ஊராட்சி மன்றத் தலைவர்- வெஞ்சமாங்கூடலூர் - திரு.K.சிவாஜி
திரு.K.சிவாஜி அவர்கள் 15.08.1958-ல் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகேயுள்ள வெஞ்சமாங்கூடலூர் கிராமத்தில் திரு.கொண்டம நாயக்கர்- திருமதி. பெருமாள் அம்மாள் ஆகியோருக்கு விவசாய குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். இவர் எஸ்.எஸ்.எல்.சி வரை கல்வி பயின்றுள்ளார். இவருக்கு திருமணமாகி திருமதி.சாந்தி என்கிற மனைவி உள்ளார்.
இளமை காலம்தொட்டே அரசியலில் ஆர்வமுள்ளவர், தொடக்கத்தில் திமுகவில் இணைந்து பணியாற்றினார். பின்னர் 1993-ல் திரு.வைகோ அவர்கள் மதிமுக தொடங்கியதிலிருந்து இன்றுவரை சுமார் 26 ஆண்டுகளுக்கும் மேலாக மதிமுகவில் உள்ளார். கட்சி நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள், மாநாடுகளில் தொண்டர்களுடன் கலந்து கொள்ளும் திரு.சிவாஜி அவர்கள், ஆர்ப்பாட்டம், மறியல், போராட்டங்களில் கலந்துகொண்டு பலமுறை கைதாகியுள்ளார்.
நீண்ட அரசியல் அனுபவமிருந்த பொழுதிலும் தேர்தல் அரசியலிலிருந்து ஒதுங்கியே இருந்தவர், 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்டு வெஞ்சமாங் கூடலூர் கிழக்கு ஊராட்சிமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2006,2011 தேர்தல்களில் அத்தொகுதி மகளிருக்கு ஒதுக்கப்பட்டதால், தனது துணைவியார் திருமதி.சாந்தி சிவாஜி அவர்களை ஊராட்சிமன்றத் தலைவர் வேட்பாளராக்கி வெற்றிவாகை சூடினார். இக்காலகட்டத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், அடிப்படைத் தேவைகளை யும் நிறைவேற்றி, 2006-ல் சிறந்த ஊராட்சி மன்றத் தலைவருக்கான “நிர்மல் புஷ்கார்” விருதினை வென்றுள்ளார். தவிர பல்வேறு தனியார் அமைப்புகளில் விருதுகளையும் வென்றுள்ளார். பால் உற்பத்தியாளர் சங்கம், தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கி உட்பட பல சங்கங்களில் இயக்குநராகவும், தலைவராகவும் இருந்துள்ளார். 2001 முதல் 2006 வரை கிராம பஞ்சாயத்து தலைவர்களின் மாவட்ட கூட்டமைப்பில் துணைத்தலைவர் பதவி வகித்துள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வெஞ்சமாங்கூடலூர் கிழக்கு ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிட்டு பதிமூன்று ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சமகால அரசியலில் தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெறுவதென்பது எளிதில் கிட்டிவிடக்கூடியதல்ல. இருந்தாலும், தொடர் மக்கள் சேவையில் தன்னை அர்ப்பணித்து செயல்படும் திரு.சிவாஜி அவர்கள் அதை சாத்தியமாக்கிக் காட்டியுள்ளார் என்பது நமக்கு பெருமை தரக்கூடியது. திரு.சிவாஜி அவர்கள் மேலும் பல தொடர்வெற்றிகளைப் பெற்று மக்கள் சேவையாற்றி, சமுதாயத்திற்கு பெருமை சேர்த்திட அன்புடன் வாழ்த்துகிறோம்.