🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஊராட்சி மன்றத் தலைவர் - கமுதி.திரு. R.கந்தசாமி

திரு.R.கந்தசாமி அவர்கள் 14.03.1956-ல் இராமநாதபுரம் மாவட்டம், பெருநாழி அருகேயுள்ள திம்மநாதபுரம் கிராமத்தில் திரு.இராமசாமி நாயக்கர் – திருமதி.செல்லம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். தொடக்கப்பள்ளி வரை பயின்றுள்ளவர், தன் பெற்றோர்களுக்கு உதவியாக விவசாயப்பணிகளில் ஈடுபட்டார். இவருக்கு திருமணமாகி திருமதி.K.முத்துமாரி என்ற மனைவியும் K.பிரபு குமார்,K. சிவராம் காந்தி என்ற இரு மகன்களும் உள்ளனர்.


கல்வியறிவு குறைவு தான் என்றாலும், வறண்ட பூமியான இராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயம் வாழ்க்கைக்கு உதவாது என்று கணித்தவர், சுய தொழில் துவங்க வேண்டும் என்ற வேட்கையில் மளிகைக் கடை தொழிலில் ஈடுபட்டார். தன் கால்சட்டைப் பருவத்திலிருந்தே அரசியலில் பயணித்தவ,ர் சுமார் இருபது வருடங்கள் காங்கிரஸ் பேரியக்கத்தில் வட்டார இளைஞர் அணித்தலைவராகவும், வட்டார காங்கிரஸ் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். விவசாயத்தின் எதிர்காலத்தை கணித்தது போன்றே அரசியல் எதிர்காலத்தையும் கணித்தவர், 1984-ல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் மறைவுக்குப் பின்னர் காங்கிரசிலிருந்து விலகி திமுக வில் இணைந்தார். அன்று முதல் திம்மநாதபுரம் கிளைக்கழக செயலாளராகப் பதவியேற்று தீவிரமாகப் பணியாற்றி வந்தார். திமுக நடத்தும் பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு மூன்று முறை மதுரை சிறை உள்ளிட்ட பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளார். கட்சிப்பணிகளில் தீவிரமாக செயல்படுபவர், தற்பொழுது திமுகழகத்தின் திம்மநாதபுரம்  ஊராட்சிக்கழக செயலாளராகவும், மாவட்ட நெசவாளர் அணியின் துணை அமைப்பாளராகவும்  உள்ளார்.

அரசியலில் மிகநீண்ட நெடிய அனுபவமுடையவர், எவரையும் எதிர்க்கும் துணிச்சலைப் பெற்றவர். 1991-ல் திம்மநாதபுரம் கூட்டறவு சங்கத் தேர்தலில் போட்டியிட விரும்புகையில் சொந்த கட்சி முக்கியப் பிரமுகர்களும், எதிர்க்கட்சி முக்கியப் பிரமுகர்களும் கைகோர்த்து மிரட்டியபொழுதும் துணிச்சலுடன் களமிறங்கி போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார். அதிலிருந்தே தேர்தல் அரசியலில் ஆர்வம் கொண்டவர், அவ்வப்பொழுது அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். 1996-லிருந்து உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சிமன்றத் தலைவராக போட்டியிட பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். ஆனால் சமுதாய மக்கள் மற்றும் சமுதாயத் தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று போட்டியிலிருந்து விலகி சக-சமுதாய சொந்தங்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்க வழிவிட்டே வந்துள்ளார். 2001- ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மட்டும் ஊராட்சி மன்ற உறுப்பினரானவருக்கு, திம்மநாதபுரத்தின் ஊராட்சி மன்றத் துணைத்தலைவராகப் பணியாற்றும் வாய்ப்புகிட்டியது. இருந்தபோதிலும் திரு.கந்தசாமி அவர்களுக்கு ஊராட்சிமன்றத் தலைவராக வேண்டும் என்ற வேட்கை மட்டும் குறைந்தபாடில்லை. அதற்குப் பின்னரும் 2006 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட விரும்பியபொழுதும் சமுதாய ஒற்றுமைக்கு குந்தகம் வந்துவிடக்கூடாது என்ற வேண்டுகோளுக்கு மதிப்பளித்து போட்டியிலிருந்து விலகிக்கொண்டார்.

தனது வயது, அனுபவம் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, 2016-ல் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலிலும் தான் விட்டுக்கொடுக்கும் நிலைக்கு தள்ளப்படக்கூடாது என்பதில் கவனமாக இருந்தவர், இம்முறை தன்னை போட்டியின்றி தேர்ந்தெடுக்க முன்வராவிட்டாலும் களம்காணும் முயற்சியில்  முன்பிருந்தே தன்னை தயார் படுத்திக்கொண்டே வந்துள்ளார். 2016-ல் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் எந்த சமாதானத்திற்காகவும் காத்திராமல், மிகப்பிரமாண்டமான முறையில் வேட்புமனுவைத் தாக்கல் செய்து, எதிர்முனையில் போட்டியிட நினைப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தினார். துரதிஷ்டவசமாக கடைசி நாளில் தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில், மீண்டும் அவரின் ஆசைக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டது. ஆனால் எதற்கும் சளைத்தவரல்ல, தொடர்ந்து அந்த இலக்கை நோக்கியே களத்தில் பயணித்தவர், இந்த தேர்தலுக்கு முன் தன் சொந்தப்பணத்தில் 17க்கும் மேற்பட்டோருக்கு முதியோர் உதவித்தொகையை பெற்றுக் கொடுத்திருந்தார். இதுதவிர பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை அறிந்து பல்வேறு உதவிகளை செய்துவந்துள்ளார். மேலும் 800 க்கும் அதிகமான போலி ரேசன் கார்டுகளை ஒழிக்கவும், தொடக்கப்பள்ளியில் போதிய நிரந்தர ஆசிரியர்களை நியமிக்கவும் அதிகாரிகள் மற்றும் உள்ளூர் மாவட்ட அரசியல் தலைவர்கள் மட்டத்தில் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


கல்வி அறிவு அதிகமில்லை என்று தாழ்வுமனப்பான்மை கொள்ளாமல், மிக நீண்ட நெடிய அரசியல் அனுபவத்தின் மூலம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வந்துள்ளவர், 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திம்மநாதபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பதவியேற்ற ஒருசில மாதங்களிலேயே மேலும் 6 பேருக்கு முதியோர் உதவித்தொகை பெற்றுக்கொடுத்து மக்கள் சேவையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயல்பட்டு வருகிறார். மிகபின்தங்கிய பகுதியான இராமநாதபுரம் மாவட்டத்தில், மிகவும் அனுபவம் வாய்ந்த தலைவராகவும், ஊராட்சி மன்றத் தலைவராகவும் பெறுப்பேற்றுள்ள திரு.கந்தசாமி அவர்கள், தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பின் மூலம் அனைத்து தரப்பு மக்களுக்கும் சாதி,மத, இன,மொழி பாகுபாடின்றி செயலாற்றி தான் சார்ந்திருக்கும் கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்ப்பதுடன், மாவட்டத்திலுள்ள சமுதாயத் தலைவர்களையும், பல்வேறு அரசியல் கட்சிகளில் பயணிக்கும் சமுதாயத்தினரையும், புதிதாக பொறுப்பேற்றுள்ள உள்ளாட்சிப் பிரதிகளையும் ஒருங்கிணைத்து, சமுதாயத்திலுள்ள அடித்தட்டு மக்களின் மேம்பாட்டிற்கு உழைத்திட வேண்டுமாய் அன்புடன் வேண்டி, வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved