🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அரசியல் வானில் ஒளிரும் நட்சத்திரம்-தாமரை. திரு. S.குமரேசன்

திரு.S.குமரேசன் அவர்கள் 1977-இல் கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள தாமரைக்குளம் கிராமத்தில் திரு.சுப்பிரமணியம் – திருமதி.சின்னத்தங்கம் தம்பதிகளுக்கு விவசாயக் குடும்பத்தில் நான்காவது மகனாகப் பிறந்தார். திரு.குமரேசன் அவர்களுக்கு இரண்டு சகோதரிகளும், ஒரு மூத்த சகோதரனும் உள்ளனர். இவர் வணிகவியலில் M.Com., முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு திருமணமாகி திருமதி. K.கார்த்திகா என்ற மனைவியும், K. சியாம் பிரசாத் என்ற மகனும் உள்ளனர்.

தனது முதுகலைப் பட்டத்திற்குப்பின், 1998-முதல் சர்வதேச நிறுவனமான இந்துஸ்தான் யுனிலிவர் லிமிடெட்டில் மார்க்கெட்டிங் பிரிவில் சுமார் ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார். இயல்பிலேயே மிகவும் சுறுசுறுப்பானவரான திரு.குமரேசனுக்கு ஏற்றவேலையாக இது அமைந்தது. பின்னர் மரவேலைகளில் ஒட்டுவதற்காக பசை தயாரிக்கும் நிறுவனமான பிடிலைட் கம்பெனியில் மார்க்கெட்டிங் பிரிவில் ஒருசில ஆண்டுகள் பணியாற்றினார். இந்த வாய்ப்பின் மூலம் இந்தியாவில் சுமார் 25 க்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்யும் வாய்ப்பினை பெற்றார். எதிலும் முழுமூச்சுடனும், அற்பணிப்புடனும் செயல்படும் திரு.குமரேசன் அவர்கள், பிடிலைட் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவில், இந்திய அளவில் சிறந்த விற்பனையாளாருக்கு வழங்கப்படும் தங்கப் பட்டயத்தை (கோல்டு மெடல்) வென்றார்.


மார்க்கெட்டிங்க் துறையில் சாதித்துக் கொண்டிருந்தவருக்கு, சமுதாயத்தில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கும் ஈச்சனாரியைச் சேர்ந்த புயல் குமார் என்கிற திரு.சிவக்குமார் (இவர் பற்றி மேலும் விபரங்களை அறிய நீல நிறத்திலுள்ள பெயரை க்ளிக் செய்யவும்) அவர்களின் அறிமுகம் தனது உறவினரான மாசநாயக்கன்புதூர் வைகோ என்கின்ற சுரேஷ் மூலம் கிடைத்தது. புயல் குமார் அவர்களின் பிரதான வேலையே சமுதாயத்திலுள்ள திறமையும், தகுதியும் வாய்ந்த இளைஞர்களை அடையாளம் கண்டு சமுதாயப்பணிக்கு பட்டை தீட்டுவது தான். அந்தவகையில் மிகவும் சுறுசுறுப்பான திரு.குமரேசனின் பார்வையை சமுதாயத்தின்பால் திருப்பினார். சமுதாயப்பணிக்கு ஆயத்தமானவர், அதில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொள்ள,மார்க்கெட்டிங் பணியை உதறித்தள்ளினார். திரு.குமரேசனை சமுதாயப்பணிக்கும், அரசியில் பணிக்கும் ஏற்றவாறு தயார் படுத்திக்கொள்ள, சமுதாயத்தின் மூத்த தலைவராகவும், வழிகாட்டியாகவும் உள்ள ஈச்சனாரி திரு.க.மகாலிங்கம் (இவர் பற்றி மேலும் விபரங்களை அறிய நீல நிறத்திலுள்ள பெயரை க்ளிக் செய்யவும்) அவர்களின் பட்டறையில் உரிய பயிற்சி வழங்கி பட்டை தீட்டப்பட்டார். அவரின் வழிகாட்டுதல்படி சமுதாயப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர், 2006-இல் நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற சமுதாயத்தினருக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தார். இந்த யோசனை பயிற்சி பாசறையின் மற்ற மாணவர்களால் ஏகமனதாக ஏற்கப்பட, விழா ஏற்பாடுகளை தடால்புடாலாக  செய்து, அன்றைய விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.வரதராசன் அவர்களின் தலைமையில், பொள்ளாச்சி அருகேயுள்ள நல்லட்டிபாளையம் கிராமத்தில் சீரோடும், சிறப்போடும் நடத்தியதுடன்,  வந்திருந்த அனைவருக்கும் தனது சொந்த செலவில் அறுசுவை உணவு அளித்து விழாவை வெற்றிகரமாக நடத்திக்காட்டினார். இதற்கு முன்பும் சரி பின்பும் சரி இதுவரை நமது சமுதாய அரசியல் பிரமுகர்கள் மட்டும் கலந்து கொண்ட ஒருநிகழ்ச்சி கோவை மாவட்டத்தில் நடைபெற்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாழ்வில் தன் முதல் அடியையே அழுத்தமாக எடுத்துவைத்தார். இவரின் துடிப்பான செயல்பாட்டால் கவரப்பட்ட விடுதலைக்களத்தின் முன்னனி நிர்வாகிகள், திரு.குமரேசன் அவர்களை 2006-ஆம் ஆண்டு கோவை மாவட்டப் பொருளாளராக நியமித்தார்கள். ஈச்சனாரி திரு.க.மகாலிங்கம் அவர்களின் பட்டறையில் வார்ப்பிக்கப்பட்ட சமுதாய இளைஞர்களான குள்ளக்காபாளையம் திரு.கே.டி.மோகன்ராஜ், (இவர் பற்றி மேலும் விபரங்களை அறிய நீல நிறத்திலுள்ள பெயரை க்ளிக் செய்யவும்) போளியம்பட்டி திரு.குணசேகர், மச்சநாயக்கன்பாளையம் திரு.கணேசன் ஆகியோருடன் இணைந்து, கோவை மாவட்டத்தில் அனைத்து கிராமங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து, விடுதலைக்களம் அமைப்பின் கிளைகளைத்துவங்கி கொடியேற்றும் நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்திக்காட்டினார். அதன் பின்னர் 2008-ல் விடுதலைக்களம் சார்பில் பொள்ளாச்சியில் மிகப்பிரமாண்ட மாநாட்டை முன்னின்று சிறப்பாக நடத்திக் காட்டினார். இம்மாநாடு தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் பொள்ளாச்சி பகுதியில் நடைபெற்ற முதலும் கடைசியுமான மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு சளைத்துவிட்டவரல்ல திரு.குமரேசன் அவர்கள், மாவீரன் கட்டபொம்மனுக்கு கோவை மாவட்டத்தில் சிலையமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இளைய சமுதாயத்தினரிடமிருந்து குரல்கள் வரவே, அதனை செயல்படுத்திடும் பொருட்டு, தனது சொந்த வாகனத்தில் ஒருவருட காலம் பல்வேறு பகுதிகளுக்கு முக்கிய நிர்வாகிகளுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிதி திரட்டி, 2010-இல் கோவை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஈச்சனாரியில், அன்றைய மாநில அமைச்சர்களாக இருந்த பொங்கலூர் திரு.பழனிச்சாமி, திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் திரு.மு.கண்ணப்பன் ஆகியோர்களைக்கொண்டு பாரே வியக்கும் வண்ணம் கூட்டத்தை திரட்டி மாவீரனின் சிலை திறக்கப்பட்டது, கோவை மாவட்டத்தில் மாவீரனுக்கு அமைக்கப்பட்டுள்ள ஒரே சிலை என்ற சிறப்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியாக தன் அடுத்தடுத்த அதிரடிகளால் கோவை மாவட்டத்தில் சமுதாயத்தை துடிப்பாகவும், பரபரப்பாகவும், வைத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அரசியலில் ஆர்வம் ஏற்படவே 2010-இல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக 2011-இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் நல்லட்டிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் வேட்பாளராக