உலக சாதனை படைத்த நீச்சல் வீரர் ரோஷன் ராஜ் லெனின்-க்கு குவியும் பாராட்டு!
உலக சாதனைக்காக நடத்தப்பட்ட சிறப்புக்குழந்தைகளுக்கான நீச்சல் போட்டியில் சுமார் 600 கிமீ தூரத்தைக் கடந்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர் வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் மேனாள் பொதுச்செயலாளர் ஆர்.சுப்பையன் அவர்களின் பெயரன் செலவன்.ரோஷன்ராஜ் லெனின் இடம் பெற்ற குழுவினர். உலக சாதனை படைத்த சிறப்புக்குழந்தைகளை நேரில் அழைத்துப்பாராட்டியுள்ளார் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இதன் விவரம் வருமாறு,
திமுக ஆட்சியமைந்து தமிழக முதல்வரின் மகன் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டபின் அத்துறை இந்திய அளவில் மிகுந்த கவனத்தைப்பெற்று வருகிறது. ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்டுவதே தமது அரசின் தாரக மந்திரம் என்று குறிப்பிடும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வளர்ச்சியின் ஒரு அங்கமாக விளையாட்டையும் உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. சுயமரியாதை, தன்னம்பிக்கை, நலவாழ்வு, சமூக நல்லிணக்கத்திற்கு விளையாட்டு முக்கியப்பங்காற்றும் என்று ஸ்டாலின் தலைமையிலான அரசு நம்புகிறது.
இந்த அடிப்படையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) சார்பில் பிரசித்திபெற்ற விளையாட்டுகளை தமிழகத்தில் நடத்தவும், விளையாட்டுகளின் தலைமையகமாக தமிழகத்தை உருவாக்கிடவும் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. அந்த வகையில் உலகின் முன்னனி வீரர்கள் பங்கேற்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சென்னையில் சிறப்பாக நடத்திக்காட்டியது. இதன் தொடர்ச்சியாக இந்தியா மற்றும் தெற்காசியாவில் முதன்முறையாக ஃபார்முலா 4 கார்பந்தயம் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, 78-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, நீச்சல் போட்டியில் உலக சாதனை படைக்கும் முயற்சியாக, மதியிறுக்கம் (Autism) உலகச் சிந்தனை குறைபாடுடைய சிறப்புக் குழந்தைகளுக்கான நீச்சல் போட்டியை நடத்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளது SDAT.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமான (SDAT) சார்பில் இப்போட்டி கடந்த 5-ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடற்கரையில் தொடங்கி, சுதந்திரதினமான ஆகஸ்டு 15 அன்று சென்னை மெரினா கடற்கரையில் நிறைவுபெற்றது. சுமார் 604 கிமீ தூரத்தை கடலில் நீந்திச்சென்று கடக்கும் இந்தப்போட்டியில் 15 பேர்கொண்ட குழுவினார் 10 நாட்களில் கடந்து உலக சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றனர்.
15 பேர் கொண்ட சிறப்புப்குழந்தைகள் குழு தினமும் 12 மணிநேரம் நீச்சலடித்து குறைந்தபட்சம் 50 கிமீ தூரத்தை கடக்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இப்போட்டியை திட்டமிட்டு, 10 நாட்களில் மொத்ததூரத்தையும் கடந்துள்ளனர். இக்குழந்தைகளுக்குப் பாதுகாப்பிற்காக பயிற்சி பெற்ற வீரர்களும், மீனவ அமைப்பினரும் படகுகளில் இருந்து கண்காணித்து வந்தனர். அவசரத்தேவைக்காக மருத்துவர்களும், ஆம்புலன்சுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு, குழந்தைகளுக்கு அவ்வப்போது சோதனை செய்து வந்தனர். எனினும் அசம்பாவிதம் ஏதுமின்றி போட்டி திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெற்று உலக சாதனை படைத்தது.
இதனையடுத்து, உலக சாதனை படைத்த சிறப்புக்குழந்தைகளை கடந்த 18-ஆம் தேதி இந்தியக்கடற்படை அதிகாரிகள் அழைத்து கௌரவித்தநிலையில், அதற்கடுத்தநாளான 19-ஆம் தேதி தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
உலக சாதனைக்கான இப்போட்டியில் பங்கேற்ற வீரர்கள் குழுவில் இடம்பெற்றிருந்த ரோஷன்ராஜ் லெனின் (20) வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் மேனாள் பொதுசெயலாளர் ஆர்.சுப்பையன் அவர்களின் பெயரன் என்பது குறிப்பிடத்தக்கது. துபாயில் வசிக்கும் திரு.லெனின் சுப்பையன் - திருமதி.ஷர்மிளி தம்பதிகளின் ஒரே மகனான ரோஷன்ராஜ் லெனின் சென்னை அரும்பாக்கத்திலுள்ள சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். 6 வயதிலிருந்தே நீச்சலில் மிகுந்த ஆர்வமுள்ள ரோஷன்ராஜ் லெனின் முறையாக நீச்சல் பயிற்சி பெற்று பல போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிவாகை சூடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகில் மனிதனாகப் பிறந்துவிட்டால் சாதிக்க எதுவும் தடையில்லை என்பதே ரோஷன்ராஜ் லெனின் குழுவினர் படைத்துள்ள உலக சாதனை மூலம் அனைவருக்கும் சொல்லவரும் செய்தி என்று குறிப்பிட்டுள்ள வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், ரோஷன்ராஜ் தொடர் சாதனைகளைப் பதிவு செய்ய வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.