ஊராட்சி மன்றத் தலைவர் - விளாத்திக்குளம். திரு.K.செல்லக்குமார்
திரு.K.செல்லக்குமார் அவர்கள் 04.06.1976-ல் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகேயுள்ள சிங்கிலிபட்டி கிராமத்தில் திரு.கருப்பசாமி நாயக்கர் – திருமதி. மாலத்தாய் அம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். மேல்நிலைக்கல்வி வரை பயின்றுள்ளார். இவருக்கு திருமணமாகி திருமதி.S.லட்சுமி என்ற மனைவியும், K.S.கோகுல் என்ற மகனும், S.அமலா என்ற மகளும் உள்ளனர்.
பள்ளிப்படிப்பை முடித்தவர் சென்னையிலுள்ள ஈகிள் பிரஸ் என்ற நிறுவனத்தில் சுமார் ஒன்றரையாண்டுகள் பணிபுரிந்தார். அதன்பின் சொந்த கிராமத்திற்கு திரும்பியவர், நீர்ச்செரிவு மேம்பாட்டுச் சங்கம் என்ற அமைப்பில் செயலாளராக சுமார் மூன்றாண்டுகள் பணியாற்றினார். இந்த அமைப்பு கிராமப் புறங்களிலுள்ள குளம், குட்டைகளை சீரமைத்து, நீராதாரத்தை பாதுகாத்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி, கிராமத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திட தொடங்கப்பட்ட அமைப்பாகும். இதில் செயலாளராக இருந்து அப்பணியின் வரவு-செலவுகளை கண்காணித்து வந்தார். பிறகு விளாத்திக்குளம் நகரில் நவதானியங்களை கொள்முதல் கமிஷன் மண்டி ஒன்றில் சுமார் 15 ஆண்டுகள் பணியாற்றினார். சுயதொழிலில் தொடங்க விருப்பம் ஏற்படவே, விளாத்திக்குளத்தில் கோகுல் டிரேடர்ஸ் என்ற நிறுவனம் துவங்கி, நவதானியங்கள், மிளகாய் வத்தல், மிளகு, மல்லி போன்ற உணவுப் பொருட்களை கொள்முதல் செய்து, தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு மொத்த விற்பனை செய்துவருகிறார்.
அரசியலில் சிறிதும் விருப்பமில்லாதவர், திரு.வைகோ அவர்கள் மதிமுக வைத்துவங்கிய பொழுது, அவரின் ஆதரவாளராக சிலகாலம் இருந்தார். பின்னர் திரு.விஜயகாந்த் அவர்கள் தேமுதிக வைத்துவங்கிய பொழுது அவரின் அபிமானியாக இருந்தார். அந்தவகையில் அவ்விரு கட்சிகளின் சார்பாக பூத் ஏஜெண்டாக பணியாற்றியதே, இவரின் உட்சபட்ச அரசியல் அனுபவம். மற்றபடி இவருக்கு தீவிர அரசியல் மீது என்றும் நாட்டமிருந்தது இல்லை. செய்துவரும் தொழில் தான் பிரதானமாக இருந்தது.
கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தலில் அக்கிராம பொதுமக்களின் வற்புறுத்தலின் பேரில், வேடபட்டி ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு கட்சி அரசியல் சாயம் இல்லாமல், மக்களின் வேட்பாளராக களமிறங்கி வெற்றி வாகை சூடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களின் விருப்பத்தை ஏற்று போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள திரு.செல்வக்குமார் அவர்கள், மேற்கொண்டும் தீவிர அரசியலில் நாட்டமில்லை என்ற கருத்தையே முன்வைக்கிறார். தான் பதவி வகிக்கப்போகும் இந்த ஐந்தாண்டுகளில் தன்னால் முடிந்தவகையில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்ற உத்வேகத்துடன் இருக்கிறார்.
அரசியல் விருப்பமின்றி மக்களின் விருப்பத்திற்காக போட்டியிட்டு ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு.செல்வக்குமார் அவர்கள், மக்கள் அவர்மேல் வைத்துள்ள நம்பிக்கையை பூர்த்தி செய்வதுடன், தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பின் மூலம் தீவிர அரசியலிலும் களமிறங்கி, அப்பகுதியில் நம் சமுதாயத்திலுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்பி, ஆதரவாக இருக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி, வாழ்த்துகிறோம்.