🔴 LIVE | முப்பெரும் விழா 2023


யதுகுல கம்பளத்தாருக்கு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்!

மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாக சொல்லப்படும் கண்ணன் கம்சனையும், சிசுபாலனையும், நரகாசூரனையும் வதம் செய்வதற்காக அவதாரம் எடுத்ததாக புராணங்கள் சொல்கின்றன. தமிழ் மொழியில் கண்ணனாகவும், வடமொழியில் கிருஷ்ணனாகவும் அறியப்படும் கண்ணனின் அவதாரம் அற்புதங்களும் லீலைகளும் நிறைந்தது. கண்ணனின் பிறப்பைக்கொண்டாடும் விழாவாக இந்து சமயத்தைப் பின்பற்றும் மக்களால் இன்று (19.08.2022) தென்னிந்தியாவில் கோகுலாஷ்டமி என்றும், வடஇந்தியாவில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி,  நள்ளிரவு நேரத்தில் சிறையில் அவதரித்ததால் சமஸ்கிருத மொழியில்  ஜன்மாஷ்டமி என்றும்,  ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் (அட்டமி திதி) ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாளில் கொண்டாடப்படுகிறது. 

தனக்காக இல்லாமல் பிறருக்காக வாழ்ந்தவர் அதனால்தான் இவரை கண்ணா, முகுந்தா என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். கண்ணைப் போல காப்பவன் என்றும், முகுந்தா என்றால் வாழ்வதற்கு இடம் அளித்து, முக்தி அளிப்பவன் என்றும் நம்பப்படுகிறது. கோகுலாஷ்டமி அன்று பகவான் கண்ணன் நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே இன்றைய தினத்தின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இதனால் தான் கோகுலாஷ்டமி அன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து, அரிசி மாவால் கோலமிட்டு, மாவிலை தோரணங்களால் அலங்கரிக்கப்படுகிறது. ஆலிலை கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடி வைத்து வீட்டுக்குள் தத்தித்தத்தி நடந்து வருவதாக கருதி வாசலில் தொடங்கி பூஜை அரை வரை குழந்தையின் கால் தடங்களை அரிசி மாவால் பதிக்கப்படுகிறது.

1982 ம் ஆண்டு முதல் தமிழக அரசு கோகுலாஷ்டமி தினத்தை பொது விடுமுறையாக அளித்துள்ளது. வட இந்தியாவில் கிருஷ்ண ஜெயந்தி ராசலீலா மற்றும் தகி அண்டி (தயிர்க் கலசம்) என வட இந்தியாவில் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ராசலீலா என்பது கிருட்டிணனின் இளமைக்கால வாழ்வை, கோகுலத்தில் கோபியர்கள் எனப்படும் இளம்பெண்களுடன் விளையாடிய காதல் விளையாட்டுக்களை நடிப்பதாகும். 

மகாராட்டிரத்தில் பிரபலமாக உள்ள தகி அண்டி என்பது உயரத்தில் தொங்க விடப்பட்டுள்ள வெண்ணைத்தாழியை சிறுவர்கள் (கோவிந்தாக்கள்) நாற்கூம்பு (பிரமிடு) அமைத்து மேலேறி அதனை உடைப்பதாகும். இவ்வாறு கோவிந்தாக்கள் கூம்பின் மேலேறும் போது, தண்ணீர் பீய்ச்சி அடித்து, அவர்களை ஏறவிடாது தடுப்பதாகும். தமிழகத்தில் உறியடி என்றழைக்கப்படும் இவ்விழாவானது புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமை அன்று பல கிராமங்களில் நடைபெறுகிறது.

கோகுலாஷ்டமியை முன்னிட்டு குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர் உள்ளிட்டோர் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆடு மேய்க்கும் கிருஷ்ணரை மையமாகக்கொண்டு யதுகுல வம்சம் என்று அடையாளப்படுத்தப்பட்டு வரும் கம்பளத்தார் சமுதாயத்திற்கு கோகுலாஷ்டமி சிறப்புக்குறியது. இந்நாளில் மக்கள் எல்லா நலனும், வளமும் பெற்று வாழ www.thottianaicker.com இணையதளம் சார்பாக வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved