🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அரசியல் வானில் ஒளிரும் நட்சத்திரம் - அரவக்குறிச்சி. திரு.N.மணிகண்டன்

திரு.N.மணிகண்டன் அவர்கள் 25.05.1978-ல் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகேயுள்ள கரடிப்பட்டி கிராமத்தில் திரு.நடராஜன்-திருமதி.அன்னலட்சுமி தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப்பிறந்தார். திண்டுக்கல் நகரிலுள்ள புகழ்பெற்ற காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் ரூரல் டெவெலப்மெண்ட் துறையில் முதுகலை (M.A) பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு திருமணமாகி திருமதி.M.ஜெயந்தி என்ற மனைவியும் M.தரணிதரன் என்ற மகனும் M.அபிஸ்ரீ என்ற மகளும் உள்ளனர்.


திரு.மணிகண்டன் அவர்களின் தகப்பனாரும், சமுதாய தியாகியுமான திரு.நடராஜன் அவர்கள், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் 1972-ல் அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தை துவங்கிய பொழுதிலிருந்து, அரவக்குறிச்சி நகரின் முதல் நகரக் கழக செயலாளராகப் பொறுப்பேற்று, நீண்டகாலம் அப்பதவி வகித்தவர். ஆதலால் இயல்பிலேயே அஇஅதிமுகவினரான திரு.மணிகண்டன் அவர்கள், மாணவப்பருவத்திலிருந்தே அஇஅதிமுக நிகழ்ச்கிகளில் பங்கெடுத்து வந்தார். 2008-ஆம் ஆண்டு தன் தந்தையார் திரு.நடராஜன் அவர்கள் வகித்த, அரவக்குறிச்சி நகரக் கழக செயலாளர் பதவி இவரை வந்து சேர்ந்தது. அதுமுதல் அஇஅதிமுகவில் பம்பரமாக சுழன்று பணியாற்றிவருக்கு, 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அரவக்குறிச்சி பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பு கிட்டியது. அஇஅதிமுக சார்பில் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு அமோக வெற்றிபெற்று அரவக்குறிச்சி பேரூராட்சித்தலைவராக பொறுப்பேற்றார்.

அரவக்குறிச்சி பேரூராட்சியின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்ட திரு.மணிகண்டன் அவர்கள், பல்வேறு முறைகளில் நிதி ஆதாரங்களைத் திரட்டி, நகரின் குடிநீர் வசதியை மேம்படுத்துதல், சாலை அமைத்தல், போக்குவரத்து, தெருவிளக்கு, சுகாதாரம், பசுமைவீடுகள் போன்ற பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை சுமார் 12கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தியதின் மூலம் மக்களின் மனதில் நீங்க இடம் பெற்றார். இவர் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில், சிறந்த நிர்வாகத்திறனால் பேரூராட்சியின் நிதிநிலை மேம்பட்டதின் அடிப்படையில் அரவக்குறிச்சி பேரூராட்சி சிறப்புநிலைப் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது, இது இவரின் அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றது. தான் பதவிவகித்த 2011-2016 ஆண்டு வரை அப்பகிகுதில் வாழும் லட்சக்கணக்கான நம் சமுதாய மக்களின் அன்பைப்பெற்றவராக, சமுதாய மக்களின் தேவைகளை, குறைகளை ஆளும்-அதிகார வர்க்கத்திடம் கொண்டுசென்று சுமூகமாகத் தீர்க்கும் பொறுப்பும் இயல்பாகவே ஏற்கவேண்டியிருந்தது. ஏனெனில் மேற்கு மண்டலமாக சொல்லப்படும் கரூர்,நாமக்கல்,ஈரோடு,கோவை,திருப்பூர் போன்ற மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளிலுள்ள ஒட்டுமொத்த கம்பளத்து சமுதாயத்திலும், திரு.மணிகண்டன் அவர்கள் மட்டுமே ஒரே பேரூராட்சி தலைவர் என்பதைத் தாண்டி, ஆளும்கட்சியில் அதிகாரமட்டத்துடன் நெருங்கிய தொடர்புடைய தலைவராக இருந்தபடியால், தன்னை நாடிவரும் சமுயத்தினரின் தேவைகளையும், பிரச்சினைகளையும் கவனத்தில் கொள்ளவேண்டிய பொறுப்பும், கடமையும் இருந்தது.

