🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சமுதாய தியாகிகள் - அரவக்குறிச்சி- திரு.மல்லையன்

அமரர்.திரு.S.மல்லையன் அவர்கள் 07.08.1925-ல் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள கரடிபட்டி எனும் கிராமத்தில் செல்வாக்குமிக்க விவசாயக் குடும்பத்தில் திரு.சுப்பா நாயக்கர்- திருமதி.பழனியம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தொடக்க காலத்தில் விவசாயப் பணியில் ஈடுபட்டு வந்தவர் திருமதி.முத்தம்மாள் என்பவரை மணம் புரிந்தார். இத்தம்பதியினருக்கு நான்கு மகன்களும், மூன்று மகள்களும் உண்டு.

இளம் வயதிலேயே திராவிட இயக்கத்தின் மீது பற்று கொண்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து பணியாற்றினார்.திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒன்றியக் கழகச் செயலாளராக நீண்டநாள் பணியாற்றினார்.கரூர் பகுதியில் செல்வாக்குமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவராதலால், திமுக வின் அனைத்து முன்னனி தலைவர்களின் நேரடி அறிமுகத்தைப் பெற்றவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னனி தலைவராக இருந்த திரு.அன்பில் தர்மலிங்கம் அவர்களின் நெருங்கிய நண்பராக இருந்தார். கட்சியின் பொதுக்கூட்டங்கள், தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு வரும் முக்கிய தலைவர்கள், உணவருந்தி செல்லும் முக்கிய இடமாக திரு.எஸ்.மல்லையன் அவர்களின் இல்லம் அமைந்தது. 1969-ல் அரவக்குறிச்சி ஒன்றிய பெருந்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு 1975 வரை அப்பதவி வகித்தார்.அன்றைய காலகட்டத்தில் நமது சமுதாயத்தில் பெருந்தலைவராக ஒருசிலரே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் தாண்டி சமுதாயத்தின் மீதும் அதிக அக்கறை கொண்டவர், கரூர் மாவட்டத்தில் கம்பளத்தார்களின் முகமாக விளங்கினார். பல்வேறு சமுதாயத்தலைவர்களின் வேடந்தாங்கலாக இவரது இல்லம் விளங்கியது என்றால் மிகையல்ல. இராஜகம்பள மகாஜன சங்கம் நடத்திய மாநாடுகளையும், பொதுக்கூட்டங்களையும் முன்னின்று நடத்தியதோடு, கரூர் பகுதிகளிலிருந்து பெருமளவில் சமுதாய மக்களை அழத்துச்சென்று பங்கேற்றார். சமுதாயப்பணிக்காக, தமிழகம் முழுவதும் கம்பளத்தார் வசிக்கும் பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, போக்குவரத்து வசதியற்ற அந்நாட்களில் வாரக்கணக்கில் வெளியூர்களில் தங்கி பணியாற்றியுள்ளார். சிறப்பு விருந்தினராகச் சென்று விருதுநகரிலுள்ள சமுதாயக் கட்டிடத்தை திறந்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மகாஜன சங்கம் மற்றும் தவீக பண்பாட்டுக்கழகத்தின் சார்பில் நடைபெறும் கொடியேற்று விழாக்களிலும், கட்டபொம்மன் பிறந்தநாள் விழாக்களிலும் கலந்து கொண்டு அதன் நிர்வாகிகளுக்கு ஆதரவும், பொருளுதவியும் செய்துள்ளார்.

தனது 64-ஆவது வயதில் (21.07.1989) காலமான திரு.மல்லையன் அவர்களின் இழப்பு சமுதாயத்திற்கு பேரிழப்பாக இருந்தது. அவரின் மகன்களில் ஒருவரான திரு.M.அண்ணாதுரை அவர்கள், பின்னாட்களில் அரவக்குறிச்சி நகர திமுகழக செயலாளராகும், நகரின் பேரூராட்சி தலைவராகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கம்பளத்தார் சமுதாயம் உள்ளவரை திரு.மல்லையன் அவர்களின் புகழ் நீடித்து நிலைக்கும். வாழ்க திரு.மல்லையன் அவர்களின் புகழ். வளர்க அவர் சமுதாயம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved