ஒன்றியக்குழு உறுப்பினர் - பவானி. திருமதி.ஜானகி ஜெயப்பிரகாஷ்
திருமதி.ஜானகி ஜெயப்பிரகாஷ் அவர்கள் 05.06.1977-ல் ஈரோடு மாவட்டம், பவானி அருகேயுள்ள கல்வாநாயக்கனூர் கிராமத்தில் திரு.முத்துசாமி- திருமதி.சென்னம்மாள் தம்பதினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகளாகப் பிறந்தார். உயர்நிலைக் கல்வி வரை பயின்றுள்ளார். தன் சொந்த கிராமத்திலிருந்து 20 மைல் தொலைவிலுள்ள உப்புக்கரைப்பள்ளம் திரு.K.ஜெயப்பிரகாஷ் அவர்களை கரம்பற்றியுள்ள திருமதி.ஜானகி தம்பதினருக்கு Dr.J.விஜயகாண்டீபன் B.D.S என்ற மகனும் J.புஷ்பலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.
சுற்றுவட்டாரத்தில் பெயர்பெற்ற பாரம்பரியக் குடும்பத்திற்கு மருமகளாக வந்தவருக்கு, தன் மாமனார் திரு.குப்புசாமி நாயக்கர் அவர்கள் அஇஅதிமுகழகத்தில், பவானி ஒன்றியத் தலைவராக இருந்தபடியால் அரசியல் காற்றை அன்றிலிருந்தே சுவாசிக்க வேண்டிய சூழலுகுள்ளானார். அதற்கேற்றாற்போல் தன் கணவர் திரு.ஜெயப்பிரகாஷ் அவர்களுக்கும் அஇஅதிமுக-வில் கிளைக்கழக செயலாளராக பொறுப்பேற்க, அரசியல் திருமதி.ஜானகி அவர்களின் வாழ்வில் இரண்டரக் கலந்துவிட்டது என்றே சொல்லவேண்டும். கம்பளத்தார் சமுதாயத்தில் பொதுவாழ்வில் உள்ள கணவர்களுக்கு வாக்கப்பட்ட பெண்களுக்கு உள்ள தலையாய பிரச்சினையாகவும், கடமையாகவும் இருப்பது, குடும்பத்தில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதும், குழந்தைகளின் கல்வியும் தான். ஏனெனில், இச்சமுதாயத்தில் பொழுது விடிந்ததும் அரசியலுக்கு கிளம்பும் எந்த ஆண்மகனும், இரவில் திரும்பும்பொழுது பத்துப்பைசா கூட சம்பாதித்து திரும்புபவர்கள் அல்ல. அரசியலை சேவை மனப்பான்மையோடு இன்றும் பார்க்கும் சமுதாயமொன்று உண்டென்றால் அதில் கம்பளத்தார் சமுதாயம் முதன்மையானதாகவே இருக்கும். குடும்பத்திற்கு சம்பாதிக்காவிட்டாலும் பரவாயில்லை, குறைந்தபட்சம் தங்கள் சுயதேவைக்கு கூட அரசியலில் பொருளீட்டத் தெரியாதவர்கள் நம் ஆண்மக்கள் என்பது எதார்த்தமானது. இப்படியான நெருக்கடிக்கு நமது சமுதாய பெண்கள் தள்ளப்படுவது தமிழகமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் உண்மை. இந்த நெருக்கடியெல்லாம் திருமதி.ஜானகி ஜெயப்பிரகாஷ் அவர்களை மட்டும் விட்டு வைத்திருக்குமா என்ன? அதை அவரிடம் கேட்காமலே நம் சமுதாயத்தினர் அனைவரும் யூகித்திக்கொள்ள முடியும்.
அப்படியான நெருக்கடிகளையெல்லாம் திறமையாக கையாண்டு, விவசாயப்பணிகளில் கவனம் செலுத்தி குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்து, தன் குழந்தைகளுக்கு சிறப்பான கல்வியை வழங்கி, இன்று தன் மகனை பல் மருத்துவராக்கி வெற்றிகரமான குடும்பபெண்ணாக சமுதாயத்தில் உயர்ந்து நிற்கிறார் திருமதி.ஜானகி ஜெயப்பிரகாஷ் அவர்கள். விவசாயம், குடும்பம், குழந்தைகள், அவர்களின் கல்வி என்ற அளவில் மட்டுமே இவரது வாழ்க்கை சென்றுவிடவில்லை. அரசியலும் இவரை அவ்வப்பொழுது பரிசோதித்துப் பார்க்கத் தவறவில்லை. தன் கணவரின் குடும்ப வாழ்க்கைக்கு உற்ற துணைவராக இருந்தவர், அவரின் அரசியல் வாழ்க்கைக்கும் கைகொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சியாக இருந்து, ஆளும்கட்சியின் அசுர பலத்துடன் மோதவேண்டிய சூழலில், பவானி ஒன்றியம், 16-ஆவது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு, அஇஅதிமுக சார்பில் களம் கண்டு, ஆளும்கட்சிக்கு கடும் சவாலாக விளங்கினார். கடும்போட்டியில் நூலிழைலையில் வெற்றி வாய்ப்பை இழந்தவர், தான் சாதாரணமாக அசைந்துவிடும் பெண் அல்ல என்று ஊருக்கு உணர்த்தினார்.
அதற்குப்பின் திருமதி.ஜானகி ஜெயப்பிரகாஷ் அரசியல் முகமாகவும் மாறினார். ஆலத்தூர் ஊராட்சிக் கழகத்தின் மேலவைப் பிரதியாக நியமிக்கப்பட்டார். அப்பொறுப்பில் தொடர்ந்து நீடிப்பவர், கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தலில் மீண்டும் பவானி ஒன்றியம் 16-வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு அஇ அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிக்கனியைப் பறித்தார் திருமதி.ஜானகி ஜெயப்பிரகாஷ் அவர்கள்.
சிறந்த குடும்பத்தலைவியாக, குழந்தைகளின் வழிகாட்டியாக திகழும் திருமதி.ஜானகி ஜெயப்பிரகாஷ் அவர்கள், புதிதாக பொறுப்பேற்றிருக்கும் பதவியிலும் தன் ஆளுமையை நிலைநிறுத்துவார் என்பதில் ஐயமேதுமில்லை. இதுவரை குடும்பத்திற்கு பெருமை சேர்த்தவர், சாதி, மத, மொழி, இனப்பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்காகவும் பணியாற்றி அவர் சார்ந்துள்ள கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி, வாழ்த்துகிறோம்.