அரசியல் வானில் ஒளிரும் நட்சத்திரம் - வைப்பார். திரு.S.இராமர்
திரு.S.இராமர் அவர்கள் 10.05.1971-ல் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகேயுள்ள வைப்பார் கிராமத்தில் திரு.சன்னாசி நாயக்கர்-திருமதி.மல்லம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார்.தொடக்க கல்வி மட்டுமே பயின்ற நிலையில் தீவிர விவசாயப்பணிக்கு திரும்பினார். இவருக்கு திருமணமாகி திருமதி.R.ஜக்கம்மாள்(இவரைப்பற்றி மேலும் விபரங்களுக்கு நீலநிற எழுத்தின் மீது விரல் வைக்கவும்)என்ற மனைவியும் R.மகேந்திரகுமார், R.இராஜேந்திர கார்திக்குமார் மற்றும், R.சதீஸ்குமார் என்ற மூன்று மகன்களும் உள்ளனர்.
வானம் பார்த்த பூமியாக விவசாயம் இருப்பதால், படிப்பறிவும் பெரிதாக இல்லாத நிலையில் அப்பகுதி சார்ந்த தொழிலை தேர்ந்தெடுத்து சுயதொழில் செய்ய விரும்பினார். அதனடிப்படையில் வெள்ளாடுகளை கொள்முதல் செய்து பிற மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் விற்பனை செய்துவருகிறார். இதுதவிர சொந்தமாக கறிக்கடையும் வைத்து நடத்தி வருகிறார். கறிக்கடை வேலை மதியத்துடன் முடிந்துவிடும், மாலை வேலைகளில் ஆடுகளை வாங்குபவர், எப்படியும் வெளியூர்களுக்கு சென்றாக வேண்டும். அப்படியான சூழலில் எல்லா நேரங்களிலும் வியாபாரம் நடந்துவிடாது. சில நேரங்களில் நெடுதூரப்பயனங்கள் கூட வீணாகிப்போகிவிடும். அந்த நேர விரயத்தையும், பொருளாதார இழப்பையும் சரிக்கட்ட விரும்பியவர், அத்தொழிலுடன் கூடுதலாக மரவியாபாரத்திலும் ஈடுபட்டார்.
ஆனால் இவையெல்லாம் இவரின் அரசியல் தாகத்திற்கு தடையாக இருக்கவில்லை. ஆரம்பம் முதலே கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களின் ரசிகர் மன்றத்தில் வைப்பார் பகுதியின் அவைத்தலைவராக இருந்து பொதுப்பணிகளில் ஈடுபட்டு வந்தார். பின்னர் கேப்டன் அவர்கள் 2005-ஆம் ஆண்டு தேமுதிக வைத் துவங்கிய பொழுது திரு.இராமர் அவர்களும் தீவிர அரசியலில் காலடி எடுத்துவைத்தார். அப்பொழுது திரு.ராமர் அவர்கள் தேமுதிகவில் விளாத்திக்குளம் ஒன்றிய அவைத்தலைவராக நியமிக்கப்பட்டார். அப்பொறுப்பிலிருந்து பல்வேறு போராட்டங்களிலும், நற்பணிகளிலும் ஈடுபட்டு வந்தவர், சுமார் 8 ஆண்டுகள் அப்பதவியில் இருந்தார். கட்சி அடுத்தடுத்த தோல்விகளை சந்திக்க, அதில் மனம் நொந்தவராக கட்சி அரசியலிலிருந்து விலகினார்.
கட்சி அரசியலில் அவருக்கு ஈடுபாடு இருந்தநிலையிலும் சரி, விலகியிருந்த நிலையிலும் சரி, தேர்தல் அரசியலில் திரு.இராமருக்கு அலாதியான ப்ரியம் உண்டு. அந்த அடிப்படையில் 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வைப்பார் ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர், மீண்டும் 2011 உள்ளாட்சித் தேர்தலில் வைப்பார் ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
கட்சி தொடர் தோல்விகளை சந்தித்தபொழுது மனமுடைந்தவர், தன் தோல்வியைப்பற்றி பெரிதாக அலட்டிக்கொண்டவர் அல்ல. ஆம், இரண்டு தோல்விகளை அடுத்தடுத்த தேர்தல்களில் சந்தித்தவர், கடந்த 2019- டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வைப்பார் ஊராட்சி மன்றத் தலைவர் வேட்பாளாராக தன் துணைவியார் திருமதி.ஜக்கம்மாள் இராமர் அவர்களை களமிறக்கு, தான் இருமுறை நழுவ விட்ட வெற்றி வாய்ப்பை, இந்தமுறை ககச்சிதமாக பற்றி மகத்தான வெற்றிவாகை சூடியுள்ளார்.
தன் தோல்விகளைப் புறம் தள்ளி விடாமுயற்சியாக களத்தில்நின்று வெற்றியை சாத்தியமாக்கியுள்ள திரு.இராமர் அவர்கள், தேர்தல் ஜனநாயகத்தில், கட்சி அரசியல் மட்டுமே நீடித்த வளர்ச்சியையும், வாய்ப்புகளையும் வழங்கவல்லது, என்பதை மனதில் கொண்டு, தனக்கான கட்சியைத் தேர்ந்தெடுத்து உரிய பொறுப்புகளைப் பெற்று தனக்கு வாக்களித்த மக்களுக்கும், தான் சார்ந்திருக்கும் சமுதாய மக்களுக்கும் உரிய வகையில் உதவிட வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.