மிகுந்த ஆர்வத்துடன் விருப்பமனு அளித்த கம்பளத்தார்கள்!
தெலுங்குமொழி பேசும் சிறுபான்மை சமுதாயங்களில் இராஜகம்பளத்து தொட்டிய நாயக்கர்கள் தமிழகத்தில் பெரும்பான்மை மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவில் வசித்து வருவதோடு, அனைத்து அரசியல் கட்சிகளிலும் பொறுப்பு வகித்து வருகின்றனர். மேலும் உள்ளாட்சி அமைப்புகளில் 1500-க்கும் அதிகமானோர் இச்சமுதாயத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இவ்வளவு அதிகமானோர் உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்புவகிக்கும் தனிச்சிறப்பு தெலுங்குமொழி பேசும் வேறெந்த சமுதாயத்தினருக்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு அரசியல் பின்புலம், நீண்டநெடிய வரலாற்று பின்னனி இருந்தும், தொட்டிய நாயக்கர் சமுதாயத்திலிருந்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் இருப்பது இச்சமுதாய மக்களுக்கு மிகுந்த ஏக்கமாக இருந்து வருகிறது. கடந்த கால தேர்தல்களில் சட்டமன்றத்திற்கு போட்டியிட ஒருசிலரே கட்சிகளில் விருப்பமனு அளித்து வந்த நிலையில், இந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகோரி அதிகப்படியானோர் கட்சித்தலைமையிடம் விருப்பமனு அளித்திருப்பது சமுதாய மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
ஆளும் கட்சியான அஇஅதிமுக சார்வில் விளாத்திக்குளம் புதூர் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினரும், மூத்த அரசியல் பிரமுகருமான திரு.ஞானகுருசாமி, அரவக்குறிச்சி மேற்கு ஒன்றியச்செயலாளர் திரு.கோ.கலையரசன், மு.ஊராட்சி மன்றத்தலைவர் திரு.புகழேந்தி, வலுக்கலொட்டி மைனர் திரு.P.V.இராதாகிருஷ்ணன், கோவை, மாச்சநாயக்கன்பாளையம் திரு.D.சிவசாமி ஆகியோர் விருப்பமனு அளித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
இதேபோல் எதிர்க்கட்சியான திமுகவிலுள்ள முக்கிய பிரமுகர்களும், தேமுதிக, காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகளிலுள்ள தலைவர்களும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னெப்போதுமில்லாத அளவில் அதிகப்படியானோர் சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட ஆர்வமாக இருப்பது, அரசியலில் கம்பளத்தார்கள் சாதிக்கப்போகும் காலம் விரைவில் வரும் என்ற நம்பிக்கை அளிப்பதாகவுள்ளது.
விருப்பமனு அளித்துள்ள அனைத்து உறவுகளுக்கும் சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.