எமதர்மராஜனை ஓடஓட விரட்டும் கட்டுக்கடங்கா காளை - பொதுச்செயலாளர் திரு.சுப்பையா இராமசாமி.
திரு.சுப்பையா இராமசாமி அவர்கள் 15.07.1936-இல் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம் பாலவந்தம் கிராமத்தில் திரு.இராமசாமி – திருமதி.பாம்புலம்மாள் தம்பதியினருக்கு விவசாய குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். கணித துறையில் இளங்கலை பட்டமும் (பி.எ), கல்வியியலில் இளங்கலை பட்டமும் (B.T) பெற்றுள்ளார். இவருக்கு திருமணமாகி திருமதி.காஞ்சன மாலா என்ற மனைவியும், S.லெனின், S.ஸ்டாலின் வரதராஜன் என்ற இரு மகன்களும் உள்ளனர்.
திரு.சுப்பையா ராமசாமி அவர்கள் 1960-இல் திருச்சி மாவட்டம், துறையூர் அருகேயுள்ள எரகுடியில் A.G.M உயர்நிலைப்பள்ளியில் கணிதத்துறையில் தற்காலிக ஆசிரியராக பணியைத் தொடங்கினார். இரண்டாண்டுகள் அப்பள்ளியில் பணியாற்றியவர் விருதுநகரிலுள்ள ஹாஜிபி சையத் முகமது உயர்நிலைப்பள்ளியில் 1963-64 ஆம் ஆண்டுகளில் கணித ஆசிரியராக பணியாற்றினார். அதன்பின் நெருங்கிய நண்பரின் வேண்டுகோளை ஏற்று பள்ளிப்பாட புத்தகங்கள் அச்சிடும் நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கியவர் 1970 வரை அந்நிறுவனத்தில் பணியாற்றினார். அச்சகத்தில் பணியாற்றிக்கொண்டே கல்வியியல் பட்டம் பெற்றவர். அதன்பின் 1970-இல் மீண்டும் எரகுடி A.G.M உயர்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக இணைந்தார். 1984-இல் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியை ஏற்றுக்கொண்டவர் 1994-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர், ஓராண்டு பணி நீட்டிப்புக்குப்பின் 1995-இல் ஓய்வு பெற்றார். அதுவரை அதிகபட்சமாக 55% பேர் தேர்ச்சி பெற்று வந்த நிலையில், அப்பள்ளியின் தேர்ச்சி விகிதம் 100% ஆக உயர்ந்து அப்பகுதியில் A.G.M உயர்நிலைப்பள்ளி புகழ்பெறத்தொடங்கியது. திரு.சுப்பையன் அவர்களின் கணிதப்பாடத்தில் மாணவ-மாணவர்கள் சராசரி மதிப்பெண்கள் 90%-க்கும் அதிகமாக பெற்று வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. திரு.சுப்பையா அவர்களிடம் பயின்ற மாணவ-மாணவியர்கள் பல்வேறு துறைகளில் புகழ்பெற்று விளங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓய்வு பெற்றபின் சென்னையில் குடியேறியவர், சமுதாயப்பணிகளில் ஈடுபடத்தொடங்கினார். இதன் தொடர்ச்சியாக சென்னையுள்ள சமுதாய நண்பர்களை ஒன்றிணைத்து 2006 ஆம் ஆண்டு சென்னை. வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தை தொடங்கி, அதன் முதல் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார். பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்ட ஒருசில ஆண்டுகளில் சென்னையிலுள்ள சங்க உறுப்பினர்கள், மூத்தமுன்னோடிகள் உதவியுடன் சங்கத்திற்கென முதலில் ¾ கிரவுண்டு நிலமும், அதன்பின் மேலும் ஒருசில ஆண்டுகளில் 1.50 கிரவுண்ட் இடமும் சென்னை அருகேயுள்ள செங்குன்றத்தில் வாங்கப்பட்டது. 80 வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கியவர், தொடர்ந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து நிதி திரட்டி 3000 சதுர அடியில் தரைதள கட்டுமானப்பணியையும் நிறைவு செய்வதற்கு அரும்பாடுவட்டவர். தொடர்ந்து சங்கம் சிறப்பாகவும், துடிப்பாகவும் இயங்கவேண்டும் என்ற அடிப்படையில் இளைஞர்களுக்கு வழிவிட்டு, பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகி, தற்பொழுது சங்கத்தின் மூத்த ஆலோசகர்களில் ஒருவராக உள்ளார். சங்கத்தின் வளர்ச்சியிலும், சமுதாயத்தின் வளர்ச்சியிலும் மிகுந்த அக்கரை கொண்டவர் பதவி விலகிய பின் ரூ.200000/- (ரூபாய் இரண்டு லட்சம் ) நன்கொடை வழங்கி சங்கத்தின் “பர்ப்பிள் கிளப்” உறுப்பினராக இணைந்து பணியாற்றி வருகிறார். தற்பொழுது 84-வயதை கடந்துவிட்ட நிலையிலும், மூட்டு மாற்று அறுவைச்சிகிச்சை ஒருமுறை, இடுப்பு எழும்புமுறிவு அறுவை சிகிச்சை ஒருமுறை என இருமுறை அறுவைச்சிகிச்சை செய்துகொண்ட பின்பும், சங்கத்தின் மாதாந்திர கூட்டத்திற்கு முதல் ஆளாக செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள திரு.சுப்பையா அவர்கள், வாய்ச்சவடால் விடும் இளைஞர்கள் பின்பற்ற வேண்டிய முன்னுதாரணம். மேலும் வருடந்தோறும் ஜனவரியில் கொண்டாடப்படும் மாவீரன் பிறந்தநாளுக்கு அமெரிக்கா சுற்றுப்பயணத்தில் இருந்தாலும் பயண திட்டத்தை சுருக்கிகொண்டு தவறாமல் கலந்து கொள்பவர் தி ரு.சுப்பையா.
தொடர்ந்து சங்க நிர்வாகிகளுக்கு ஊக்கமும், உற்சாகமும் வழங்கி வரும் திரு.சுப்பையா அவர்களுக்கு, அரசு நிர்வாகத்தில் குறிப்பாக ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், காவல்துறை, நீதித்துறை போன்ற உயர்பதவிகளில் இராஜகம்பள சமுதாய இளைஞர்கள் அதிகமானோர் இடம்பெற வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருபவர். சென்னையில் திரு.சுப்பையா அவர்கள் அட்மிட் ஆகாத பிரபலமான மருத்துவமனைகளே இல்லை என்ற அளவில் அப்பலோ, காவேரி, மெட்ராஸ் மெடிக்கல் மிஷன், மியாட், சுந்தரம் பவுண்டேசன், சவுந்திர பாண்டியன் போன் & ஜாயின்ட் உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டு, மருத்துவர்களே ஆச்சரியப்படும் வகையில் எமனை வென்று வீடு திரும்பியுள்ளார். இதனால் அனைத்து மருத்துவமனையிலும் இவருக்கு மருத்துவ நண்பர்கள் உண்டு. தற்போது முழு ஆரோக்கியத்துடன் சமூக வலைதளங்களில் சுறுசுறுப்புடன் இயங்கி வருகிறார். சர்க்கரை, ரத்தக்கொதிப்பு என எல்லாவிதமான நோய்கள் இருந்தாலும், மரணத்தைப்பற்றி கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் கவலையற்று இருப்பவர் திரு.சுப்பையா. மன உறுதிக்கும், சுறுசுறுப்பிற்கும் பெயர்போன திரு.சுப்பையா அவர்கள், இன்னும் பல்லாண்டு ஆரோக்கியத்தோடு வாழ்ந்து, சமூகத்திற்கு முதுமையை எதிர்கொள்வதற்கு நல்ல எடுத்துக்காட்ட திகழ அன்புடன் வேண்டுகிறோம்.