🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இன அரசியல் -1 : மனித இனத்தின் தோற்றமும் பரவலும் (3)

ஜியாகிராபிக்ஸ் மாகசீன் செப்டம்பர் 2006 இதழில் தற்காலமனிதர் ஆப்பிரிக்காவை விட்டு தென்னிந்தியாவையொட்டிய கண்டத்திட்டு வழியாக புலம்பெயர்ந்து சென்ற பாதையைக் காட்டும் நிலப்படம் உள்ளது. அக்காலக் கட்டத்தில் இப்போது உள்ளதைப் போலவே எல்லாக் கண்டங்களும் இருந்தன. எனினும் நிலப்பகுதி சில நூறு மைல் விரிவாக இருந்திருக்கும். இந்தியக் கரை சார்ந்த கண்டத்திட்டுப் பகுதியில் அதாவது கரையோரக் கடற்பகுதியில் ஆழ்கடல் அகழாய்வு செய்தால் இது பற்றிய சான்றுகள் கிடைக்கலாம் என்று கூறுகிறார் ஃபிளெமிங். இன்றைய மனிதனிடம் உள்ளவை 23×2 குரோமோசோம்கள். அவற்றில் அடங்கிய மரபணுக்கள் (Genomes) எண்ணிக்கை 30,000. நமது மரபணுக்களுக்கும் சிம்பன்சி மரபணுக்களுக்கும் 98.50 விழுக்காடு ஒற்றுமை உண்டு. ஒன்றரை விழுக்காடே மரபணு நிலையில் சிம்பன்சியிலிருந்து மனிதன் வேறுபட்டவன் என்றாலும் மனிதன் எவ்வளவு மாபெரும் கொடுமையான உயிரியாக மாறி விட்டான். 

கண்டங்கள் நகர்வுக்கொள்கை மற்றும் கண்டங்களின் கடலோரப் பகுதிகள் கடலுள் மூழ்கிய செய்தி ஆகியவற்றின் அடிப்படையில் கழக நூல்களிற்காணும் கடல்கோள் செய்திகளை இன்றைய அறிவியலுக்கேற்ப விளக்க வேண்டியுள்ளது. குமரி முனைக்கு தெற்கில் நிலப்பகுதிகள் கடல்கோளில் மூழ்கிய செய்திகளை கலித்தொகை 104-ம் சிலப்பதிகாரம் காடுகாண்காதையும் குறிப்பிடுகின்றன. தொல்காப்பியத்தின் முதல் உரைகாரர் ஆகிய, கி.பி. 10 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இளம்பூரணரும் இதை குறிப்பிடுகிறார். அவருக்குப் பின்னர் வந்த இறையனார் அகப்பொருள் உரையாசிரியரும் அடியார்க்கு நல்லாரும் இச்செய்தியை மேலும் விரிவுப்படுத்தி சற்று மிகைப்படுத்திக் கூறுகின்றனர். பண்டைத் தமிழிலக்கியம் கூறும்  இக்கடல்கோள் செய்தியைப் பற்றி எழுதப்பட்டுள்ள ஆய்வுரைகள் வருமாறு:-

i) ச.சோமசுந்தரபாரதி (1913) தமிழ்ப் பண்டை இலக்கியங்களும் தமிழகமும், சித்தாந்த தீபிகா XIV

ii). வி.ஜே. தம்பி பிள்ளை (1913) : மாணிக்கவாசகர் தொன்ம வரலாறு தமிழியன் ஆண்டிகுவாரி II-I.

iii) மறைமலையடிகள் (1930) மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்.

iv) ஏ.எஸ். வைத்தியநாத ஐயர் (1929): கீழைநாடுகளின் பிரளயத் தொன்மங்கள் : பம்பாய் வரலாற்றுக்  கழக ஜர்னல் II-1.

v) ஜே.பெரியநாயகம் (1941) மனுவின் பிரளயம் : தி நியூ ரிவியூ XI

vi) ஹீராஸ் பாதிரியர் (1954) தொல் இந்தோ நண்ணிலக்கரை நாகரிக ஆய்வுகள் இயல் VI பக். 411-439.

சதபதபிராமணம் 1,8 முதலியவற்றில் கூறப்படும் 'மனு பிரளயம்" திராவிடத் தொன்மத்திலிருந்து உருவாகியது என (iii) மற்றும் (iv) கூறுகின்றன. சுமெரியப் பிரளயக் கதைகூடப் பழந்தமிழ்க் கடல்கோள் தொன்மத்திலிருந்து உருப்பெற்றதே என (i) , (vi)ம் கருதுகின்றன. 

இந்தியமாக்கடலில், பழங்காலத்தில் ஒரு கண்டம் இருந்து அது கடலில் மூழ்கி விட்டது என்று 19ஆம் நூற்றாண்டு இறுதியில் ஹேக்கலும் வேறு சிலரும்  கருதி அதற்கு 'லெமூரியா" என்ற பெயரையும் இட்டனர். ஆனால் இன்றுள்ள அறிவியலறிஞர்களின் ஒருமித்த கருத்து என்ன? கண்டம் அளவுக்குப் பெரிய நிலப்பரப்பு எதுவும் எந்தக் காலத்திலும் கடலுள் மூழ்கிடவில்லை என்பதே அவர்கள் முடிவு எனக் கண்டோம். காந்திரதாவ் தமது 'முக்கடற்புதிர்கள்" நூலில் இதை 1974லேயே சுட்டியுள்ளார். எனினும் இதை யாரும் கண்டுகொள்வதில்லை.

'தொன்மை நாகரிகங்களைப் படைத்த மனித இனங்களை கொண்டிருந்த கண்டம் போன்ற பெருநிலப்பரப்புகள் எவையும் எந்தக் காலத்திலும் இந்திய, பசுபிக், அட்லாண்டிக் பெருங்கடல்கள் எவற்றிலும் இருந்திருப்பதற்கான வாய்ப்பு அறவே இல்லை எனலாம்.

இப்பொழுது அறிவியல் ஏற்றுள்ளது கண்ட நகர்வு மற்றும் பூமிப்பாளங்கள் கோட்பாடே (Continental drift and Plate Techtonics) யாகும். ஆயினும் கி.மு. 8,000-ஐ ஒட்டி உர்ம் (WURM) பனியூழி இறுதியில் கடல் மட்டம் உயர்ந்து உலகெங்கும் ஏறத்தாழ இருநூறு, முந்நூறு கல் அளவுக்கு கடற்கரைப் பகுதி கடலில் மூழ்கி விட்டது என்பதை இப்புதிய கோட்பாடும் ஏற்றுக் கொள்கிறது. அக்கடல்கோள் காலத்திற்கு முன்னர் இந்துப் பெருங்கடலில் உள்ள தீவுகள் மூலமாக ஆப்பிரிக்காவையும் தென்னிந்தியாவையும் இணைத்த வால் போன்ற நிலப்பகுதிகளும் சில (பின்னர் மூழ்கி விட்டவை)  இருந்திருக்கலாம் என்கிறார் வால்டர் பேர்சர்வீஸ். லெமூரியாக் கண்டக் கொள்கை நிலவி வந்த காலத்திலும் கூட ச.சோமசுந்தரபாரதி, மயிலை சீனி வேங்கடசாமி, எம். ஆரோக்கியசாமி போன்ற சிறந்த அறிஞர்கள் குமரிக்குத் தெற்கில் கடலுள் மூழ்கிய பகுதி கண்டம் அளவினதன்று, சிறு நிலப்பகுதியாக இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.  கா. அப்பாத்துரையாரும் கடல் கொண்ட தென்னாடு என்று குறிப்பிட்டதை அறிவோம்.  

1950களுக்குப் பின் லெமூரியாக் கண்டக் கொள்கையை அறிவியல் அறவே கைவிட்டு விட்டது என்பது உண்மைதான். கலித்தொகை, சிலப்பதிகாரம், பிற்கால உரையாசிரியர் நூல்கள் சுட்டும் கடல் கொண்ட தென்னாடு சிறிய அளவினதாக இருந்திருக்கலாம் என்று தமிழக அரசு 1972இல் வெளியிட்ட தமிழ்நாட்டு வரலாறு- தொல் பழங்காலம் போன்ற  நூல்களில் குறிப்பிட்டுளது. அன்றைய ‘நாடு’ என்பது ‘இந்தியா’ தமிழ் நாடு போன்ற பெருநிலப் பகுதியன்று. இன்றைய வட்ட (தாலுகா) அளவிற்குள் கூட இரண்டு - மூன்று நாடுகள் உள்ளனவே. உரையாசிரியர்கள் குறித்த 49 நாடுகளும் சேர்ந்த கண்டம் அளவுக்கு இருந்திருக்க வேண்டியதேயில்லை.  முன்பு கூறியது போல கி.மு. 8,000ஐ ஒட்டி கணடத்திட்டுப் பகுதி கடலில் மூழ்கியதையே கழக நூல்களில் உள்ள கடல்கோள் செய்திகள் கூறுவதாகக் கொண்டால் இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு கழக (சங்க) இலக்கியக் கடல்கோள் செய்தி முற்றிலும் இசைவதேயாகும் என்பது தேற்றம் என P. ராமநாதன் கூறுகிறார்.

முந்தைய தொடர்ச்சியைப்படிக்க நீல நிற எழுத்துக்களை க்ளிக் செய்யவும் >>> https://thottianaicker.com/art/articles/2359-racial-politics-1-origin-and-spread-of-human-race

நன்றி:நவீனன்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved