ஸ்தாபக செயலாளருக்கு சங்கத்தின் சார்பில் இறுதி அஞ்சலி - தலைவர்கள் இரங்கல் செய்தி
சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் ஸ்தாபக செயலாளரும், மேனாள் ஆசிரியரும், க.சுப்பு அவர்களின் சகலையுமான ஆர்.சுப்பையா (87) வயது மூப்பு காரணமாக நேற்று (26.11.2023) மதியம் சென்னை கொளத்தூரிலுள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார். அன்னாரது உடலுக்கு இறுதிச்சடங்கு முடிந்து ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இதன் விவரம் வருமாறு,
விருதுநகர் மாவட்டம், பாலவநத்தம் கிராமத்தில் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த சுப்பையா அவர்கள், கிராமத்தின் முதல் பட்டதாரி மாணவராக இளங்கலை கணிதவியலில் பட்டம் பெற்று, திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள AGM பள்ளியில் தற்காலிக கணித ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி பின் அதேபள்ளியில் தலைமை ஆசிரியராக ஓய்வு பெற்றார். ஆசிரியப்பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் சென்னையில் குடியேறிய சுப்பையா அவர்கள், தென் மாவட்டங்களில் இருந்து சென்னையில் குடியேறிய கம்பளத்தார்களை ஒன்றிணைத்து வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தை தொடங்கி சமுதாயப்பணியில் ஈடுபடத்தொடங்கினார். தொலத்தொடர்பு வசதியற்ற நிலையில் சென்னையின் மூலைமுடுக்கெல்லாம் சென்று கம்பளத்தார்களை அடையாளங்கண்டு சங்கத்தின் உறுப்பினராக சேர்த்து இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தை வலுவாக்கினார்.
சங்கத்தின் பொதுச்செயலாளராக தொலைநோக்குப்பார்வை கொண்ட சுப்பையா அவர்கள், கம்பளத்தார் சமுதாயத்தினர் அதிக அளவில் அரசு நிர்வாகத்தில் இடம்பெற வேண்டுமென்பத்தில் அதிக அக்கறை கொண்டவராக, அதற்கேற்ப சங்க செயல்பாடுகளை வடிவமைத்து செயல்பட்டார். தலைநகர் சென்னையில் கம்பளத்தாரின் அடையாளமாக, இளம் தலைமுறையினருக்கு ஏணிப்படியாக சங்கம் விளங்க வேண்டும் என்ற அடிப்படையில் உறுப்பினர்களிடம் சிறுக சிறுக நிதி சேர்த்து சங்கத்திற்கு சொந்தமாக நிலம் வாங்கி, பின்னர் அதில் சிறந்த கட்டிடம் அமைய அடித்தளமிட்டார். தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக பொதுச்செயலாளர் பொறுப்பு வகித்து, தன்னால் வேகமாக செயல்படமுடியாத முதுமையை அடைந்தவுடன் இளம் தலைமுறையினரை அடையாளம் கண்டு சங்கப்பொறுப்புகளை ஒப்படைத்து, சங்கம் தொடர்ந்து சீரோடும், சிறப்போடும் வளர உறுதுணையாக இருந்தார்.
உடல் உழைப்போடு சங்கத்திற்கு எப்போது நிதிகேட்டாலும் வாரி வழங்கும் வள்ளல் மனம் படைத்த சுப்பையா அவர்கள், தான் பொறுப்பிலிருந்து விலகிய பின்னர் கட்டபொம்மன் அகாடமி அமைக்க ரூபாய் இரண்டு லட்சம் நன்கொடை வழங்கி இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் கல்விக்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கிட உறுதுணையாக நின்றார். இதன் பலனாக சமுதாய வரலாற்றில் முதன்முறையாக கம்பளத்தார் சங்கம் சார்பில் அரசுத்தேர்வுகளுக்கு தயாராகும் பத்துக்கும் மேற்பட்ட மாணவ-மணவருக்கு முறைப்படியான பயிற்சி வழங்கும் நிலைக்கு சங்கம் வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக பல அறுவை சிகிச்சைகள் செய்த பின்னரும் தன் மன வலிமையால் பலமுறை மீண்டெழுந்தார். சங்கம் தொடங்கியதிலிருந்து கடைசி சில மாதங்கள் தவிர்த்து அனைத்து மாதாந்திரக்கூட்டத்திலும், காணொளிக்கூட்டத்திலும் தவறாமல் கலந்துகொண்டு, தான் உருவாக்கிய சங்கத்தின் வளர்ச்சியின் ஒவ்வொரு அடியிலும் தன் நிறைவான பங்களிப்பை வழங்கி வந்தார்.
ஆசிரியராக சமுதாயத்திற்கு புகழ்மிக்க பல மாணவர்களை உருவாக்கிய சுப்பையா அவர்கள், தன் இறுதிகால மருத்துவ சிகிச்சையை தன்னிடம் பயின்று இந்தியாவில் சிறந்த மருத்துவ சேவையை வழங்கிவரும் காவேரி மருத்துவமனையின் நிரவாக இயக்குநர் அரவிந்த் செல்வராஜிடம் பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தனது 87 வயதில் நேற்று காலமானார்.
சுப்பையா அவர்களின் இறுதிச்சடங்கு இன்று காலை 10 மணியளவில் சென்னை கொளத்தூரிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. முன்னதாக சங்கத்தின் ஸ்தாபன செயலாளரின் உடலுக்கு சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன் சங்கத்தின் பொருளாளர் எஸ்.இராமராஜு, துணைத்தலைவர் நாராயணசாமி, மூத்த ஆலோசகர் சுப்பையா JR, ஒருங்கிணைப்பாளர்கள் சுந்தரராஜன், தங்கம், ரவுண்ட் பில்டிங்க் முருகன், சமூகநீதி கூட்டமைப்பின் செயல் தலைவர் பி.இராமராஜ் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். இதன் பிறகு வில்லிவாக்கத்திலுள்ள மின் மயானத்திற்கு உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
சமுதாயத்தின் மிக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பையா அவர்களின் மறைவுக்கு தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகத்தின் கௌரவ தலைவர் நல்லாசிரியர் சங்கரவேலு, கட்டபொம்மன் கல்வி அறக்கட்டளை தலைவர் மலைராஜன், நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, பிடிஓ நாகப்பன்,கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ், போடி சௌந்திரபாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.