🔴 LIVE | முப்பெரும் விழா 2023


நகர்ப்புற உள்ளாட்சியில் களம் காணும் கம்பளத்தார்கள்!

தமிழகத்தில் வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் பல்வேறு கட்சிகளின் சார்பில் நமது கம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த பலர் போட்டியிடும் வாய்ப்பினை பெற்றுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், ஆயக்குடி பேரூராட்சிக்குட்பட்ட 2-வது வார்டில் திருமதி.சுதாமணி கார்த்திகேயன் திமுக வேட்பாளராக களம் காணுகிறார். இவரது கணவர் திரு.கார்த்திகேயன் (இவர் பற்றி விரிவாக அறிய) திமுக-வில் நகர செயலாளர் பதவியும், ஆயக்குடி பேரூராட்சி தலைவராகவும் பொறுப்பு வகித்தவர். தீவிர திமுக தொண்டரும், அம்மாவட்ட அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களின் அபிமானத்தையும், அன்பையும் பெற்றிருந்தவர், கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனா பெருந்தொற்றால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சட்டமன்ற தேர்தலில் பழனி சட்டமன்ற திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமாருக்காக தன் சொந்த காசை செலவு செய்து கடுமையாக  உழைத்தவர் திரு.கார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கும், கட்சிக்கும் தீவிர விசுவாசமாக இருந்தவர் இயற்கை எய்தியபொழுதிலும் அவரின் உழைப்பையும், தியாகத்தையும் மதிக்கும் வகையில் திருமதி.சுதாமணி மார்த்திகேயனுக்கு வாய்ப்பு வழங்கிய மாவட்ட அமைச்சரும், செயலாளருமான மாண்புமிகு.ஐ.பெரியசாமிக்கு கம்பளத்தார்களின் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இராமநாதபுரம் பரமக்குடி நகராட்சி 33-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக கூட்டணி சார்பில் மறுமலர்ச்சி திமுக சார்பில் மாவட்ட செயலாளர் கே.ஏ.எம்.குணா அவர்கள் பம்பரம் சின்னத்தில் போட்டியிடுகிறார். வைகோ அவர்களின் தீவிர விசுவாசியான குணா அவர்கள் கால்நூற்றாண்டுகளுக்கு மேலாக அரசியலில் இருந்து அப்பகுதி மக்களுக்கு நன்கு பரிட்சையமானவர்.( திரு.கே.ஏ.எம்.குணா பற்றி மேலும் அறிய). இராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதிக்கு அடுத்து நம்மவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும் பகுதி பரமக்குடி. அப்பகுதி மக்களிடையே செல்வாக்குமிக்கவர் கே.ஏ.எம்.குணா.

கரூர் மாநகராட்சி 47-வது வார்டு மாமன்ற உறுப்பினர் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் திரு.கேசவன் அவர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தீவிர விசுவாசியான கேசவன் அதிமுக-வில் பல ஆண்டுகளாக இருந்து சிறப்பாக பணியாற்றி வருபவர். கரூரில் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை அமைத்துக் கொடுத்ததில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் பங்கு முக்கியமானது.

கரூர் மாவட்டம்,அரவக்குறிச்சி பேரூராட்சி 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக வேட்பாளராக களமிறங்குகிறார் திருமதி.சங்கீதா ஆனந்தகுமார். இவர் திராவிட முன்னேற்றக்கழகத்தின் தொடக்ககால உறுப்பினராக இருந்து கரூர் மாவட்டத்தில் திராவிட முன்னேற்றக்கழகத்தை வளர்த்தெடுத்தவர்களில் ஒருவரான அமரர்.மல்லையன் (இவர் பற்றி விரிவாக அறிய) அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த மூன்றாம் தலைமுறை வேட்பாளர். அரவக்குறிச்சி ஒன்றிய பெருந்தலைவாரகவும், கட்சியின் செயலாளராகவும் இருந்தவர் அமரர்.மல்லையன். இவரது மகன் திரு.அண்ணாத்துரை (இவர் பற்றி மேலும் அறிய) அவர்களும் கட்சியில் அரவக்குறிச்சி நகர செயலாரகவும் நகரமன்ற தலைவராகவும் இருந்தவர். இவரது மகனான திரு.ஆனந்தகுமார் இளைஞரணி அமைப்பாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரின் துணைவியாரான திருமதி.சங்கீதா தற்போதைய வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இராஜபாளையம் நகராட்சியில் கடும் போட்டிக்கு மத்தியில் 31-வது வார்டில் திமுக வேட்பாளராக களமிறங்க வாய்ப்பு பெற்றுள்ளவர் திருமதி.P.இராதா அவர்கள். அந்த வார்டில் மிகக்குறைந்த சொற்ப எண்ணிக்கையிலேயே சமுதாய வாக்குகள் இருந்தபொழுதும் இவரது கணவர் திரு.முருகன் இயக்கத்திற்கு ஆற்றிவரும்  கட்சிப்பணியை ஆங்கீகரிக்கும் வகையில் வாய்ப்பு வழங்கியுள்ளார் அம்மாவட்ட அமைச்சர் மாண்புமிகு கே.கே.எஸ்.எஸ்.ஆர். அவர்கள். 

இவர்களைத்தவிர பழனி நகராட்சிக்குட்பட்ட வார்டில் கம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்தவர் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக களமிறங்குகிறார்.

மேலும் ஆயக்குடி பேரூராட்சி 8-வது வார்டில் சுயோட்சையாக களமிறங்குகிறார் திரு.வெங்கடேஷ்குமார்.

நகர்ப்புற பகுதிகளில் கம்பளத்தார்கள் சொற்ப அளவிலேயே வசித்தபொழுதும் கட்சியில் அவர்களின் சேவையை கருத்தில்கொண்டு அவரவர் சார்ந்த கட்சிகள் போட்டியிடும் வாய்ப்பினை வழங்கியுள்ளது. அவர்களுக்கு நம்மவர்கள் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் வழங்குவதோடு, பிற சமுதாய மக்களோடு கம்பளத்தாருக்கு இருக்கும் உறவை எடுத்துரைத்து வாக்குகளை பெற்றுத்தர வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved