🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அரசியல் வானில் ஒளிரும் நட்சத்திரம் -ஊத்துக்குளி.திரு.P.சங்கர்சாமி

திரு.P.சங்கர்சாமி அவர்கள் 15.10.1967-ல் திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குழி அருகேயுள்ள அருகம்பாளையம் கிராமத்தில் திரு.பெரிய மாரநாயக்கர் திருமதி.மல்லம்மாள் தம்பதியினருக்கு  விவசாயக் குடும்பத்தில் மகனாகப்பிறந்தார். தொடக்கப்பள்ளிவரையே பயின்றுள்ளவர் பெற்றோர்களுக்கு ஆதரவாக விவசாயப்பணிகளில் ஈடுபட்டார். இவருக்கு திருமணமாகி திருமதி.S.ப்ரியா (இவரைப்பற்றி மேலும் விபரங்களுக்கு நீலநிற எழுத்தின் மீது விரல் வைக்கவும்) என்ற மனைவியும் S.கௌதரன் மற்றும் S.மோகன்ராஜ் என்ற இரு மகன்களும் உள்ளனர்.


தொழில் வளர்ச்சியின் காரணமாக சாயப்பட்டரைகளின் பெருக்கத்தால், நிலத்தடி நீர் மாசுபடிந்து, விவசாயம் முற்றிலும் பொய்த்துப்போன நிலையில், சுய தொழிலில் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார் திரு.சங்கர்சாமி அவர்கள். எனவே விவசாயிகளிடம் பால்கொள்முதல் செய்து வெண்ணெய் தயாரித்து, வெளியூர்களுக்கு விநியோகம் செய்யும் தொழிலில் ஈடுபட்டார். இங்கு தயாரிக்கப்படும் “ஊத்துக்குளி வெண்ணெய்” தேசிய அளவில் புகழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் சரக்குகளை ஏற்றி செல்லும் மினிவேன் இயக்கும் தொழிலில் ஈடுபடத்தொடங்கினார். 1995-வாக்கில் புகழ்பெற்ற L&T நிறுவனம் ஈரோடு-பாலக்காடு இடையே தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது. அது அவரது வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தைத் தந்தது. தன்னுடைய கல்வியைப்பற்றி கவலப்படாமல் L&T- நிறுவனத்திற்கு தன்னுடைய வாகனத்தை வாடகைக்கு இயக்க சென்றவருக்கு, அவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்நிறுவனத்திற்கு கூடுதலாக  வாகனத்தேவைகள் அதிகரிக்க, திரு.சங்கர்சாமி தன் கல்வித்தகுதி குறித்தெல்லாம் தாழ்வுமனப்பான்மை கொள்ளாமல், துணிந்து களமிறங்கினார். “சங்கர் டிரான்ஸ்போர்ட்” என்ற நிறுவனத்தை தொடங்கி, L&T நிறுவனத்திற்கு தேவையான லாரி,கார்,வேன், மினி வேன் போன்ற எல்லா வகனங்களையும் ஒப்பந்த அடிப்படையில் இயக்கி வந்தார். 1995 முதல் 2005 வரை தொழிலில் கொடிகட்டிப் பறந்தார் என்று சொல்லுமளவிற்கு சிறப்பாக நிறுவனத்தை வந்தார். அது தவிர கேரளா,ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்து பழைய மோட்டார் வாகனங்களை வாங்கிவந்து புதிப்பித்து மறு விற்பனை செய்யும் தொழிலும் ஈடுபட்டு வந்தார்.

2005-க்குப் பின் தன் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளும், வழக்குகளும், சுற்றிச்சுழற்றியடிக்க, அதை எதிர்கொள்வதில் மிகுந்த சிரமத்திற்குள்ளானவர், தான் வாழ்க்கையில் சம்பாதித்த அனைத்தையும் இழந்து நிற்கதியாய் தெருவில் நின்றார். பூர்வீக நிலபுலன்களையெல்லாம் இழந்து, தன்னுடைய இரு குழந்தைகளை மேற்கொண்டு பள்ளிக்கு அனுப்பமுடியாத துரதிஷ்ட நிலைக்கு தள்ளப்பட்டார். அப்பொழுது அவரின் மூத்த மகன் கௌதரன் மாநில அளவிலான கிரிக்கெட் அணிக்கு தேர்ச்சி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தன் பிரிய மகனுக்கு பத்தாம் வகுப்பிற்கும் மேல் கல்விகூட வழங்கமுடியாத நிலையில் இருந்தவருக்கு, கிரிக்கெட் பயிற்சிக்காகும் செலவிற்கு எப்படி ஈடுகொடுக்க முடியும்? இதனால் நம் சமுதாயம் பெற்றிருக்க வேண்டிய ஒரு கிரிக்கெட் வீரரை இழந்தது பேரிழப்பு என்றால் மிகையல்ல.


தனக்கு விபரம் தெரிந்த காலத்திலிருந்தே பொதுவாழ்வில் ஈடுபட்டு வருவதாக சொல்லும் திரு.சங்கர்சாமி அவர்கள், அக்கிராமத்தினரின் ஆபத்பாந்தவனாக உள்ளார். கல்யாணத்திலிருந்து கருமாதி வரை, மருத்துவமனை, திருவிழா, பொதுக்காரியங்கள் என எதற்கு வாகனங்கள் தேவைப்பட்டாலும் கிராமத்தினர் முதலில் தட்டும் கதவு திரு.சங்கர் சாமி வீட்டுக் கதவுதான் என்றால் மிகையல்ல. வறுமை வாட்டிய போதிலும், நேர்மையைக் ஒருபோதும் கைவிடாதவர். தன் அரசியல் பயணத்தை திமுக வில் இணைந்து கிளைக்கழக செயலாளராக பணியாற்றிவர், 1993-ல் திரு,வைகோ அவர்கள் மதிமுக வைத் துவங்கிய பொழுது அதில் இணைந்து கிளைக்கழக செயலாளராகப் பணியாற்றினார். 1996-ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஊத்துக்குளி ஒன்றியம் 12 ஆவது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தன் தேர்தல் அரசியலில் களம் புகுந்தார். தொகுதி மக்கள் தன்னை வந்து சந்திப்பதையும் விரும்பமாட்டார், தானும் தொகுதிக்குள் சென்று மக்கள் குறைகளையும் கேட்டிராத வித்தியாசமான அரசியல் வாதியான திரு.சங்கர்சாமி அவர்கள், மக்கள் தங்கள் தேவையை போனில் மட்டும் கூறினால் போதும், கரியம் செய்து முடிக்கப்படும் என்ற நம்பிக்கையை மக்கள் மனங்களில் ஏற்படுத்தியுள்ளார். தான் வளமாக இருந்த காலத்தில் மக்களையும் வளமாக பார்த்துக்கொண்டவர், மீண்டும் 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தலில், அதே வார்டில் போட்டியிட்டு ஒன்றியக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்கள் சேவையில் அன்று முதல் இன்றுவரை ஒரே பாணியில் பயணிப்பவர், இம்முறையும் தன்னுடைய பணிகளை தொய்வின்றி செய்தார். ஆனால் அதற்கு அடுத்து வந்த தேர்தல் அவருக்கு வேறு அனுபவத்தைத் தந்தது. 2006 –ஆம் ஆண்டு தேர்தலின் போது கோடிக்கணகாண மொத்த சொத்தையும் இழந்து தடுமாறிக்கொண்டிருந்த பொழுது, தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்ற முடிவுக்கு வந்தார். ஆனால், மக்கள் ஏற்கமறுத்து வேட்புமனு தாக்கலிலிருந்து, தேர்தல் பிரச்சார செலவுவரை, அனைத்து செலவுகளையும் தாங்களே ஏற்று, தங்ககளுக்காக இதுகாரம் உழைத்திட்ட சேவகனின் வெற்றிக்காக தாங்கள் உழைத்தனர். எதிர்தரப்பு டெபாசிட் இழக்கும் வகையில் அபார வெற்றி பெற்று சாதனை படைத்தார்.

பொதுநல சேவையில் ஒருபோதும் சோடைபோகாதவர், மறுபுறம் தன் குடும்பத்தை மீட்கவும் போராடிக்கொண்டிருந்தார். APS என்ற பெயரில் மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி செய்து பல்வேறு பகுதிகளிலும் விற்பனை செய்வதில் குடும்பமாக, முழு வீச்சில் ஈடுபட்டு ஒரளவு நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். 2016-ல் பதவிகாலம் முடிவுற்ற நிலையிலும் தன்னை நாடிவரும் மக்களுக்கு உதவிசெய்து கொண்டுவருபவர், ஆதலால் பொதுமக்களுக்கும் இவருக்குமான இடைவெளி என்பதே இல்லாமல் மக்களின் மனங்களில் குடிகொண்டுள்ளார்.


2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தன் துணைவியார் திருமதி.ப்ரியா சங்கர்சாமி  (இவரைப்பற்றி மேலும் விபரங்களுக்கு நீலநிற எழுத்தின் மீது விரல் வைக்கவும்) அவர்களை அணைப்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் வேட்பாளராக களமிறக்கி வெற்றிவாகை சூடியுள்ளார். மக்களின் மனங்களை வென்றதால் குடும்பம் வீழ்ந்தபொழுதும் அரசியலில் வீழாமல் பாதுகாத்துக்கொண்டார் திரு.சங்கர்சாமி அவர்கள். வாழ்க்கையின் விளிம்பு நிலைக்குச் சென்ற தன் குடும்பத்தை மீட்டு நிலைநிறுத்தியவர், வீழ்ந்து கிடக்கும் சமுதாயத்தையும் நிலைநிறுத்த, தன்பொதுவாழ்வுத்தளத்தை விரிவுபடுத்தி, தன் பெயரையும், புகழையும் சமுதாய மேன்மைக்கும் பயன்படுத்த வேண்டுமாய் அன்புடன் வேண்டி, வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved