ஊராட்சி மன்றத் தலைவர் - விளாத்திக்குளம் புதூர். திரு.E.பொம்முசாமி
திரு.E.பொம்முசாமி அவர்கள் 1954-ல் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகேயுள்ள சின்னவநாயக்கன்பட்டி கிராமத்தில் திரு.எர்ர நாயக்கர் – திருமதி. சாத்தம்மாள் தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். தொடக்கக் கல்விவரை பயின்றவர் தீவிர விவசாயப் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். காலம்சென்ற திருமதி.தெய்வக்கனி அம்மாளை மணமுடித்த இவருக்கு திரு. எர்ரய்யா, திரு.விஜயகுமார், திரு,முத்துமாரிச்சாமி, திரு.சின்னமாரிச்சாமி, திரு.கரியம்மாலு என்கிற ஐந்து மகன்களும், திருமதி.முத்துலட்சுமி, திருமதி.மூக்கம்மாள் என்கிற இரண்டு மகள்களும் உள்ளனர்.
தந்தைப்பெரியாரின் தீவிர சீடராக திராவிட இயக்கப் பாசறையில் வளர்ந்தவர், பேறரிஞர் அண்ணா அவர்களின் காந்தக்குராலால் வசீகரிக்கப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து அரசியல் பொதுவாழ்வில் தொடர்ந்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடத்தப்படும் அனைத்து போராட்டங்கள், மறியல், பேரணி, பொதுக்கூட்டங்கள் அனைத்திலும் ஆர்வமுடன் கலந்து கொள்வதில் முன்னனி தளகர்த்தராக தொடர்ந்து விளங்கினார். ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் அறைகூவல் விடுக்க, போராட்ட களம்கண்டு இருமுறை பாளையங்கோட்டை, மற்றும் கோவில்பட்டி சிறைக்கொட்டடைகளில் அடைக்கப்பட்டவர். 1993-ஆம் ஆண்டு திரு.வைகோ அவர்கள் மதிமுக-வைத் துவங்கியபொழுது, அக்கட்சியில் இணைந்து அரசியல் வாழ்வைத் தொடர்ந்தவர், பல்வேறு தோல்விகள், சோதனைகள் சூழ்ந்த பொழுதும், கொண்ட கொள்கையில் தடமாறது இன்று வரை அதே இயக்கத்தில் பயணிப்பவர். திரு.வைகோ அவர்களிடம் நல்ல அறிமுகமும், நேரடி தொடர்பும் இருந்த பொழுதிலும், தனக்காக எந்த பதவியும், உதவியும் கேட்காமல், அந்த இயக்கத்தில் சாதாரணத் தொண்டராக, அதே சமயத்தில் திரு.வைகோ அவர்களின் தீவிர விசுவாசியாக தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
1991- ஆம் ஆண்டு முதல் 1996 வரை, சின்னவநாயக்கன்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர். 1996-ஆம் ஆண்டு புதூர் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு மதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அரசியலில் கண்ணியம், நேர்மை, அர்ப்பணிப்பு, ஒழுக்கம், தியாகம் போன்றவற்றை கடைபிடித்து, பொதுவாழ்வில் புடம்போட்ட தங்கமாக மிளிர்பவரை, கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சின்னவநாயக்கன்பட்டி ஊராட்சிமன்றத் தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுத்து, தங்களின் நம்பிக்கையை வெளிப்படுத்தியது, இன்றைய தேதியில் அரசியலில் அதிசயம் என்றால் மிகையல்ல.
ஊராட்சி மன்ற உறுப்பினருக்கே பல லட்சங்களைக் கொட்டித்தீர்க்கும் சமகால அரசியல் களத்தில், உள்ளாட்சித் தேர்தலை திருவிழாக் கோலம்பூண்டு குடியும், கும்மாளமுமாக கொண்டாடித்தீர்க்கும் இவ்வேளையில்,எந்தவித சலனத்திற்கும் ஆட்படாமல், எதையும் எதிர்பார்க்காமல், மக்களோடு மக்களாக வாழும் ஒரு சாதாரண எளிய தொண்டனை, அவரின் சேவையின்பால் நம்பிக்கை வைத்து ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுத்த சின்னவநாயக்கன்பட்டி மக்கள் போற்றுதலுக்கும், புகழுக்கும் உரியவர்கள் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்கமுடியாது.
நீண்ட நெடிய அனுபவமும், தியாகமும் கொண்ட பொதுவாழ்விற்கு சொந்தக்காரரான திரு.பொம்முசாமி அவர்கள், நீண்ட ஆயுளோடும், அரோக்கியத்தோடும் வாழ்ந்து இளைய சமுதாயத்திற்கு வழிகாட்டி, பண்புள்ள அரசியல் தலைவர்களை, சமுதாயத்தில் உருவாக்கிட உதவிடுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.