அனைத்திந்திய அண்ணா திமுகவில் ஏற்றுக்கொண்ட தலைமைக்கு விசுவாசமாகவும், மாவட்ட நிர்வாகிகளின் அன்பையும், நன்மதிப்பையும் பெற்றவராக, கட்சியின் வளர்ச்சிக்காக  தீவிரமாக உழைத்தார். 2016-ஆம் ஆண்டு புரட்சித்தலைவி அம்மா மற்றும் 2017-ஆம் ஆண்டில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ஆகியேரின் அடுத்தடுத்த மறைவு, தமிழக அரசியலையும் பல்வேறு தலைவர்களின் அரசியல் வாழ்வையும் புரட்டிப்போட்டதுபோல் திரு.மணிகண்டன் அவர்களின் அரசியல் வாழ்க்கையிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தியது. இயக்கம் தோற்றுவித்த 1972-ஆம் ஆண்டு முதல் தங்கள் குடும்பத்தில் இரத்தமும், சதையுமாக இருந்த இயக்கத்தில் ஏற்பட்ட பல்வேறு குழப்பங்கள், திருப்பங்கள், திரு.மணிகண்டன் அவர்களின் கனவிலும் நினைத்துப்பார்க்க முடியாத மாற்றங்களை உண்டாக்கியது என்றுதான் சொல்லவேண்டும். அரசியல் வரலாற்றில் பல்வேறு காலசூழலில் ஏற்படும் மாற்றங்களால் அடிமட்டத்தொண்டர்கள் குழப்பமடைவதைக் காட்டிலும், இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கே குழப்பம் அதிகம் பீடிக்கும். அடிமட்ட தொண்டராக தன் தனிப்பட்ட சுயவிருப்பு, வெறுப்பின் அடிப்படையில், தான் எந்தப்பாதையில் செல்லவேண்டும் என்பதை தீர்மானிப்பர். ஆனால் தலைவர்களாக இருப்பவர்களுக்கு, அதுவும் குறிப்பிடத்தவகையில் ஆதரவாளர்களைக் கொண்டிருக்கும் தலைவர்கள், தங்கள் சுய விருப்பு, வெறுப்பு தாண்டி, தங்கள் ஆதரவாளர்களின் எண்ணவோட்டமும், நலம்விரும்பிகளின் வழிகாட்டுதலும், உட்கட்சி அரசியல் சமன்பாடுகளுமே தலைவர்கள் பயணிக்கும் பாதையைத்  தீர்மானிக்கும் என்பது கடந்தகால அரசியல் வரலாறு காட்டும் உண்மை.


அப்படியான ஒரு இக்கட்டான அரசியல் சூழலில் தன் அரசியல் எதிர்காலம், தன்னை நம்பியிருக்கும் ஆதரவாளர்களின் நலன், தன்னை அரசியலில் வார்ப்பித்து, வழிகாட்டி, ஆதரவாக இருந்த தலைவர்களின் யோசனை, சமுதாயத் தலைவர்களின் வேண்டுகோள், சமுதாய நலன், இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, தான் நேசித்த இயக்கம் ஆளும் கட்சியாக இருப்பதையும் பொருட்படுத்தாமல், திராவிட இயக்க சித்தாந்தத்தில் வளர்ந்த திரு. மணிகண்டன் அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து பணியாற்ற கிடைத்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டு, 2019-ஆம் ஆண்டு முதல் திமுகவில் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டு, அக்கட்சியின் லட்சோப லட்சம் தொண்டர்களில் ஒருவனாக, சாதாரண உறுப்பினராக தொடர்கிறார்.

சமுதாயத்தில் வளர்ந்துவரும் இளம்தலைவரான திரு,மணிகண்டன் அவர்களுக்கு, வரும்காலம் வசந்தகாலமாக அமையவும், கிடைக்கும் வாய்ப்புகளை சமுதாய முன்னேற்றத்திற்கும் பகிர்ந்தளிக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved