🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அரசியல் வானில் ஒளிரும் நட்சத்திரம் - பொள்ளாச்சி. திரு.B.காமராஜ்

திரு. B.காமராஜ் அவர்கள் 04.02.1964-ல் கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள மண்ணூர் கிராமத்தில் தெய்வத்திரு. சு.பொம்முராசு – தெய்வத்திருமதி. ராஜம்மாள் ஆகியோருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். மேல்நிலைப்பள்ளியுடன் கல்விக்கு விடைகொடுத்தவர், பெற்றோர்களுக்கு உதவியாக தீவிர விவசாயப்பணியில் ஈடுபட்டார். இவருக்கு திருமணமாகி திருமதி.K.ஜெயலட்சுமி என்ற மனைவியும் K.கிருத்திகா.B.E.,மற்றும் K.மோகன பிரியா B.Com என்ற இரு மகள்களும் உள்ளனர்.


மிகத்தீவிர திராவிட இயக்கவாதியாகவும், கோவை மாவட்டத்தில் கம்பளத்தார் சமுதாயத்தில் திமுக வின் முகமுமாகவும் இருந்தவர் இவருடைய தந்தையார் சு.பொம்முராசு அவர்கள். ஆதலால் கால்சட்டைப் பருவத்திலேயே கட்சிப்பணிகளில் களமிறங்கியவர். திராவிட முன்னேற்றக்கழகம் மிகவும் வலுக்குறைந்த பகுதிகளில் ஒன்றாக இருந்த பொள்ளாச்சியின் மேற்குப்பகுதிகளில் இருந்த விரல்விட்டு எண்ணக்கூடிய முதன்மையானவர்களில் முன்னனிக் குடும்பத்தைச் சேர்ந்தவர். திமுக வில் இரத்தமும், சதையுமாக வளர்ந்தவர் என்றால் மிகையல்ல. திராவிட முன்னேற்றக் கழகத்தின் போராட்ட காலமாக இருந்த 1970-80 களில், சிறைநிரப்பும் அனைத்து போராட்டங்களிலும் தந்தையார் சிறைக்கொட்டடிகளில் கழித்ததால், மேல்நிலைப்பள்ளிக் கல்விக்குப் பின் விவசாயப்பணிகளுக்கு செல்லவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டவர். 1970 களில் திமுக வில் போஸ்டர் ஒட்டியதிலிருந்து அரசியல் பயணத்தை துவக்கியவர், கிளைக்கழக இளைஞரணிச் செயலாளராக முதல் பொறுப்பை ஏற்றார்.

திராவிட இயக்கப்போர்வாள் திரு.வைகோ அவர்களின் பாராளுமன்றப்பேச்சிலும், மேடைப்பேச்சிலும் கவரப்பட்ட லட்சக்கணக்காண இளைஞர்களில் இவரும் ஒருவர். 1993-ல் திரு.வைகோ அவர்கள் மதிமுக வைத் துவங்கியபொழுது அதில் இணைந்து கிளைக்கழக செயலாளராக சிலகாலம் பணியாற்றியுள்ளார். 1996-ல் மீண்டும் தாய்க்கழகம் திரும்பியவர், கிளைக்கழக செயலாளராக பொறுப்பேற்று இன்றுவரை அப்பதவியில் தொடர்கிறார். இது தவிர மாவட்ட பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சியின் அனைத்துக் பொதுக்கூட்டங்கள், மறியல், போராட்டங்கள் அனைத்திலும் கலந்து கொள்பவர், பலமுறை சிறை சென்றுள்ளார். சட்டமன்ற-நாடாளுமன்றத் தேர்தல் பணிப்பொறுப்பாளராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.


1996-ல் நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தலில் தனது துணைவியார் திருமதி.ஜெயலட்சுமி காமராஜ் அவர்களை மண்ணூர் ஊராட்சிமன்றத் தலைவர் வேட்பாளராக களமிறக்கி வெற்றிவாகை சூடினார். தனது துணைவியார் ஊராட்சிமன்றத் தலைவராக பொறுப்பு வகித்த காலத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தினார். தெருக்கள் அனைத்தும் காங்க்ரீட் சாலைகள் அமைக்கப்பட்டன, தெருவிளக்குகள், பொதுக்கழிப்பிடம், குடிநீர் குழாய்கள், ஏழைகளுக்கு இலவச வீடுகள் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்திட உறுதுணையாக இருந்தார். மேலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் சுமார் 120-க்கும் மேற்பட்ட வீடுகளற்ற ஏழை – எளியோருக்காக புதிதாக நிலம் எடுக்கப்பட்டு அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.  கோவை மாவட்டத்தில் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதும், மிக அதிகமாக பட்டா வழங்கப்பட்டதும் இந்த ஊராட்சியில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் தான் மண்ணூர் கிராமம் அப்பகுதிகளில் தனிச்சிறப்பு வாய்ந்த கிராமமாகவும், இன்று நகர்ப்புறத்திற்கு இணையாக அதிகப்படியாக விரும்பப்படும் கிராமமாகவும், அனைத்து சமுதாயத்தினரையும் உள்ளடக்கிய கிரமமாக உயர்ந்துள்ளது என்றால் மிகையல்ல.

மீண்டும் 2001- ஆம் ஆண்டு அஇஅதிமுக ஆட்சிப்பொறுப்பில் இருந்து நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் மீண்டும் தன் துணைவியாரை களமிறக்கி வெற்றிவாகை சூடினார். அப்பகுதியில் திமுக ஆதரவு வேட்பாளர்கள் வென்ற ஒருசில ஊராட்சி மன்றங்களில் இதுவும் ஒன்று. இம்முறை கடும் வறட்சியால் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை சந்தித்த வேளையில் பத்திற்கும் மேற்பட்ட போர்வெல்களையும், உயர்மட்ட டேங்க்குகளையும் கட்டி மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கினார். அங்கன்வாடிகள், சத்துணவுக்கூடங்கள், பஞ்சாயத்து அலுவலகம், மயானக்கூறை, ரேசன் கடை என சுமார் 5 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார்.

2006-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தலில் போட்டியில் சில மாற்றங்களை பரிசோதிக்க விரும்பியவர், ஊராட்சி மன்றத்திலிருந்து அடுத்த நிலைக்கு செல்லத் திட்டமிட்டவர், 5000 வாக்குகளைக் கொண்ட ஒன்றியக் குழு உறுப்பினர் தேர்தலில் தானே களம் கண்டார். அஇஅதிமுக- கோட்டையாக இன்றுவரை விளங்கும் இப்பகுதியில் துணிந்து திமுக வேட்பாளராக களம் கண்டவர் சொற்ப வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார். மீண்டும் 2011 மற்றும் 2019-ஆம் ஆண்டு அஇஅதிமுக ஆட்சியில் நடைபெற்ற உள்ளாட்சி மன்றத்தேர்தல்களில் முறையே ஊராட்சிமன்றத் தலைவர் வேட்பாளராகவும், மன்ற உறுப்பினர் தேர்தல்களிலும் கட்சியின் கட்டளையையும், கட்சியினர் வேண்டுகோளையும் ஏற்று குடும்ப உறவுகளை எதிர்த்து போட்டியிட வேண்டிய சூழலிலும் களமிறங்கி சொற்ப வாக்குகளில் வெற்றிவாய்ப்பை இழந்தார்.


கிளைக் கழக மற்றும் ஊராட்சிக் கழக செயலாளராகவும், மாவட்ட பிரதிநிதியாகவும் திமுகவில் பொறுப்பு வகித்து திரு.காமராஜ் அவர்கள், தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்ட பின் 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஊராட்சிமன்றத் தேர்தலில் கழகத்தின் வேட்பாளராக தாழ்த்தப்பட்ட சமுதாய வேட்பாளரை களமிறக்கி வெற்றி பெற வைத்தார். மேலும் இவ்வூராட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களை வெற்றி பெறச் செய்து திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வலுசேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகநீண்ட நெடிய அரசியல் பாரம்பரியமும், அனுபவமுள்ள திரு.காமராஜ் அவர்கள், குடும்ப உறவுகளைத் தாண்டி கட்சியின் வளர்ச்சியில் அக்கரையுடையவராக பல்வேறு சந்தர்ப்பங்களில் நிறுபித்துள்ளார். எனவே அவரின் திறமைகளை குறுகிய வட்டத்தில் சுறுக்கிக்கொள்ளாமல், மாவட்ட அந்தஸ்தில் பொறுப்புகளைப் பெற்று சமுதாய உயர்விற்கும், இளைஞர்களுக்கும் வழிகாட்டி  உதவிட வேண்டுமாய் அன்புடன் வேண்டி, வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved