ஊராட்சி மன்றத் தலைவர் - விருதுநகர். திருமதி.திலகர் ஜானகி
திருமதி.R.திலகர் ஜானகி, அவர்கள் 11.11.1969-ல் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள போடம்பட்டி கிராமத்தில் திரு.சுப்பையா நாயக்கர்- திருமதி.சுப்பம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் இரண்டாவது மகளாகப் பிறந்தார். நடுநிலைப் பள்ளி வரை கல்வி பயின்றுள்ள இவருக்கு, ஒரு சகோதரனும், ஒரு சகோதரியும் உள்ளனர். அதே கிராமத்தைச் சேர்ந்த தன் தாய்மாமன் மகனான திரு.M.இராமர் அவர்களை கரம் பற்றியுள்ள இத்தம்பதியினருக்கு R.ரதீஷ் கண்ணன் என்ற ஒரே மகன் உள்ளார்.
இராஜ கம்பளத்தார் சமுதாயத்தில் கட்சி அரசியல் பொதுவாழ்க்கையைத் தாண்டி, நேரடியாக சமூகசேவையில் ஈடுபடும் ஆண்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஒன்று கட்சியில் பதவி அல்லது ஊராட்சி நிர்வாகத்தில் ஒரு பதவி, இதுதான் கம்பளத்து ஆண் மக்களின் உட்சபட்ச அரசியல். இப்படிப்பட்ட சமுதாயத்திலிருந்து, ஒரு பெண், அதுவும் அதிகம் கல்வி கற்றிராத ஒரு பெண், அரசியல், பொருளாதார பின்புலம் ஏதுமற்ற ஒரு சாதாரண குடும்பப்பெண், சமூக சேவையில் களமிறங்கி, இன்று ஊராட்சி மன்றத் தலைவராக உயர்ந்து நிற்கின்றார் என்றால், தலைமுறை தலைமுறையாக அரசியல் செய்து, அதிக பட்சம் பஞ்சாயத்து தலைவரளவிலும், ஒன்றியச் செயலாளரளவிலும் தங்களை சுருக்கிக்கொண்ட பெருமக்கள், கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம்.
திருமதி.திலகர் ஜானகி அவர்களின் பொதுவாழ்க்கைப் பயணம் மகளிர் சுயஉதவிக் குழுவிலிருந்து துவங்குகிறது. 2000-ஆவது ஆண்டில் மகளிர் சுய உதவிக்குழுவில் ஊக்குநராக இணைகின்றவர், 2001-ஆம் ஆண்டில் ஊராட்சியளவிலான கூட்டமைப்பில் செயலாளராக நியமிக்கப்பட்டார். தன் சொந்த கிராமத்தில் 11 சுய உதவிக்குழுக்களை உருவாக்கி , இக்குழுவிலுள்ள பெண்களுக்கு கஸ்தூரிபா மகிளா மண்டல் என்ற தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், மானியத்துடன் கடனுதவியும், பெண்களின் சுயமேம்பாட்டிற்காக கணிணி பயிற்சி, தையல் பயிற்சி, தீப்பெட்டி தொழிற்பயிற்சி மற்றும் கூடை முடைதல் பயிற்சிகளை வழங்கினார். சுய உதவிக்குழுக்கள் மூலம் பெண்களுக்கு மட்டுமே தன் சேவையை வழங்கிவிடவில்லை, இளைஞர்களுக்கு அதுவும் ஊக்கத்தொகையுடன் இலவச ஓட்டுநர் பயிற்சி அளித்து, அவர்களுக்கு ஓட்டுநர் உரிமமும் இலவசமாகப் பெற்றுக்கொடுத்தார்.
மகளிர் சுயஉதவிக்குழு மூலம் செய்ததெல்லாம் ஒரு சாதனையா என்று ஆண் சமூகம் அசால்டாக கடந்து போகும் என்பது நமக்குத் தெரியாதது அல்லவே. அவருடைய சேவை அத்துடன் நின்றுவிடவில்லை. அவரின் அக்கரை பொதுச்சமூகத்தின் மீதும் இருந்தது. ஆம், தங்கள் கிராமத்து அருகிலுள்ள மதுபானக் கடை, பள்ளி செல்லும் வழியில் இருப்பதால், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதாகவும், மாணவர்களின் கவனம் திசைமாறிப்போக வாய்ப்புள்ளதை மாவட்ட ஆட்சிரளவில் இப்பிரச்சினையை கொண்டு சென்று மதுக்கடையை அகற்றினார். ஆளும்,ஆண்ட கட்சிகளே தேர்தலில் வெல்வதற்கு மதுக்கடைகளின் துணையைத் தேடும்பொழுது, இவர் மதுக்கடைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கிறார்.
இத்துடன் மட்டும் இவர் பணி நின்றுவிடவில்லை, கிராம சுகாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, இக்கூட்டமைப்பின் மூலம் தனிநபர் கழிப்பிடம் அமைத்துத்தரக்கோரி அரசிடம் வலியுறுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதுதவிர டெங்கு ஒழிப்பு பணியிலும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டது இவரின் தலைமையில் செயல்படும் கூட்டமைப்பு.
இதுவரை நாம் கேட்ட வரையில் வெற்றி பெற்றவர்களும் சரி, தோல்வி அடைந்தவர்களும் சரி, சராசரி சமுதாய வாக்காளன் மீது தங்கள் வருத்தங்களை வெளிப்படுத்தியதையே கேட்டுவந்தோம். ஆனால் அவர்களுக்கெல்லாம் தெரியாத இரகசியம் இப்பெண்மணிக்கு தெரிந்துள்ளது. ஒரு அரசியல்வாதிக்கு சாமானியனின் நாடிபிடித்துப்பார்க்கத் தெரியும் சாணக்கியத்தனம் தெரிந்திருக்க வேண்டும். ஒன்று தான் போட்டியிடும் முன், தனக்கான களத்தை தயார் செய்திருக்க வேண்டும் அல்லது களத்திற்கு ஏற்றாற்போல் தன்னை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். மற்றொன்று தனக்கு சரியான வாய்ப்பு வரும்வரை காத்திருக்கவேண்டும். இந்த அடிப்படை புரிதலின்றி களம் காணுகின்றவர்களே, சமுதாயத்திலுள்ள சாமானிய வாக்காளன் மேல் குற்றம் சுமத்துகின்றனர் என்ற உண்மையை அனைவரும் பரிசீலிக்கத்தான் வேண்டும்.
சுயஉதவிக்குழு மூலம் பொதுவாழ்வில் நுழைந்தவர் ஏறக்குறைய 20 ஆண்டுகள் தொடர்ச்சியாக பயணித்து, மக்களின் மனங்களை வென்றார். தன் இருபதாண்டுகால சேவையை பரிசோதித்துப்பார்க்க விரும்பினார் போலும்? 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் போடம்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் வேட்பாளராக களமிறங்கி மக்களின் போராதரவுடன் வெற்றி வாகை சூடினார். தமிழகத்தில் வெற்றி பெற்றுள்ள மகளிர் தலைவர்களில் வித்தியாசமானவராக, தன் சுய உழைப்பின் மூலம் வெற்றிவாகை சூடி தனித்துவமாக விளங்குகிறார் திருமதி.திலகர் ஜானகி அவர்கள். இன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மகளிர் தலைவர்கள் அனைவருக்கும் இந்த சந்தர்ப்பமும், வாய்ப்பும், தேவையும் இல்லாமல் போனால்கூட, அரசியல் களத்தை எதிர்கொள்ள நாம் எப்படி தயாராக வேண்டும் என்பதை திருமதி. திலகர் ஜானகி அவர்களின் பொதுவாழ்க்கை உணர்த்தும். இதைப்படிப்பிணையாகக் கொண்டு தாழ்வுமனப்பான்மை கொள்ளாமல், நம் மகளிர் தலைவர்கள் தங்கள் பொறுப்புகளில் திறம்பட செயல்பட்டு, நம் சமுதாய வளர்ச்சிக்கு மகத்தான பங்காற்றிட வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.