தெலுங்கானா அமைச்சர் பிறந்தநாள் விழா - இராஜகம்பளத்தார் சார்பில் நேரில் வாழ்த்து!
தெலுங்கானா மாநிலத்தில் கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் ஒளிப்பதிவு அமைச்சராக உள்ளவர் தலசானி சீனிவாச யாதவ். 1986 இல் ஹைதரபாத் மாநகராட்சி உறுப்பினர் தேர்தலில் ஜனதா கட்சி வேட்பாளராக போட்டியிட்டு அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய சீனிவாச யாதவ், அதன் பிறகு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் வணிகவரித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். ஆந்திர மாநிலத்திலிருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்ட நிலையில் நடைபெற்ற தேர்தலிலும் தெலுங்கு தேசம் கட்சியில் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். சந்திரபாபு நாயுடுவின் மிக நெருங்கிய நண்பரான தலசானி சீனிவாச யாதவ் ஆந்திர அரசியலில் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக இருந்தார்.
மாநில பிரிவினைக்குப்பிறகு, தெலுங்கானா மாநிலத்தில் செயல்பாட்டைக் குறைத்துக்கொண்ட தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திரா அரசியலில் முழு கவனத்தை செலுத்தி வந்தது. இதனையடுத்து தெலுங்கு தேசம் கட்சியில் தன்னோடு பயணித்த சந்திரசேகரராவ் அழைப்பை ஏற்று, தெலுங்கானா ராஸ்ட்ரிய சமிதி கட்சியில் இணைந்து 2014 முதல் வணிகவரித்துறை அமைச்சராகவும், 2019 முதல் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார். தெலுங்கானா முதல்வரின் நம்பிக்கைக்குறியவராகவும், ஹைதரபாத் மாநகரின் முடிசூடா மன்னராகவும் வலம் வரும் தலசானி சீனிவாச யாதவ், தமிழகத்தின் அமைச்சர் சேகர்பாபு அவர்களை அரசியல் வட்டாரத்தில் குறிப்பிடுவதுபோல், 24 மணி நேரமும் கால்களில் சக்கரத்தைக்கட்டிக்கொண்டு தெலுங்கானாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் சுற்றிச்சுற்றி வலம் வருபவர். தினமும் காலையில் அவர் இல்லத்திலிருந்து புறப்படும்போது நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் காத்திருப்பது அன்றாட நிகழ்வுகளில் ஒன்று.
இந்நிலையில், தெலுங்கானா மாநில திரைத்துறையின் சார்பில் அமைச்சரின் பிறந்தநாள் கடந்த வெள்ளிக்கிழமை (6.10.2023) அன்று ஹைதரபாத் கோட்லா விஜயபாஸ்கர ரெட்டி ஸ்டேடியத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதற்காக விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், பொதுச்செயலாளர் செந்தில்குமார் இராமராஜ், நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை அமைப்புச் செயலாளர் மு.சரவணன், திருப்பூர் ஏஞ்சல் பிரிண்டிங் உரிமையாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு, இராஜகம்பளத்தாரின் சார்பில் அமைச்சருக்கு பிறந்தநாள் பரிசு வழங்கி வாழ்த்துக்கூறினர்.