🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அரசியல் வானில் ஒளிரும் நட்சத்திரம்-திருப்பூர்.திரு.S.அப்புசாமி.B.A.,

திரு.S.அப்புசாமி B.A., அவர்கள் 02.06.1973-இல் திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகேயுள்ள ரெட்டைக்கிணறு கிராமத்தில், திரு.சுப்பிரமணியம்-திருமதி. மஞ்சம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். திருப்பூரிலுள்ள சிக்கண்ண நாயக்கர் கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை (B.A.,) பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு திருமணமாகி திருமதி.A.பேபி (இவர் பற்றி மேலும் விபரங்களை அறிய நீலநிறத்திலுள்ள பெயரை க்ளிக் செய்யவும்) என்ற மனைவியும் A.தாரணி என்ற மகளும் A. நந்தகோபால் என்ற மகனும் உள்ளனர்.


கல்லூரி காலத்திலேயே அரசியலில் அடியெடுத்து வைத்தவர், 1989-இல் திமுக வில் இணைந்து கிளைக்கழக செயலாளராக பணியாற்றினார். வைகோ-வின் தீவிர பற்றாளராகவும்,ஆதரவாளராகவும் இருந்த திரு.அப்புசாமி அவர்கள், 1993-இல் திரு.வைகோ அவர்கள் மறுமலர்ச்சி திமுக-வைத் துவங்கியபொழுது  அக்கட்சியில் இணந்தார். அப்பொழுது ஊத்துக்குளி ஒன்றிய மாணவரணிச் செயலாளராக நியமிக்கப்பட்டவர், திரு.வைகோ அவர்களின் கன்னியாகுமரி முதல் சென்னை வரை மேற்கொண்ட நடைபயணத்தில் கலந்து கொண்டுள்ளார். அதிலிருந்து கட்சி அறிவித்த மது ஒழிப்பு போராட்டம், பொடா சட்ட எதிர்ப்பு போராட்டம், முல்லை பெரியாறு பாதுகாப்பு போராட்டம்,மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், என அனைத்திலும் கலந்து கொண்டு தீவரமாக செயல்பட்டு வருகிறார். இவரின் அர்ப்பணிப்பாலும், தன்னலமற்ற சேவையாலும் கட்சி இவரை ஒன்றிய இளைஞரணி செயலாளராக்கியது, பின்னர் ஒன்றிய துணைச்செயலாளராக நியமித்து கௌரவித்தது, அப்பொறுப்பில் சுமார் 15 ஆண்டுகாலமாக தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்சி அரசியல் தாண்டி தேர்தல் அரசியலிலும் அதிக ஆர்வமுள்ளவர் திரு.அப்புசாமி அவர்கள். 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தனது 23 வயதில் பள்ளவராயன்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் வேட்பாளராகக் களமிறங்கி தோல்வியைத் தழுவினார். ஆயிரத்துச்சொச்சம் வாக்குகளையுடய சிறிய ஊராட்சியில் 75% சதவீதத்திற்குமேற்பட்ட சமுதாய வாக்குகள் இருந்தும் 1% சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளையுடைய சமுதாயத்தைச் சேர்ந்தவரை வெற்றி பெற வைத்த பெருந்தன்மைமிக்க சமுதாயம் நம் சமுதாயம் என்பது குறிப்பிடத்தக்கது. வைகோ-வின் தொண்டராயிற்றே தோல்விகளைக்கண்டு துவண்டு விடுவாரா என்ன? அடுத்த வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கும் அதேவளையில் விவசாயத்திலும், கட்சிப் பணிகளிலும் கவனம் செலுத்தி வந்தார். 2001-ஆம் ஆண்டு உள்ளாட்சி மன்றத் தேர்தல் வந்தது மீண்டும் போட்டியிட்டார், எதிர்தரப்பில் அதேவேட்பாளர், இடதுசாரி இயக்கத்தைச்சேர்ந்தவர், சிட்டிங் தலைவர் வேறு. கடுமையான போட்டியைத்தான் கொடுக்க முடிந்ததே தவிர வெற்றிபெற முடியவில்லை. வைகோ-வின் தொண்டருக்கு தொடர்தோல்விகள் என்ன செய்து விடமுடியும்? காத்திருப்பு தொடர்ந்தது, 2006-இல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட மனு அளித்திருந்த நிலையில், எதிர்த்தரப்பு பலமிக்க இடதுசாரி வேட்பாளரைத் தோற்கடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இந்த முறை வியூகத்தை மாற்றியவர், தனது மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டு, பொதுவேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளித்து, தீவிரமாக தேர்தல் பணியாற்றி மகத்தான வெற்றி பெறவைத்தார்.


திரு.அப்புசாமிக்கான வாய்ப்பு 2011-இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் மூலம் கிட்டியது. சுமார் 15-ஆண்டுகால காத்திருப்புக்குப்பின் கிட்டிய வாய்ப்பைப் பற்றிக்கொண்டவர், பள்ளவராயன்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் மூலம் அரசியலில் தனக்கான வாய்ப்பு வரும் வரையில் தொடர்ந்து முயற்சித்துக்கொண்டும், செயல்பட்டுக்கொண்டும் இருக்கவேண்டிய தேவையை உணர்த்துவதாக உள்ளது. திரு.அப்புசாமி அவர்கள் ஊராட்சி மன்றத் தலைவராக பதவியேற்றவுடன், ஊராட்சியில் நிலவிய குடிநீர் பஞ்சத்தை 5க்கும் மேற்பட்ட மேல்மட்ட தொட்டிகள், 3க்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுகள், உயர்மட்ட டேங்க், தெருக்கள் முழுவதும் தண்ணிர் விநியோகிக்க குழாய்கள் அமைத்து முற்றிலும் நீக்கினார். தவிர, காங்கிரீட் சாலைகள், தெரு விளக்குகள், முதியோர் உதவித்தொகை, இலவச மிக்சி கிரைண்டர் போன்ற அரசின் சமூக நலத்திட்டங்கள் முழுவதும் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திடும் வகையில் பணியாற்றினார். பல்வேறு நிதியாதாரங்களைப் பெற்று சுமார் 1 கோடிக்கும் அதிகாமான திட்டங்களை தன் ஐந்தாண்டுகால பதவியில் செய்தார்.

மீண்டும் 2019-இல் டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பள்ளவராயன் பாளையம் ஊராட்சி மகளிருக்கு ஓதுக்கப்பட்டதால், தன் துணைவியார் திருமதி. பேபி (இவர் பற்றி மேலும் விபரங்களை அறிய நீலநிறத்திலுள்ள பெயரை க்ளிக் செய்யவும்) அவர்களை ஊராட்சி மன்றத் தலைவர் வேட்பாளராகக் களமிறக்கி வெற்றி வாகை சூடியுள்ளார். மிகநீண்ட கால அரசியல் அனுபவமும், ஒன்றிய அளவில் பல்வேறு பதவிகளை வகித்து வருபவருமான திரு.அப்புசாமி அவர்கள், அரசியலில் அதே இடத்திலேயே பயணிக்காமல் அடுத்தடுத்த நிலைகளுக்கு உயரவேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved