ஊராட்சி மன்றத் தலைவர் - விளாத்திக்குளம். திரு.K.சிவசுப்பிரமணிய பூபதி

திரு.K.சிவசுப்பிரமணிய பூபதி அவர்கள் 12.10.1954-ல் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகேயுள்ள வேலுடுபட்டி எனும் கிராமத்தில் திரு.கிருஷ்ணசாமி – திருமதி. வீரநாகம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். புகழ்பெற்ற தூத்துக்குடி வ.ஊ.சி.கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை (B.A) பட்டம் பெற்றார். இவருக்கு திருமணமாகி திருமதி.S.சக்கம்மாள் என்ற மனைவியும் S.அய்யாதுரை B.Com., என்ற மகனும் S.சுதா, B.E., என்ற மகளும் உள்ளனர்.
திரு.சிவசுப்பிரமணிய பூபதின் தகப்பனார் திரு.கிருஷ்ணசாமி அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் விளாத்திக்குளம் ஒன்றியச்செயலாளராக பொறுப்பு வகித்தவர் ஆவார். அந்தவகையில் பாரம்பரிய திராவிட இயக்க குடும்பத்தின் வழித்தோன்றலாக வந்தவர் திரு.சிவசுப்பிரமணிய பூபதி அவர்கள். தன்னுடைய கல்லூரி படிப்பு முடித்தவுடன், பஞ்சாயத்து யூனியன் கான்ட்ராக்டராக தன் வாழ்க்கையையை துவங்கினார். மாணவப்பருவத்திலிருந்தே அரசியல் பொதுக்கூட்டங்கள், தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டாலும் கூட, தன் தந்தையார் ஒன்றியச்செயலாளராக இருந்தபடியால் தீவிர அரசியல் பக்கம் வராமல், தொழிலில் கவனம் செலுத்தி வந்தார். தன் தந்தையார் மறைவுக்குப் பின் 1996-க்குப்பின் தீவிர அரசியலில் களம் கண்டவர் கிளைக்கழக செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அன்றிலிருந்து கட்சி அறிவிக்கும் பல்வேறு போராட்டங்களிலும், மறியல்களிலும் கலந்து கொண்டு சிறை சென்றுள்ளார். கிளைக்கழக செயலாளராக சிறப்புடன் செயல்பட்டவர் மாவட்ட பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அன்றிலிருந்து இன்றுவரை கிளைக்கழக செயலாளராகவும் , மாவட்டப் பிரதிநிதியாகவும் தொடர்பவர், விளாத்திக்குளம் ஒன்றிய செயலாளர் பதவிக்கு போட்டியிட்டு ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
தீவிர அரசியலுக்கு தாமதமாக வந்தாலும், சமுதாயப்பணியில் ஆரம்ப கட்டத்திலிருந்தே தீவிரமாக இருந்து வருகிறார். த.வீ.க.ப கழகத்திற்காக அப்பகுதியில் பல்வேறு கூட்டங்களை ஏற்பாடு செய்து நடத்தியர், பாஞ்சாலங்குறிச்சி விழாவையொட்டி ஜோதி கொண்டு செல்வதற்கும் ஏற்பாடு செய்து, திருவிழாவிற்கு தன்னாலான பங்களிப்பை செய்து வருகிறார். தவிர மாவீரன் பிறந்தநாள் விழாவை சமுதாய மக்களை ஒன்றுதிரட்டி அப்பகுதியில் விமர்சையாக கொடியேற்றத்துடன் கொண்டாடி வருகிறார்.
தேர்தல் அரசியலிலும் விருப்பமுடையவர், விளாத்திக்குளம் பகுதி அதிமுக வின் அசைக்கமுடியாத கோட்டையென்பதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் -2006-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் விளாத்திக்குளம் ஒன்றியம் 4-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்காக திமுக சார்பில் களமிறக்கி வெற்றிவாய்ப்பை தவறவிட்டார். மீண்டும் 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தானே திமுக சார்பில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி வாய்ப்பினை இழந்தார். இந்த தோல்விகள் எல்லாம் அவரின் தீவிர அரசியலை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. கட்சிப் பணிகளிலும், பொதுமக்கள் சேவையிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தவர், கடந்த 2019- டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், தனக்கு இருமுறை தோல்வியை பரிசளித்த பதவிக்கு போட்டியிடாமல், களத்தை மாற்றியமைத்தார். இம்முறை வேலுடுபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற்றுள்ளார்.
அரசியலில் மிக நீண்டநெடிய பாரம்பரியத்திற்கும், அனுபவத்திற்கும் சொந்தக்காரரான திரு.சிவசுப்பிரமணிய பூபதி அவர்கள், நீண்ட போராட்டத்திற்குப்பின் பெற்றுள்ள இந்த வெற்றியை தனக்கு பரிசளித்த மக்களுக்கு சிறப்பான சேவை மூலம் அவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம்பெறும் வகையில் பணியாற்றிட வேண்டும் எனவும், அவரின் அரசியல் பொதுவாழ்க்கை அனுபங்களை இளம் தலைமுறையினருக்கு பகிர்ந்து சமுதாயத்தில் பல நல்ல தலைவர்களை உருவாக்கிட வேண்டும் என அன்புடன் வேண்டி, வாழ்த்துகிறோம்.