களமிறங்கி சொற்ப வாக்குகளில் வெற்றிவாய்ப்பை இழந்தார். இந்த தோல்வியும் அவரின் வேகத்தை எவ்விதத்திலும் குறைத்துவிடவில்லை. தொடர்ந்து கட்சிப்பணிகளிலும் தீவிரம் காட்டியவர், கோவை மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். கட்சி நடத்தும் பல்வேறு போராட்டங்கள், மறியல்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு கட்சிக்கு செவ்வனே தொடர்ந்து பணியாற்றி வருகிறார். உள்ளாட்சி மன்றத்தேர்தலில் மக்கள் தோல்வியை பரிசளித்தாலும், அதை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டவர், அம்மக்களுக்கான சேவையில் முழு ஈடுபாட்டுடன் செய்து வந்தார். 2017-2018 ஆம் ஆண்டுகளில் வரலாறுகாணாத வறட்சியால் மக்கள் குடிநீருக்கு அல்லோகளப்பட்டபொழுது, தான் நிர்வாகித்து வரும் குமரேசன் அறக்கட்டளையின் சார்பாக, தன் சொந்த ஆழ்குழாய் கிணற்றிலிருந்து லாரிகள் மூலம் இலவசமாக குடிநீர் வழங்கினார். மேலும் குமரேசன் அறக்கட்டளை மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் சிதிலமடைந்து, உருக்கலைந்திருந்த பாஞ்சைக்கோட்டை மாதிரியை மீண்டும் உறுவாக்கி, ஆங்கிலேயர்களால் சூறையாடப்பட்டிருந்த கம்பளத்தார் சமுதாயத்திற்கு மீண்டும் முகவரிகொடுத்திட்ட திமுக தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களின் மறைவையொட்டி, அவருக்கு சமுதாயத்தின் நன்றியைத் தெரிவிக்கும் வகையில், குமரேசன் அறக்கட்டளையின் சார்பில் முத்தமிழ் அறிஞருக்கு சிலை அமைக்க தீர்மானித்தவர், கோவை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிலையை நிறுவும் பணியில் தீவிரமாக செயலாற்றி வருகிறார்.

2005-இல் சமுதாயப்பணியில் அடியெடுத்து வைத்து, பின் அது அரசியல் களமாக மாறியபொழுதிலும், அன்று தொடங்கி சுமார் 15 ஆண்டுகள் கழித்தும் அதேவேகத்தில் பயணிப்பது சாதாரண விசயமல்ல.அத்தகைய  ஆளுமைமிக்கவர்,கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் நல்லட்டிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் வேட்பாளராக தன் துணைவியார் திருமதி.கார்த்திகா குமரேசனை களமிறக்கி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே ஊராட்சியில் திரு.குமரேசன் அவர்களின் தாய் வழிப்பாட்டனார் திரு.சுப்பே நாயக்கர் அவர்கள் ஊராட்சி மன்றத் தலைவராக பணியாற்றிவர் என்பதால், அவரின் குடும்பத்திற்கு இப்பதவி ஒன்றும் புதிதல்ல. ஆனால் அரசியலில் வேகத்தைவிட விவேகமே நீடித்த பலனைத்தரவல்லது என்பது கடந்த கால வரலாறுகள் நமக்குச் சொல்லும் செய்தி என்பதை கருத்தில் இருத்திக்கொள்வது மிக முக்கியமானது. மிக இளம்வதில் பல்வேறு சாதனைகளுக்கும், பொறுப்புக்களுக்கும் சொந்தக்காரரான திரு.குமரேசன் அவர்கள், தன் சமுதாய நிலை, வலிமை, ஆதரவு, கள எதார்த்தம் இவற்றையெல்லாம் உள்வாங்கிக்கொண்டு, வேகத்தை குறைத்து, தலைவர் கலைஞர் போல் நிதானத்தையும், அரவணைப்பையும் கூட்டி, மக்களின் நெஞ்சங்களை வெல்லும் வகையிலும், கட்சித் தலைமையின் அன்பையும், ஆதரவையும் பெறும் வகையில் செயலாற்றி, அரசியலில் கம்பளத்தார்களின் வளர்ச்சியில் நிலவும் வறட்சியைப் போக்கி, சமுதாய மக்களின் ஏக்கங்களை பூர்த்தி செய்திட வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved