🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஊராட்சி மன்றத் தலைவர் - திருப்பூர். திரு.S.துரைசாமி

திரு.S. துரைசாமி அவர்கள் 05.07.1971-ல் திருப்பூர் மாவட்டம், நாலுரோடு அருகேயுள்ள அக்ரஹாரம் பெரியபாளையம் எனும் கிராமத்தில் திரு.சுப்பிரமணியம்-திருமதி.சென்னியம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். தொடக்கப்பள்ளியுடன் கல்விக்கு விடைகொடுத்தவர், பெற்றோர்களுக்கு உதவியாக தீவிர விவசாயப்பணியில் ஈடுபட்டார். இவருக்கு திருமணமாகி திருமதி.D.இராதாமணி என்ற மனைவியும் D.ஜமுனா என்ற மகளும், D. மாரிமுத்து என்ற மகனும் உள்ளனர்.


கொங்கு மண்டலத்தில் நமது சமுதாயத்தினர் பெரும்பாலானவர்கள், புரட்சித் தலைவர் அவர்களின் தீவிர ரசிகர்களாக அதிமுகவின் ஆதரவாளர்களாக இருந்தாலும், திமுக-விலிருந்த திரு.வைகோ அவர்களின் நாடாளுமன்றப் பேச்சிலும், மேடைப்பேச்சிலும் கவரப்பட்ட பல்லாயிரக்கணக்கான இளைஞர்களில் திரு.துரைசாமி அவர்களும் ஒருவர். இதன் வெளிப்பாடாக தனது இருபத்திரெண்டாவது வயதில், 1993-ஆம் ஆண்டு திரு.வைகோ அவர்கள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை துவங்கிய பொழுது, மதிமுகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தை துவக்கினார். எந்தப் பொறுப்பையும், பதவியையும் தேடிப்போவதை விரும்பாதவர், சாதாரண தொண்டராகவே  . அந்த இயக்கத்தில் சுமார் பத்தாண்டுகாலம் பயணித்து, கட்சி நடத்தும் பல்வேறு போராட்டங்களிலும், கூட்டங்களிலும் கலந்து கொண்டார்.

 2003-ஆம் ஆண்டு தீவிர அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து விவசாயப்பணிகளில் கவனம் செலுத்தியவர், DMJ ஹாலோபிளாக்ஸ் என்ற பெயரில் கட்டுமானத்திற்கு தேவையான காங்கிரீட் பிளாக்குகள் தயாரிக்கும் தொழிற்சாலையை துவங்கி நடத்திவருகிறார். தொழிலில் முழுஅர்ப்பணிப்புடன் பணியாற்றி அந்நிறுவனத்தை நிலைநிறுத்திக்கொண்டவர், அடுத்தகட்டமாக தோப்பு ரெஸ்டாரென்ட் என்ற ஹோட்டலையும் துவங்கி நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு தொழில்களுக்கு மத்தியில் சமுதாயத்தினர் மீதும் பற்றும் பாசமும் கொண்டவர், தவீக பண்பாட்டுக்கழகத்தின் அ.பெரியபாளையம் கிளையின் தலைவராக செயல்பட்டு வருகிறார். மாவீரனின் பிறந்தநாளில் அப்பகுதியில் கொடியேற்றத்துடன் சிறப்பாக கொண்டாடி, மாணவ-மாணவியருக்கு பரிசுகளையும் வழங்கி வருகிறார்.

உள்ளூர் சமுதாயத்தினர் மற்றும் நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க 2010- ஆண்டு முதல் தீவிர அரசியலில் இறங்கியவர், அஇஅதிமுகவில் இணைந்து சாதாரண தொண்டராக இன்றுவரை இருந்துவருகிறார். அப்பொழுதும் பதவிகளில் பெரிய நாட்டமில்லாதவர், அப்பகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், அக்ரஹாரம் பெரியபாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற்றார். தான் பதவிவகித்த காலத்தில் சிறப்பான நிர்வாகத்தை நடத்தியவர், காங்கிரீட் சாலை அமைத்தல், தெரு விளக்கு மற்றும் குடிநீர் குழாய்கள் அமைத்தல், நிழற்குடை அமைத்தல், பசுமை வீடுகள், மயானக் கூரை அமைத்தல் என அக்கிராமத்தின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றினார். அவ்வூராட்சியின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும்பொருட்டு 20க்கும் மேற்பட்ட போர்வெல்களையும், பத்திற்கும் மேற்பட்ட உயர்மட்ட தண்ணீர் தொட்டிகளையும் கட்டி, குடிநீர் தட்டுப்பாடற்ற கிராமமாக மாற்றினார்.  சட்டமன்ற-நாடாளுமன்ற  உறுப்பினர்களின் நிதியுதவியுட்பட பல்வேறு வகையிலும் சுமார் 5கோடி மதிபீட்டிலான பல்வேறு திட்டங்களை 2011 முதல் 2016 வரையிலான பதவி காலத்தில் நிறைவேற்றி மக்களின் அன்பையும், நன்மதிப்பையும் பெற்றார்.


2016-ஆம் ஆண்டில் தன் பதவிக்காலம் நிறைவுற்ற நிலையிலும், மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதையும், குறைகளைக் களைவதிலும் ஆளும்கட்சின் தொண்டராக முன்னின்று நிறைவேற்றி தொடர்ந்து மக்கள்பணியிலும், கட்சிப்பணியிலும் ஈடுபட்டு வந்தார். கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தலில் மீண்டும் அ.பெரியபாளையம் ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டவருக்கு, முன்பைவிட அதிகப்படியான வாக்குகளை அளித்து வெற்றிக்கனியை வழங்கியுள்ளனர் அக்கிராம மக்கள் என்பது மகிழ்ச்சிக்குறியது.

கட்சியில் எந்தப் பதவியையும் கேட்டுப்பெறுவதிலும், கிடைப்பதை வாங்கிக்கொள்வதிலும் ஆர்வம்காட்டாதவர், சிறுபான்மை சமுதாயமான கம்பளத்தார்களுக்காக, அரசியலில் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்புகளையும் பெற்று, சிறப்பாக செயல்பட்டு ஒட்டு மொத்த சமுதாயத்திற்கு பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved