நாமக்கல் தந்த தங்கமங்கை - பேட்மிட்டன் வீராங்கனை செல்வி.ரவீணா.
செல்வி.M.ரவீணா(17)அவர்கள் நாமக்கல் மாவட்டம், புதன்சந்தை அருகேயுள்ள லத்துவாடி கிராமத்தில் திரு.முருகேசன் – திருமதி.சுஜாதா தம்பதியினருக்கு மகளாகப்பிறந்தார். கேரளா மாநிலம் திருவனந்ததபுரத்திலுள்ள கல்யாண் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
செல்வி.ரவீணா அவர்களின் தந்தையார் திரு.முருகேசன் அவர்கள் இறகுப்பந்து (பேட்மிட்டன்) போட்டியில் மிகுந்த ஆர்வமுடையவர். பள்ளிக்காலங்களிலிருந்து இறகுப்பந்துப் போட்டியில் கலந்துகொண்டு வரும் திரு.முருகேசன், விளையாட்டு மைதானத்திற்கு தன் ஒரே மகள் ரவீணாவை அழைத்துச்செல்வது வழக்கம். அதன் மூலம் இறகுப்பந்து போட்டியில் ஆர்வம் கொண்டு, ஐந்து வயதிலிருந்து விளையாடி வருகிறார் செல்வி.ரவீணா. மகளின் ஆர்வத்தைக்கண்டு ஊக்கப்படுத்தியதுடன், பயிற்சியாளராகவும் இருந்து, தன் மகளுக்கு விளையாட்டு நுணுக்கங்களை கற்றுக்கொடுக்கத்துவங்கினார் திரு.முருகேசன். கோவை பாரதிய வித்யா பவன் பள்ளியில் படித்துவந்த செல்வி.ரவீணா, தனது 7-ஆவது வயதில், பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுப்போட்டியில் வெற்றிபெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதனால் உற்சாகம் அடைந்த திரு.முருகேசன், தனது மகளுக்கு முழுநேர பயிற்சியாளராக மாறி, தீவிரப்பயிற்சி வழங்கத்தொடங்கினார். தந்தையின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்வகையில் விளையாடிய செல்வி.ரவீணா, 10-ஆவது வயதில் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையேயான பேட்மிட்டன் போட்டியில் பெற்ற வெற்றி, பயிற்சியாளராக இருந்த தந்தைக்கு ஊக்கமாகவும், ரவீணாவிற்கு தன்னம்பிக்கையையும் வளர்த்துக்கொள்ள உதவியது. இதனைத்தொடர்ந்து ரவீணா தனது 13-வயதில், தமிழக அளவில் நடைபெற்ற பள்ளிகளுக்கிடையேயான “பாரதியார்” போட்டிகளில் மாநில அளவில் இரண்டாம் இடத்தைப் பெற்றார்.
இதனைத்தொடர்ந்து மகளுக்கு தொழில்முறை பயிற்சியாளரைக்கொண்டு பயிற்சியளிக்க விரும்பிய திரு.முருகேசன் அவர்கள், பஞ்சாப்பைச் சேர்ந்த திரு.கிஷோர்சிங் மூலம் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்தார். திரு.கிஷோர்சிங் பயிற்சியின் மூலம் மேலும் மெருகேற்றிக்கொண்ட செல்வி.ரவீணா, தனது 14-ஆவது வயதில் தமிழக அளவிலான போட்டியில் கலந்துகொண்டு முதலிடம் பெற்றார். இதனைத்தொடர்ந்து தேசிய அளவில் (School Federation Of India – SGFI) பள்ளிகளுக்கிடையேயான போட்டியில் இரண்டாம் இடம் பெற்று, 40-ஆண்டுகாலம் தமிழகத்தைச்சேர்ந்த எந்த விளையாட்டு வீரரும் வெற்றிபெறவில்லை என்ற குறையை நீக்கி சாதனை படைத்தார்.
2013-2015 வரை பயிற்சியளித்த திரு.கிஷோர்சிங் இரண்டாண்டு கால ஒப்பந்தம் முடிவதற்குள், செல்வி.ரவீணாவை தேசிய அளவிலான வீராங்கனையாக உருவாக்கியதுடன், தேசிய தரவரிசைப்பட்டியலில் 20-ஆவது இடம் பெறச்செய்தார். இதனிடையே மேலும் வாய்ப்புகளை பெருக்கிக்கொள்ளும் வகையில், தமிழகத்திலிருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு குடியேறி, அங்குள்ள கல்யாண் பள்ளியில் தனது உயர்நிலைப்பள்ளிக்கல்வியை தொடர்ந்தவர், அங்கு நடைபெறும் போட்டிகளிலும் பங்கேற்று வருகிறார். இதற்கிடையே மகளுக்காகவே, தன்னை முழுமையாக அற்பணித்து வரும் திரு.முருகேசன் அவர்கள், தன் செல்ல மகளை சர்வதேச அளவில் உயர்த்தும் பொருட்டு, தேசிய அளவில் பட்டங்களை வென்ற முன்னாள் விளையாட்டு வீர்ர் திரு.அஜய் அவர்களை பயிற்சியாளராக நியமித்து, கடந்த சில வருடங்கலாக பயிற்சியளித்து வருகிறார். இதன் பயனாக, 2017-18 ஆண்டு கேரள பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் இரண்டாம் இடம் பெற்று, அங்கும் தன் முத்திரையை பதித்து, சாதனைப்பயணத்தை தொடர்ந்து வருகிறார் செல்வி.ரவீணா.
தற்பொழுது தேசிய அளவில் 17-வயதுக்குற்பட்டோர் பட்டியலில் 20-ஆம் இடத்திலுள்ள செல்வி.ரவீணா, 19-வயதிற்குற்பட்டோர் பட்டியலில் 40-ஆவது இடத்தில் உள்ளார்.
நாமக்கலில் புகழ்பெற்ற தொழிலதிபராகவும், நிலக்கிழாராகவும், சமுதாய சேவகராகவும் இருந்த ஏழுமலையான் டிரேடர்ஸ் உரிமையாளர் திரு.முத்து நாயக்கர் அவர்களின் பெயர்த்தியான செல்வி.ரவீணா, பாரம்பரிய பின்னனி கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தாத்தா.திரு.முத்து நாயக்கர் மறைவுக்குப்பின் தந்தையார் திரு.முருகேசன் தொழில் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பல இழப்புகளை சந்தித்த பொழுதிலும், தன் மகளை பேட்மிட்டன் போட்டியில் சர்வதே அளவில் வெற்றிகரமான வீராங்கனையாக உருவாக்க வேண்டும் என்ற தந்தையின் கனவை உள்வாங்கியவராக, குடும்ப பாரம்பரியத்தையும் நன்கு உணர்ந்து, இந்த சிறுவயதிலேயே பொறுப்புமிக்கவராகவும், மிகுந்த நிதானமானவராகவும் வளர்ந்துள்ள செல்வி.ரவீணா, கடந்த 2020- ஜனவரி மாதம் நடைபெற்ற சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற “மகளிர் மாநாட்டில்” கலந்து கொண்டு, தன்னம்பிக்கை ஊட்டும் உரையாற்றி, தான் சந்தித்து வரும் சோதனைகளையும், சூழ்நிலைகளையும் எடுத்துரைத்து, கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்ததை யாரும் எளிதில் மறக்கமுடியாது.
விவசாயிகள் விழிபிதுங்கி நிற்க, அரசியல் மற்றும் நிர்வாகத்துறையிலோ சாதிக்க யாருமில்லை. கல்வி மற்றும் தொழில்துறையில் அங்கொன்றும், இங்கொன்றுமாக தடுமாறி தத்தளிக்கும் சமுதாயத்தில், இந்த நூற்றாண்டில் சமுதாயத்தின் அடையாளமாக பல்துறை வித்தகர்களை வழங்கி, கம்பளத்தார் சமுதாயத்தின் சமூக அந்தஸ்தை காப்பாற்றி வரும் நாமக்கல் மண் விளையாட்டுத்துறைக்கு வழங்கிய அருட்கொடை, அத்தி பூத்தாற்போல் வந்த “பேர் சொல்லும் பிள்ளை”யாக சாதித்து வரும் செல்வி.ரவீணா என்றால் மிகையல்ல. செல்வி.ரவீணாவின் ஒவ்வொரு வெற்றியும் நம் குழந்தைகளுக்கு மாபெரும் உந்து சக்தியாக இருக்கும் என்பதில் மாற்றுகருத்தில்லை. அந்தவகையில் செல்வி.ரவீணா வரும்காலங்களில் சர்வதேச அளவில் சாதனை மங்கையாக வளம்வர ஒட்டுமொத்த சமுதாயத்தின் சார்பிலும் வாழ்த்துகிறோம்.