங்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கும் மக்களின் வாரிசுகளுக்கு உதவிடும் வகையில் 2011-ஆம் ஆண்டு சுமார் 20 லட்சம் மதிப்புள்ள ஒன்னரை ஏக்கர் நிலத்தை அரசு உயர்நிலைப்பள்ளி துவங்க இலவசாக வழங்கியது திரு.ஞானபாண்டியன் குடும்பம் என்பதிலிருந்து மக்கள் திரு.ஞானபாண்டியன் குடும்பத்தின்மீது வைத்துள்ள நம்பிக்கையும், இவர்கள் மக்கள் மீது வைத்துள்ள அன்பும் தெளிவாகிறது.


மிகநீண்ட நெடிய அரசியல் பாரம்பரியமும்,பின்புலமும், பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவமும் திரு.ஞானபாண்டியனை பன்முகத்தன்மையுள்ள இளம்தலைவராக வார்ப்பித்துள்ளது. இப்படிப்பட்ட இளம்தலைவர்கள் சமுதாயத்தில் உருவாவது மிகமுக்கியமானதும், அவசியமானதும் கூட. 2019-ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பூமாலைபட்டி ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு முதன்முறையாக போட்டியிட்ட திரு.ஞானபாண்டியன் அவர்களுக்கு மகத்தான வெற்றியை பரிசளித்த மக்கள் “இவர் எங்கள் வீட்டுப் பிள்ளை” என உலகுக்கு அறிவிதுள்ளனர். சமுதாயம் என்று நாம் பெருமைப்படுவது வெறும் அடையாளமேயன்றி, தேர்ந்தெடுத்த மக்களுக்கு திரு.ஞானபாண்டியன் அவர்கள் தன் தந்தையார் காட்டிய வழியில், சாதி,மதம்,இனம்,மொழி பாகுபாடின்றி அனைத்துதரப்பு மக்களுக்கும் உழைத்து அவர்களின் நம்பிக்கையை காக்கும் வகையிலும், வாய்ப்பளித்த கட்சிக்கு விசுவாசமாகப் பணியாற்றுவதுமே, சமுதாயத்திற்கு உண்மையில் பெருமை சேர்ப்பது என்பதை நினைவில் கொண்டு பணியாற்றிட வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved