வளரும் நட்சத்திரம் - குளத்துப்பாளையம் - திரு.N.சீனிவாசன்
திரு.N.சீனிவாசன்.M.A., அவர்கள் 17.11.1967-இல் கோவை மாவட்டம், குளத்துப்பாளையம் கிராமத்தில் திரு.நாகப்ப நாயக்கர் – திருமதி.ரங்கம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழ்துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு திருமணமாகி திருமதி.S.சினேகலதா என்ற மனைவியும், S.பிரவீன் என்ற மகனும், S.நிவேதாஸ்ரீ என்ற மகளும் உள்ளனர்.
திரு.சீனிவாசன் அவர்களின் துணைவியார் திருமதி.சினேகலதா அவர்கள், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் கோவை மண்டல கண்காணிப்பாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.
1986-இல் திராவிட முன்னேற்றக்கழகத்தில் இணைந்து தன் அரசியல் பயணத்தை தொடங்கிய திரு.சீனிவாசன் அவர்கள், கிளைக்கழக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அது முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருபவர்,பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து கட்சியை வலிமையாக கட்டமைத்துள்ளார். கழகம் அறிவித்த பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டு பலமுறை சிறைசென்றுள்ளார். மேலும் கட்சியின் பொதுக்கூட்டங்கள், மாநாடுகளுகளுக்கு பெருந்திரளான தொண்டர்களை திரட்டி கலந்துகொள்ளும் திரு.சீனிவாசன் அவர்கள், 2005 முதல் 2012 வரை அரவக்குறிச்சி நகர அவைத்தலைவராக பணியாற்றியுள்ளார். தொடர்ந்து கட்சிப்பணிகளில் அர்ப்பணிப்புடன் தீவிரமாக செயலாற்றி வருபவர், சமீபத்தில் கோவை வடக்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
1996-இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் மூலமாக தேர்தல் களத்திற்கு அறிமுகமானவர் குளத்துப்பாளையம் பேரூராட்சி கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டு 2001 வரை பதவி வகித்து வந்தார். மேலும் ரியல் எஸ்டேட் துறையிலும் ஈடுபாடுகொண்டவர் S.S. பில்டர்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
அரசியல் பணிகளுக்கிடையே சமுதாய நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளும் திரு.சீனிவாசன் அவர்கள், ஈச்சனாரியில் மாவீரன் கட்டபொம்மன் சிலை நிறுவப்படும் வரை, ஆண்டுதோறும், மதுரை மாநாகரிலுள்ள மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதுதவிர சமுதாயப்பணிகள், கோவில் திருப்பணிகளில் ஈடுபாடு கொண்ட திரு.சீனிவாசன் அவர்கள், பல்வேறு தரப்பு மக்களுடன் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
அரசியல் மற்றும் சமுதாயப்பணிகளில் தீவிரமாக பணியாற்றிவரும் திரு.சீனிவாசன் அவர்கள் வரும் காலங்களில் பல பதவிகளையும், பொறுப்புகளையும் பெற்று, சார்ந்துள்ள கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.