🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஒன்றியக்குழு உறுப்பினர் - வைப்பார். திரு.R.குருசாமி

திரு.R.குருசாமி அவர்கள் 05.05.1958-ல் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகேயுள்ள வைப்பார் கிராமத்தில் திரு.இராமசாமி – திருமதி.ஜக்கம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். உயர்நிலைப்பள்ளிக் கல்வி வரை பயின்றுள்ளார். இவருக்கு திருமணமாகி திருமதி.தனலட்சுமி என்ற மனைவியும் G.ரமேஷ்.B.Tech, மற்றும் G.ராமபிரசாத். B.E., என்ற இரு மகன்களும் உள்ளனர். திரு.குருசாமி அவர்களை மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் வம்சாவளியினராக அங்கீகரித்து, பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் சந்ததியினர் குடியிருப்பில் வீடும், மூன்று ஏக்கர் நிலமும் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


உயர்நிலைப்பள்ளியுடன் கல்விக்கு விடைகொடுத்த திரு.குருசாமி அவர்கள், அருப்புக்கோட்டையில் புகழ்பெற்ற நிறுவனமான ஜெயவிலாஸ் பஸ் கம்பெனியில் இணைந்து மெக்கானிக்காக தன் வாழ்வைத் துவங்கினார். மிக அர்ப்பணிப்புடனும், நம்பிக்கைக்குறியவராகவும் செயலாற்றிய காரணத்தால், அந்நிறுவனத்தின் முதலாளி தன் சொந்த வாகனத்தின் ஓட்டுனராக திரு.குருசாமி அவர்களை  நியமித்துக்கொண்டார். மிக கனரக வாகனம் ஓட்டுவதில் ஆர்வமுடையவர் ஜெயவிலாஸ் பஸ் சர்வீசில் டிரைவராக பணியமர்த்தப்பட்டார். சுமார் பத்தாண்டுகாலம் ஜெயவிலாஸ் கம்பெனியில் வேலை செய்தவர் 1987-ல் தமிழக அரசு போக்குவரத்துத்துறையில், திருநெல்வேலிக் கோட்டத்திற்குட்பட்ட திருவள்ளுவர் போக்குவரத்துக்கழக்ததில் டிரைவராக பணியில் அமர்ந்தார். பின்னர் அதுவே தமிழகஅரசு விரைவுப் போக்குவரத்துக் கழகமாக மாறியபொழுது, திருநெல்வேலியிலிருந்து பல்வேறு நீண்டதூர நகரங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் டிரைவராக பணியாற்றினார்.  அரசு போக்குவரத்துத் துறையில் பணிபுரிந்த காலத்தில் சிறந்த தொழிற்சங்கவாதியாக திகழ்ந்தார். திருநெல்வேலி மாவட்டத்தின் சிபிஐ கட்சியின் போக்குவரத்து தொழிற்சங்கத்தில் செயலாளராக பணியாற்றினார். பின்னர் திரு.வைகோ அவர்கள் 1993-ல் மதிமுகவைத் தொடங்கியபொழுது அக்கட்சியின் தொழிற்சங்கமான MLF –ல் இணைந்து மாநில இணைச்செயலாளராக பணியாற்றினார். அதன்பின்னர் திரு.விஜயகாந்த் அவர்கள் தேமுதிகவைத் தொடங்கியபொழுது, அக்கட்சியின் தொழிற்சங்கத்தில் மாநில துணத்தலைவராக பணியாற்றினார். சுமார் 29 ஆண்டுகால அரசுப்பணியில், தொழிற்சங்கவாதியாக பல்வேறு பொறுப்புகளை வைத்திருந்த  நீண்ட நெடிய பொதுவாழ்விற்கு சொந்தக்காரரான திரு.குருசாமி அவர்கள் 2016-ஆம் ஆண்டு அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.


மாணவப் பருவத்திலிருந்தே சமுதாயத்தின் மீது பற்றுகொண்டவர், தவீக பண்பாட்டுக்கழகத்தின் வைப்பார் பகுதின் தலைவராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பணி ஓய்வுக்குப் பின் சொந்த ஊரான வைப்பாரில் குடியமர்ந்தவர், தேமுதிகவில் தொடர்ந்து களப்பணியாற்றினார். கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சிமன்றத் தேர்தலில், விளாத்திக்குளம் ஒன்றியம் 16 ஆவது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தலில் தேமுதிக கட்சியின் சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவரின் மனு கட்சியின் மாவட்டத் தலைமையால் நிராகரிக்கப்பட்ட நிலையில், அப்பகுதி மக்களின் வற்புறுத்தலின் பேரில் சுயோட்சையாக போட்டியிட்டு சுமார் 500 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும்கட்சி, ஆண்டகட்சி உட்பட எழுமுனைத் தாக்குதலைத் தகர்த்தெறிந்து வெற்றி பெற்றதின் மூலம், அம்மண்ணில் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் புகழை நிலைநாட்டியதோடு, அம்மாவட்டத்தின் அனைத்துக் கட்சிகளின் கவனத்தையும் தன்பக்கம் திருப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய மக்கள் சேவையால் அப்பகுதி மக்களின் அமோக ஆதரைப்பெற்று வெற்றி பெற்றுள்ள திரு.குருசாமி அவர்கள், தனக்குக்கிடைத்த இப்பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்தி சிறப்பான சேவைசெய்து ஒட்டுமொத்த் சமுதாயத்தின் ஆதரவைப்பெற்று மேன்மேலும் வளர்ந்து சமுதாயத்திற்கு பெருமை சேர்க்கவேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved