ஊராட்சி மன்றத் தலைவர்-கமுதி. திரு. K.தங்கம். B.Sc.,
திரு.K.தங்கம் B.Sc, அவர்கள் 29.05.1973-இல் இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள இடையன்குளம் கிராமத்தில் திரு.M.கிருஷ்ணசாமி-திருமதி.இராஜம்மாள் தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். கமுதி, பசும்பொன் தேவர் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு திருமணமாகி திருமதி.T.விமலா என்ற மனைவியும், T.லலிதாம்பிகை என்ற மகளும் T.V.பிரனேஷ் என்ற மகனும் உள்ளனர்.
திரு.தங்கம் அவர்களின் தகப்பனார் திரு.M.கிருஷ்ணசாமி அவர்கள் கிராம முன்சீப் ஆகவும், பின்னர் கிராம நிர்வாக அதிகாரியாகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பின்புலம் திரு.தங்கம் அவர்களை அந்த காலகட்டத்தில் பட்டதாரியாக உயர்த்த பெரிதும் காரணமாக இருந்தது. ஏனெனில், மிக வறண்ட வானம் பார்த்த பூமியான இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்றுவரை கம்பளத்தார்களின் வாழ்க்கைத்தரமும், கல்வியறிவும் மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். அந்தவகையில் திரு.தங்கம் அவர்கள் அக்கிராமத்தில் மட்டுமல்ல, சுற்றுவட்டாரத்திலும், கம்பளத்தார்களில் மட்டுமல்ல, எல்லா சமுதாயத்தையும் சேர்த்தே முதல் பட்டதாரி என்பதைத்தாண்டி, திரு.தங்கம் அவர்களின் தந்தையார் திரு.கிருஷ்ணசாமி அவர்களே,அந்தக்கால பட்டதாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.
தனது கல்லூரி படிப்பை முடித்தவர் நேரடியாக திருப்பூரிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியில் அமர்ந்தவர், படிப்படியாக மேனேஜர் அந்தஸ்திற்கு உயர்ந்தார். 2001-ஆம் ஆண்டில் சோழா கிட்ஸ் வேர் என்ற நிறுவனத்தை தொடங்கி “ரிச் பார்ன்” (Rich Born) என்ற பிராண்ட் பெயரில் சுமார் 14 வருடங்கள் உள்நாட்டில் பல்வேறு மாநிலங்களில் வர்த்தகம் செய்து வந்தார்.
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தீவிர ரசிகரான திரு.தங்கம் அவர்கள், 2005-ஆம் ஆண்டு தே.மு.தி.க உதயமானபொழுது அக்கட்சியில் இணைந்து சாதாரண தொண்டராக அரசியலில் அடியெடுத்து வைத்தார். தீவிர அரசியல்வாதியாக இல்லாமல், கேப்டன் பிறந்தநாளில் ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்வது என்ற அளவில் மட்டுமே அரசியல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். 2014-ஆம் ஆண்டுகளில் இருந்து திருப்பூர் பனியன் தொழில்துறை கடும் வீழ்ச்சியை சந்தித்த பொழுது, 2015- ஆம் ஆண்டு அத்தொழிலிலிருந்து விடுவித்துக்கொண்டவர், மீண்டும் சொந்த கிராமம் திரும்பினார். அதிலிருந்து அக்கிராமத்தில் பல்வேறு பொதுநல சேவைகளில் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார்.
கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இடையங்குளம் ஊராட்சிமன்றத் தலைவர் வேட்பாளராகக் களமிறங்கி வெற்றி பெற்று ஊராட்சிமன்றத் தலைவராகப் பணியாற்றி வருகிறார். இராஜகம்பளத்தார் கணிசமாக வசிக்கும் பகுதிகளில் கமுதியும் ஒன்று. மிகவும் பின்தங்கிய பகுதியான இராமநாதபுரம் மாவட்டத்தில், மிகவும் பின்தங்கிய நிலையில் வாழும் கம்பளத்தார்களில், மிகுந்த அனுபவமும், வெளியுலகத் தொடர்பும், பட்டதாரியாகவும் உள்ளவர் திரு.தங்கம் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கு கிடைத்த இந்த பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்தி, சாதி,மத,மொழி,இன பேதமின்றி பணியாற்றி சமுதாயத்திற்கு பெருமை சேர்ப்பதுடன், கம்பளத்தார் சமுதாயத்தின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக அனைவரும் ஏற்கும் வகையில் சீரும் சிறப்புடன் செயல்பட்டு, அடித்தட்டு மக்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்த தன்னை அர்ப்பணிக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி, வாழ்த்துகிறோம்.