🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் - விளாத்திக்குளம். திரு.K.S.K.ஞானகுருசாமி

திரு.K.S.K.ஞானகுருசாமி.B.A., அவர்கள் 12.08.1956-ல் தூத்துக்குடி மாவட்டம், புதூர் அருகேயுள்ள குமாரலிங்கபுரம் கிராமத்தில்  திரு.குமார் நாயக்கர் – திருமதி.புளியக்காள் தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். திரு.ஞானகுருசாமி அவர்கள் புகழ்பெற்ற தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரியில் இளங்கலை பட்டம் (B.A.,) பெற்றுள்ளார். இவருக்கு திருமணமாகி திருமதி.வேலம்மாள் என்ற மனைவியும் திரு.G.சூரியகுமார்.B.E., திரு.G.சுரேஷ்குமார்.M.Sc.,M.Phil. B.Ed. என்ற மகன்களும் திருமதி.G.சூரியகலா நல்லையாராஜ் M.Sc. B.Ed. என்ற மகளும் உள்ளனர்.


தந்தையார்.திரு.குமார் நாயக்கர் அவர்கள் மாதலப்புரம் கூட்டுறவு சங்கத்தலைவராக பதவி வகித்த சிறப்புக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1970களில் சமுதாயத்திலுள்ள பட்டதாரிகளை விரல்விட்டு எண்ணிவிடும் அளவிலேயே இருந்தனர் குறிப்பிடத்தக்கது. இதைக்குறிப்பிடக் காரணம், 1970-களில் நமது சமுதாயத்தில் பெருநிலக்கிழார்கள், நிலச்சுவான்தார்கள் இருந்தாலும் கூட, அவர்களுக்கு கல்வி பற்றிய புரிதல், கல்வியின் முக்கியத்துவம், தொலைநோக்குப் பார்வை என எதுவுமில்லாமல், தங்கள் பிள்ளைகளை அதிகபட்சம் ஐந்தாவது வரை மட்டுமே படிக்க வைத்தனர் என்பது நமது சமுதாய புள்ளி விபரம் சொல்லும் செய்தி. அந்தவகையில் திரு.ஞானகுருசாமி அவர்களின் தகப்பனார் திரு,குமார் நாயக்கர்  அவர்கள் போற்றுதலுக்குரியவர். 

பாரம்பரியமான குடும்பம், பட்டப்படிப்பு வேறு, பொதுவாழ்வில் ஈடுபட வேறென்ன தகுதி வேண்டும்?. 1977-ல் தனது இருபத்தொன்றாம் வயதில் L.V.புரம் கூட்டுறவு சங்க இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்டதின் மூலமாக தன் பொதுவாழ்வை துவங்கினார் திரு.ஞானகுருசாமி அவர்கள். அதனைத்தொடர்ந்து தீவிர அரசியலில் கவனம் செலுத்திவர், பள்ளி பருவம் முதலே எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக இருந்தவருக்கு, எம்.ஜி.ஆர் துவங்கிய அஇஅதிமுகவில் இணைந்து பணியாற்றுவது எளிதாக இருந்தது. அந்தவகையில் 1977-ல் அஇஅதிமுகவில் இணைந்து தன் அரசியல் பொதுவாழ்வைத் துவங்கியவருக்கு மூன்றே ஆண்டில், அதாவது 1980-ல் கிளைக் கழகச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் 1991-ல் அஇஅதிமுக மாணவரணியில் பொறுப்பு, 1995-ல் மாவட்டப் பிரதிநிதி, 1999-ல் ஒன்றிய இளைஞரணி செயலாளர் என படிப்படியாக கட்சியில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு உயர்ந்தார். 19.12.2002 –ல் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் நேரடி நேர்காணல் நடத்தி, திரு.ஞானகுருசாமி அவர்களை புதூர் ஒன்றியக் கழக செயலாளராக நியமிக்கப்பட்ட பெருமைக்குரியவர். அன்று முதல் இன்று வரை சுமார் பதினெட்டாண்டுகள் ஒன்றியச் செயலாளர் பதவிவகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


2006-ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இவரது துணைவியார் திருமதி.வேலம்மாள் ஞானகுருசாமி ஒன்றியக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் 2011-ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திரு.ஞானகுருசாமி அவர்கள் ஒன்றியக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து 2012-ல் புதூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இச்சங்கம் எட்டயபுரம், விளத்திக்குளம் பகுதிகளிலுள்ள பருத்தி அரவை ஆலைகளை உள்ளடக்கியுள்ளதுடன், மிகஅதிக சொத்துக்களைக் கொண்ட சங்கம் (மார்க்கெட்டிங் கமிட்டி) என்பதால், இச்சங்கத்தின் தலைவர் பதவியைப்பெற  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும் போட்டியிட்ட வரலாறுகள் உண்டு. அத்தகைய பெருமைக்குரிய இச்சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதின் மூலம் இராஜகம்பளத்தாரில் முதல் தலைவராக பொறுப்பு வகித்ததுடன், அப்பகுதி சமுதாய மக்களின் நீண்ட நாள் ஏக்கத்தை நிறைவேற்றினார்.

மீண்டும் 2018-ல் அதே  சங்கத்தில்  தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதுவரை நமது சமுதாயத்தினருக்கு இயக்குநர் பதவிகளே எட்டாக்கனியாக இருந்த நிலையில், சமுதாயத்தைச் சேர்ந்த மூவர் இயக்குநராகவும், அதன் பின்னர் நால்வர் இயக்குநராகும் வாய்ப்பும் கிட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர, நம்மவர் திரு.N.சேதுபாண்டியன் அவர்களை தலைவராகக் கொண்டு செயல்படும் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் துணைதலைவராகவும் நீண்ட காலம் பொறுப்பு வகிக்கிறார். அனைத்து தரப்பு மக்களின் நன்மதிப்பையும், கட்சித்தலைமையின் நம்பிக்கையையும் ஒருங்கே பெற்றவர், ஆதலால் 2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல்களில் மாற்று வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

நீண்ட நெடிய பொதுவாழ்க்கைக்கு சொந்தக்காரரான திரு.ஞானகுருசாமி அவர்கள், கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அஇஅதிமுக சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றிவாகை சூடினார். ஐம்பதாயிரம் வாக்காளர்களைக் கொண்ட இப்பதவிக்கு, இதுவரை சமுதாயத்தினர் பலமுறை போட்டியிட்டும் வெற்றியை வசப்படுத்த முடியாததாக இருந்ததை,  இந்த வெற்றியின் மூலம் மாற்றிக்காட்டினார் என்பது பெருமை கொள்ளத்தக்கது.


அரசியல் தவிர சமுதாயத்தின் மீதும் பற்று கொண்டவர், பெருமை வாய்ந்த புதூர் வட்டார இராஜகம்பள மஹாஜன சங்கத்தின் துணைச்செயலாளராகவும் பல ஆண்டுகளாக பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. துபாயில் பொறியாளராக பணியாற்றிவரும் திரு.ஞானகுருசாமி அவர்களின் மூத்த மகன் திரு.G.சூரியகுமாரின் துணைவியார் திருமதி.S.கீதாதேவி சூரியகுமார்.M.E., அவர்கள் தமிழக மின்வாரியத்தில் உதவி மின்பொறியாளராகவும், அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுநிலை ஆசிரியராக பணியாற்றும் இளைய மகன் திரு.G.சுரேஷ்குமாரின் துணைவியார் திருமதி.G.சித்ராதேவி., M.B.A., அவர்கள் தனியார் வங்கியில் அதிகாரியாகவும் பதவி வகித்து வருகின்றனர். பள்ளியாசிரியராக பணியாற்றிவரும் ஒரே மகள் திருமதி.G.சூர்யகலா.M.Sc. B.Ed., அவர்களின் கணவரும், எழுத்தாளருமான திரு.R.நல்லையாராஜ். M.Com, M.Phil. B.Ed அவர்கள் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகின்றார்.

பாரம்பரியமிக்க, மெத்தப்படித்த குடும்பம், நீண்டநெடிய பொதுவாழ்வு, பல்வேறு பதவிகள்,பொறுப்புகள் என நிறைவான வாழ்வுக்கு சொந்தக்காரரான திரு.ஞானகுருசாமி அவர்களின் வாழ்க்கை, அரசியலில் களம் காணும் சமுதாய இளைஞர்களுக்கு சிறந்த முன்னுதாரணம் என்றால் மிகையல்ல. வரும் காலங்களில் திரு.ஞானகுருசாமி அவர்கள் அரசியலில் பல்வேறு வெற்றிகளைப்‌ பெற்று, வீழ்ந்து கிடக்கும் சமுதாயத்தை மீட்டெடுக்க வழிகாட்டியாய் இருந்து தன்னை அர்ப்பணிக்க வேண்டுமாய் வேண்டி வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved