🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அரசியல் வானில் ஒளிரும் நட்சத்திரம்-கோவை.திரு.D.சிவசாமி

திரு.D.சிவசாமி அவர்கள் 02.06.1962-இல் கோவை மாவட்டம், ஈச்சனாரி அருகேயுள்ள மாச்சேகவுண்டன் -பாளையத்தில் திரு.துரைசாமி நாயக்கர் – திருமதி. அய்யம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். உயர்நிலைப்பள்ளி வரை கல்வி பயின்றவர் பின் பெற்றொருக்கு உதவியாக விவசாயப்பணிக்கு திரும்பினார். இவருக்கு திருமணமாகி திருமதி.S.இந்திராணி (லேட்) என்ற மனைவியும் S.கௌரி என்ற மகளும், S.மதிவாணன் என்ற மகனும் உள்ளனர்.


இளம் வயதிலேயே தீவிர திராவிட இயக்கவாதியாக திமுக-வில் இருந்தவர், ஆரம்பகாலத்தில் மாசேகவுண்டம்பாளையம் கிளைக்கழக செயலாளரக பொறுப்பு வகித்துள்ளார். கோவை மாவட்ட திமுக-வில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவராக விளங்கிய பேரூர் தொகுதின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சிறந்த தொழிற்சங்கவாதியுமான திரு.நடராசன் அவர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ள திரு.சிவசாமி அவர்கள், 80-களில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்புப்போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைசென்றுள்ளார்.1989-ல் திமுகழகம் ஆட்சிக்கட்டிலில் இருந்தபொழுது தன் கிராமத்திற்கு தார்சாலை, பஸ்வசதி, ரேசன்கடை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடைப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரு.வைகோ அவர்கள் 1993-இல் மதிமுகவைத் துவக்கியபொழுது அதில் இணைந்து தீவிரமாகப் பணியாற்றியவர், கிளைக்கழக செயலாளராக சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி பல்வேறு பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், போராட்டங்களில் பெருமளவில் தொண்டர்களுடன் பங்கேற்றுள்ளார். இவரின் தீவிர களப்பணியின் காரணமாக மதுக்கரை ஒன்றிய மதிமுக பொருளாளராக நியமிக்கப்பட்டவர், பத்தாண்டு காலம் அப்பதவியில் தொடர்ந்தார். மதிமுகவில் பணியற்றியபொழுது 2011-ஆம் ஆண்டு சீரப்பாளையம் ஊராட்சிமன்றத் தலைவர் வேட்பாளராக களமிறங்கி வெற்றி வாய்ப்பை இழந்தார்.

2016-சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் மதிமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்து தீவிரமாக பணியாற்றி வருகிறார். அரசியல் கடந்து சமுதாயப்பணியிலும் அர்ப்பணிப்புடன் செயல்படுபவர், தமிழகம் முழுவதும் நட்பு வட்டத்தைப் பெற்றுள்ளார். சமுதாய நிகழ்வுகள் எங்கு, எந்த அமைப்பு சார்பில் நடைபெற்றாலும் கலந்து கொள்பவர், விடுதலைக்களம் அமைப்பு துவக்கப்பட்ட காலத்தில் அதன் வளர்ச்சிக்காக தீவிரமாக செயல்பட்டவர், விடுதலைக்களத்திற்காக பல்வேறு கிளைகள், கொடியேற்று விழாக்கள், பொதுக்கூட்டங்கள் ஏற்பாடு செய்து அதன் ஆரம்பகட்ட வளர்ச்சிக்கு மிகப்பெரும் பங்காற்றியுள்ளார். தவிர பல்வேறு சமுதாய அமைப்புகளுக்காக நிதியுதவியளித்துள்ளார். உள்ளூர் மக்களுக்காக கோவில் கட்டுமானத்தை முன்னின்று நடத்தி முடித்தவர், தன்னை நாடிவந்த அரிஜன மக்களையும் அரவணைத்துக்கொண்டு, அவர்களின் வேண்டுகோளை ஏற்று தன் சொந்த செலவில் அவர்களுக்கு கோவில்கட்டும் பணியை மேற்கொண்டு வருகிறார்.

அரசியலில் அதிரடியாக செயல்படுபவர், அதிமுகவில் இணைந்து ஒருசில ஆண்டுகளுக்குள் 70க்கும் மேற்பட்டவர்களுக்கு முதியோர் உதவித்தொகை பெற்றுத்தந்துள்ளார். அதிகார மட்டங்களில் நெருக்கமாக இருந்து காரியம் சாதிப்பதில் கெட்டிக்காரரான திரு.சிவசாமி அவர்கள் மக்களின் அடிப்படைத்தேவைகள் சம்மந்தாக தன்னை அணுகும் யாருக்கும், எந்தப்பொறுப்பில் இல்லாவிட்டாலும் செய்து முடிக்கும் வல்லமையுள்ளவர். 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் சீராப்பாளையம் ஊராட்சிமன்றத் தலைவர் வேட்பாளராக சுயோட்சியாக களமிறங்கி தன் அதிரடிப்போக்கால் தேர்தல்களத்தை சூடாக்கினார். இத்தேர்தலில் வெற்றிவாய்ப்பை இழந்திருந்தாலும், நவீன தொழில்நுட்பங்களையும், புதுப்புது யுக்திகளையும் கிராம அளவிலான தேர்தலில் கையாண்டு, மிகக்குறுகிய காலத்தில் தேர்தல் களத்தை தன்பக்கம் திருப்பியதில் வெற்றி பெற்றார். சீரபாளையம் பஞ்சாயத்தில் குறிப்பிடத்தக்க அளவிவில் சமுதாய வாக்குகள் இருந்தபோதிலும், தனித்து வெற்றிபெறுமளவில் வாக்குகள் கிடையாது. இதனால் சமுதாயத்தினர் போட்டியிட தயங்கி வந்த நிலையை மாற்றி, துணிந்து இருமுறை போட்டியிட்டதின் மூலம் இதுவரை அனுபவித்து வந்தவர்களுக்கு கடும் நெருக்கடியை உண்டாக்கினார்.


அரசியலிலும், சமுதாயப்பணியிலும் வெற்றி தோல்விகளைத் தாண்டி அதே சுறுசுறுப்புடன் பணியாற்றி வரும் திரு.சிவசாமி அவர்கள், வரும் காலங்களில் வெற்றிக்காண பாதைகளை வகுத்து மகுடம் சூடுவதைக்காண சமுதாயம் ஆர்வமாக உள்ளது என்பதுடன், வாய்ப்புள்ள இளைஞர்களை அடையாளம் கண்டு ஊக்குவித்து, வருங்கால அரசியல் தலைவர்களை சமுதாயத்திற்கு உருவாக்கிட உழைத்திட வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved