🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஒன்றியக்குழு உறுப்பினர்-கோவை.திரு.K.மாசிலாமணி

திரு.K.மாசிலாமணி அவர்கள்  27-05-1970-ல் கோவை மாவட்டம்  பொள்ளாச்சி அருகே உள்ள நல்லட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த திரு.கந்தசாமி மற்றும் திருமதி.சுப்புலட்சுமி ஆகியோரின் மூத்த மகனாக விவசாயக்குடும்பத்தில் பிறந்தார். தந்து தொடக்க்க் கல்வியை மாச்சேகவுண்டன்பாளையத்திலும், உயர்நிலைக் கல்வியை மதுக்கரை அரசு உயர்நிலைப்பள்ளியிலும் முடித்தார். இவருக்கு திருமணமாகி M.அபிராமி என்ற மனைவி உள்ளார்.இத்தம்பதியினருக்கு நேரடி வாரிசுகள் இல்லாதபொழுதும், சமூகத்திலுள்ள குழந்தைகளை தங்கள் குழந்தைகளாக பாவித்து அன்பு செலுத்தும் அற்புத மனம் படைத்தவர்கள்.


பள்ளிக்கல்விக்குப்பின் கோவையிலுள்ள யுனிவர்சல் குரூப் கம்பெனியின் துணைநிறுவனமான யுனிமெக் இன்டஸ்டிரிஸ் நிறுவனத்தில் 1987ஆம் ஆண்டில் தொழிலாளியாக வாழ்க்கையை துவங்கியர் 2018 வரை 31 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றினார்.மாணவப்பருவத்திலிருந்தே அரசியலில் ஆர்வம் கொண்டவர், திமுக வில் அடிப்படை உறுபினராக இணைந்து சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். இதன்தொடர்ச்சியாக கிளைக்கழக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், தொடர்ந்து மூன்றாவது முறையாக அப்பதவியை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமது சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு கட்சி பெரிய அளவில் பொறுப்புகளையோ, பதவிகளையோ வழங்கியதில்லை என்ற விமர்சனம் இருந்தபோதிலும், அதுபற்றியெல்லாம் கவலை கொள்ளாமல், ஏற்றுக்கொண்ட கட்சிக்கும், தலைமைக்கும் விசுவாசமாக, கட்சி அறிவிக்கும் பல்வேறு போராட்டங்களானாலும், மறியல்களானாலும், பொதுக்கூட்டங்களானாலும் கட்சியினரை பெருமளவில் திரட்டி கலந்து கொண்டு தன் விசுவாசத்தை வெளிப்படுத்தி, தான் யாருக்கும் சளைத்தவரல்ல என்பதை பல்வேறு தருணங்களில் நிரூபித்தி வருகிறார். கட்சியின் தொடர் தீவிர விசுவாசத்தின் பயனாக செப்டம்பர்'2020-ல் நடைபெற்ற உள்கட்சித்தேர்தல் மூலம் கோவை கிழக்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் திரு.மாசிலாமணி அவர்கள். கட்சி அரசியல் தாண்டி சமுதாய நிகழ்வுகளிலும் கலந்துகொள்வதின் மூலம் சமுதாயத்திலும் நன்கு பரிட்சையமானவராக, நெருக்கமானவராக விளங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தன் 20 ஆண்டுகால பொதுமக்கள் சேவையை மக்களிடம் சோதித்துக்கொள்ள விரும்பியவர், 2011-இல் அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சீரபாளையம் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். தேர்வில் தோல்வியுறும் மாணவன் அடுத்த முயற்சியில் வெற்றிபெற முயல்வதுபோல், இந்த தோல்வியைக்கண்டு துவண்டுவிடாமல் தீவிர களப்பணியிலும், பொதுமக்கள் சேவையிலும் இடையறாது உழைத்ததுடன், ஜாதி, மதம் கடந்து அனைத்து மக்களின் சுக-துக்கங்களிலும் பங்கெடுத்து மக்களின் ஒருவனாக வலம் வந்தார். மேலும் உள்ளூர் கோவில் திருவிழாக்கள், விஷேசங்கள் என அனைத்திலும் தன் பங்களிப்பை உறுதி செய்து வந்தார். இந்த உழைப்பை அங்கீகரித்து, திமுகழகம் திரு.மாசிலாமணியை மாவட்ட பிரதிநிதியாக 2016-இல் நியமனம் செய்தது.

இப்பதவிகளிலெல்லாம் திருப்தியடையாதவர், மக்களின் அங்கீகாரத்தையே பெரிதும் விரும்பினார். ஆனால் அதைப்பெருவது அவருக்கு அவ்வளவு சுலபமான காரியமாக இருக்கவில்லை. கட்சி கட்டமைப்பு, சமுதாய பலம், எதிர்க்கட்சி வரிசையில் இருந்து பணியாற்றுவது, இவற்றை எல்லாம் தாண்டி, தமிழக அரசில் மிகவும் செல்வாக்குமிக்க அமைச்சரின் நேரடிப்பார்வைக்குள்ளான பகுதியாக இருப்பதும் திரு.மாசிலாமணிக்கு கூடுதல் நெருக்கடியைத்தந்தது. இருந்தபோதிலும் மனம் தளராமல் 2016-இல் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தலில் சீரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அத்தேர்தல் இரத்து செய்யப்படவே, அவரது விருப்பம் ஈடேறாமல் தள்ளிப்போனது. ஆனாலும் அரசியல் என்பது தொடர் மக்கள்பணி என்பதை உணர்ந்திருந்தவர், தொடர்ந்து பொதுப்பணிகளில் தொய்வில்லாமல் ஈடுபட்டு வந்தார். இதன் மூலம் 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், மக்களின் ஆதரவைப் கட்சிக்குப் பெற்றுக்கொடுத்து தனது நியமனத்தை நியாயப்படுத்தினார். முப்பதாண்டுகால வரலாற்றில், 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், இவர் பொறுப்பு வகித்த பகுதியில் உள்ளூர் அமைச்சரின் செல்வாக்கையும் தாண்டி, முதல்முறையாக அதிமுக வேட்பாளரைவிட சுமார் 800 வாக்குகள் திமுகழக வேட்பாளர்க்கு கூடுதலாகப் பெற்றுத்தந்தார்.


இது திரு.மாசிலாமணிக்கு உற்சாகத்தைத் தந்தது எனலாம். தொடர் பொதுமக்கள் பணி, மக்களிடம் இனக்கமான உறவு, சரியான திட்டமிடல், அர்ப்பணிப்புடன் பணியாற்றுதல் ஆகியவை பணபலம், சாதிபலம், அதிகார அத்துமீறலைத்தாண்டி வெற்றியைத் தரத்தக்கவல்லது என்ற நம்பிக்கையைத் தந்தது. இதனைத் தொடர்ந்து 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் மதுக்கரை ஊராட்சி ஒன்றியம் 3வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பை திமுகழகம் திரு க.மாசிலாமணிக்கு வழங்கியது. ஒன்றியக்குழு உறுப்பினருப்பினருக்கான வாக்காளர் எண்ணிக்கை 5000 என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், இந்த வார்டில் மட்டும் வாக்காளர்கள் எண்ணிக்கை ஒன்னரை மடங்குக்கும் அதிகமாக சுமார் 8150  வாக்காளர்களைக் கொண்டதாக இருந்தது. ஆளும்கட்சி செல்வாக்கு, பணபலம்,  சமுதாய பலம், உள்ளூர் அமைச்சர் என்பதையெல்லாம் தாண்டி ,எதிர்த்தரப்பு வேட்பாளர் தொடர்ந்து மூன்றுமுறை ஒன்றியப்பெருந்தலைவர், ஒருமுறை ஒன்றிய துணைப்பெருந்தலைவர் என இருபது ஆண்டுகள் அதிகார பீடத்தில் வீற்றிருந்தவரை எதிர்த்து களம் காணவேண்டிய சூழலில், தனது சேவையின் மீதும், கட்சியின் மீதும் நம்பிக்கைவைத்து எதிர்கொண்டார். இறுதியில் இத்தொகுதில் பதிவான வாக்குகளில் சுமார் 60 சதவீதமான வாக்குகளைப்பெற்று, 350-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மதுக்கரை ஒன்றியத்தின் 3ஆவது வார்டை திமுகழகத்தின் கோட்டையாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தன் இடைவிடாத அரசியல் பணிகளுக்கிடையே ரியல் எஸ்டேட் நிறுவனமும், கட்டுமான நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். சோடைபோகாத கடின உழைப்பு,சேவையை தாண்டி, ஜாதி, மதம், மொழி, இனம் தாண்டி சக மனிதனை நேசிக்கும் பண்பாலும் தொகுதி மக்களின் அன்பைப்பெற்று வளர்ந்து வரும் திரு.க.மாசிலாமணி அவர்கள், சாதி,மதம்,இனம்,மொழிகளுக்கு அப்பாற்பட்டு பாரபட்சமற்ற தொடர்சேவையால் சமுதாயத்தை பெருமைகொள்ளச்செய்ய வேண்டுமாய் அன்புடன் வேண்டி, அரசியலில் மென்மேலும் பல உயரங்களைத்தொட அன்புடன் வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved