🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கரிசல் மண் ஈன்றெடுத்த மாவீரன் அழகுமுத்துகோன் 266 வது பிறந்தநாள்!

கரிசல் மண் ஈன்றெடுத்த மாவீரன் அழகுமுத்துக்கோன் 266 வது பிறந்தநாள் இன்று. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கட்டாலங்குளம் கிராமத்தில் பிறந்தார். தந்தை மன்னர் அழகுமுத்துக்கோன்(அழகுமுத்து என்பது இவர்களது குடும்பப்பெயர் பல தலைமுறைக்கு முன்பிருந்து தற்போதுவரை இப்பெயர் உள்ளது) தாய் அழகுமுத்தம்மாள். அவர் எட்டயபுரம் பாளையத்தில் படைத்தளபதியாக பணியாற்றினார்.1725-ம் ஆண்டு கட்டாலங்குளம் மன்னராக முடி சூட்டி கொண்டார். 1728-ம் ஆண்டு வீர அழகுமுத்துக்கோன் பிறந்தார்.

1750 -ல் தந்தை மன்னர் அழகுமுத்துக்கோன் அனுமந்தகுடி போரில் வீர மரணம் அடைந்தார். அதே ஆண்டு தன்னுடைய 22 வயதில் மன்னராக முடிசூடிக்கொண்டார்.

எட்டையபுரத்திலும் அதனை சுற்றியுள்ள பாளையங்களில் வரி வசூலிக்க, ஆங்கிலேயத் தளபதி அலெக்சாண்டர் கிரேன் மற்றும் மருதநாயகம் (கான்சாகிப்) வந்தனர். இதை கேள்விப்பட்ட எட்டையபுரம் மன்னர் உடனே ஆலோசனை கூட்டத்தை கூட்டினார்.

வியாபாரம் செய்ய வந்த கும்பினியர்களுக்கு வரி வசூலிக்க ஏது உரிமை? என கேள்வி கேட்டு கான்சாகிப்பிற்கு கடிதம் எழுதினார் மன்னர். கடிதத்தைக் கண்ட கான்சாகிப் தன் படையுடன், பீரங்கி படையையும் சேர்த்து கொண்டு எட்டையபுரத்தை தாக்க தொடங்கினான்.

வீர அழகுமுத்துக்கோனுக்கும் முகம்மது யூசுப் கானுக்கும் பெத்தநாயக்கனூர் கோட்டையில் போர் நடந்தது. போரில் வீர அழகுமுத்துகோனின் வலது கால் சுடப்பட்டது.

இருப்பினும் 3 மணி நேரம் போர் தொடர்ந்தது. இறுதியில் வீர அழகுமுத்துக்கோனும் அவருடைய 6 தளபதிகள் மற்றும் 248 போர் வீரர்களும் இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு நடுக்காட்டூர் என்னும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தாய் மண்ணின் உரிமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடிய மாவீரன் அழகுமுத்துக்கோனை நேருக்கு நேர் சந்திக்க பயந்த கும்பினியப்படை, அவனது கைகளிலும் கால்களிலும் விலங்குகளைப் பூட்டி, பீரங்கிக்கு முன்னால் நிறுத்தியது.

அவனைப் போலவே கைகளில் பூட்டப்பட்ட விலங்குகளோடு அவனது ஆறு துணைத் தளபதிகளும் 248 வீரர்களும் நிறுத்தப்பட்டார்கள்.

எங்களை எதிர்ப்போர்க்கு இதுதான் கதி என்று கும்பினிப்படை எக்காளமிட்டபடி அவர்களை சுற்றிச்சுற்றி வந்தது. `ம்’ என்றால் பீரங்கிகள் முழங்கும். வீரன் அழகு முத்துக்கோனும் அவனது வீரர்களும் உடல் சிதறிப் போவார்கள்.

“மன்னிப்புக் கேட்டால் இக்கணமே விடுதலை; வரி கொடுக்க சம்மதித்தால் உயிர் மிஞ்சும்” என்று கும்பினிப்படை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், “தாய் நாட்டின் மானத்துக்காக மரணத்தை முத்தமிடவும் நாங்கள் தயார்” பீரங்கி முன் நின்று சாகும் தருவாயிலும் தன்னைச் சேர்ந்த மற்ற எவரையும் காட்டிக்கொடுக்க மாட்டேன் என்ற வீரன் அழகுமுத்துக் கோனின் கர்ஜனையைக் கேட்டு கும்பினிப்படை அதிர்ந்தது. ஆத்திரம் கொண்டது.

அவரின் இருநூற்று நாற்பத்தெட்டு வீரர்களின் தோள்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. நிறுத்தி வைக்கப்பட்ட ஏழு பீரங்கிகளின் வாயில் இடப்பக்கம் மூன்று தளபதிகளையும் வலப்பக்கம் மூன்று தளபதிகளையும் நடுவில் வீரன் அழகுமுத்துக்கோனையும் நிறுத்தினார்கள்.

பீரங்கிகள் வெடித்துச் சிதறின. வீர மைந்தர்களின் ரத்தத்தால் நனைந்தது நடுக்காட்டுச் சீமை.இந்தியாவின் விடுதலைக்காக தன் இன்னுயிரை முதல் காணிக்கையாக்கி இந்திய விடுதலை வரலாற்றின் பக்கத்தில் இடம்பிடித்துக் கொண்டார் வீரன் அழகுமுத்துக்கோன்.

இந்திய வரலாற்றில் 1857-ல் நடைபெற்ற சிப்பாய் கலகம் தான் முதல் சுதந்திரப்போராட்டம் என்று வரலாறு மாற்றி எழுதப்பட்டுள்ளது. ஆனால் அதற்கும் நூறாண்டுகளுக்கு முன்பே அழகுமுத்துக்கோன் ஆங்கிலேயர்களை எதிர்த்து சமர்புரிந்த வரலாறு இந்திய ஆதிக்க சக்திகளால் மறைக்கப்பட்டு வருகிறது.

காலம் ஒருநாள் மாறும் உண்மை வரலாறு தன் இடத்தை மீட்டு அழகுமுத்துக்கோனை அலங்கரிக்கும். எட்டயபுரம் கம்பளத்தாரின் கரம்கோர்த்து போரிட்ட மாவீரன் பிறந்தநாளில் வணங்குவோம்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved