🔴 LIVE | முப்பெரும் விழா 2023


உகாதி பண்டிகை நல்வாழ்த்துகள்! உகாதி வழிபாடு செய்வது எப்படி?

உகாதி பண்டிகையை புதிய காரியங்கள் தொடங்க ஏற்ற நாள் என்பார்கள். இன்றைய தினம் செய்யும் சுபகாரியங்களுக்கு நாள், நட்சத்திரம் கூட பார்க்கமாட்டார்களாம். ஏனென்றால், இந்து சாஸ்திரங்களின்படி பிரம்மதேவன் தன்னுடைய படைப்புத்தொழில் தொடங்கிய நாள் தான் உகாதி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. கலியுகம் தொடங்கிய நாளாகவும் இந்த நாள் தான் சொல்லப்படுகிறது.

சைத்ர மாதத்தில் வசந்த கால தொடக்கத்தைக் குறிப்பதால் முக்கியமான நாளாக குறிப்பிடப்படுகிறது. அதனால் புதிய முயற்சிகள் மேற்கொள்ள இந்த நாள் சிறந்த நாளாக கருதப்படுகிறது. தமிழ், மலையாள மாதங்கள் எப்படி சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறதோ, அதைப்போலவே தெலுங்கு, கன்னட மொழியின் மாதங்கள் நிலவின் இயக்கத்தை வைத்து கணக்கிடப்படுகிறது. 

உகாதி பண்டிகை கொண்டாட்டம்:

உகாதி தினத்தில் அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளியல் செய்ய வேண்டும். நீராடிய பின் புத்தாடைகள் அணிந்து கொண்டு, யுகாதி அல்லது உகாதி பச்சடியுடன் அறுசுவை விருந்து சமைத்து பண்டிகை கொண்டாடுவார்கள். அதென்ன உகாதி பச்சடி? அதாவது மனிதனுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சி, துக்கம், வெற்றி, தோல்வி என அனைத்து விஷயங்களும் கலந்து காணப்படுவது போல இந்த பச்சடியும் எல்லா சுவைகளும் கொண்டு செய்யப்படும். 

வெல்லம், வேப்பம்பூ, மாங்காய், புளி, உப்பு, மிளகாய் எல்லாம் சேர்த்து கலவையாக பச்சடி சமைப்பது தான் உகாதி வழக்கம். தமிழ் புத்தாண்டை போலவே உகாதி புத்தாண்டிலும் பஞ்சாங்கம் படிக்கும் பழக்கம் வைத்திருக்கிறார்கள். இந்த நாளில் வீட்டில் கோலங்களும், மாவிலை தோரணங்களும் களைகட்டும். 

உகாதி பண்டிகை எப்போது?

இந்த ஆண்டு உகாதி பண்டிகை ஆனது நாளை (மார்ச் 22ஆம் தேதி) கொண்டாடப்படுகிறது. நாளைய தினம் அதிகாலை 12.01 வரை மட்டுமே அமாவாசை திதி இருக்கிறது. அதன் பின் இரவு 10:24 மணி வரை பிரதமை திதியும், அதன் பின் துவிதியை திதியும் வரும். நாளை சூரியன் உதிக்கும் முன்பே அமாவாசை முடிவதால், அன்று நாள் முழுக்க பிரதமை திதியாக தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. 

உகாதி வழிபாடு:

உகாதி நாளில் பிரம்ம முகூர்த்த வேளையான அதிகாலை அல்லது காலை 6 மணிக்கு முன் அதாவது சூரிய உதயத்திற்கு முன்பாக வீட்டு பூஜை அறையில் 5 தீபங்கள் ஏற்ற வேண்டும். சாணம் அல்லது மஞ்சளால் விநாயகர் பிடித்து வைக்க வேண்டும். வெள்ளை எருக்கு விநாயகரை வீட்டில் வைத்திருந்தால் கெட்ட சக்திகள் விலகும் என்பது ஐதீகம். ஆகவே வெள்ளை எருக்கால் செய்யப்பட்ட பிள்ளையாரை வாங்கி வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். சாணம் அல்லது மஞ்சளால் ஆன பிள்ளையார் அல்லது வெள்ளை எருக்கால் செய்த விநாயகருக்கு அருகம்புல் சார்த்தி ஏதேனும் ஒரு நைவேத்தியம் வைத்து வழிபடலாம். உகாதி அன்று இப்படி பிள்ளையாருக்கு தூப, தீப ஆராதனை காட்டி வழிபாடு செய்தால் வாழ்க்கை வளமாகும் என்பது நம்பிக்கை. 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved