பல்கலைக் கழக அளவில் தங்கப்பதக்கம் வென்ற தாரகை-க்கு வாழ்த்துகள்!
விருதுநகர் மாவட்டம் பாலவநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திரு.அய்யன்ராஜ் - திருமதி.வரதலட்சுமி தம்பதிகள். அய்யன்ராஜ் அவர்கள் வளைகுடா நாட்டில் தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். இத்தம்பதியினருக்கு 2 மகன்களும், அர்ச்சனா என்ற மகளும் உள்ளனர்.
சிவகசி ஸ்ரீ காளீஸ்வரி கலை அறிவியல் கல்லூரியில் (தன்னாட்சி) இளங்கலை வணிக மேலாண்மை (BBA) துறையில் கல்லூரியில் முதல்மாணவியாக தேர்ச்சி பெற்ற அர்ச்சனா, மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்திற்குட்பட்ட சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் & டெக்னாலஜி-யில் இரண்டாண்டுகள் கால அளவுடைய முதுநிலை வணிக மேலாண்மை (MBA) மாணவியாகச் சேர்ந்து படித்துவந்தார்.
மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்திலும், அதன் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகளிலும் எபிஏ (MBA) பிரிவில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எம்பிஏ இறுதியாண்டு படித்து தேர்வெழுதியிருந்த மாணவி அர்ச்சனா, மதுரை காமராஜர் பல்கலைக் கழக அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.
இதனையடுத்து கடந்த வாரம் நடைபெற்ற பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் அர்ச்சனாவுக்கு தங்கப்பதக்கமும், சான்றிதழும் வழங்கிப்பாராட்டினார். இந்நிலையில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்களை மாணவி அர்ச்சனா சந்தித்து வாழ்த்துப்பெற்றார்.
பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்ற மாணவிக்கு சமுதாயப்பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.