செஸ் போட்டிகளில் அசத்தும் சுட்டிப்பொண்ணு சுதர்ஷனா!

அசத்தும் சுட்டிப்பாப்பா!
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகேயுள்ள தொட்டிவலவு கிராமத்தைச் சேர்ந்தவர் திரு.அப்புச்சாமி. இவரது துணைவியார் திருமதி.யசோதா. இத்தம்பதியினருக்கு A.Y.சுதர்ஷனா என்ற ஒரே மகள் உள்ளார். இவர் திருப்பூர் அருகேயுள்ள செங்கப்பள்ளி குமரன் பப்ளிக் ஸ்கூலில் ஆறாம் வகுப்பு படித்துவருகிறார். குழந்தைப் பருவத்தில் பொழுதுபோக்கிற்காக பெற்றோர்களுடன் செஸ் விளையாடி வந்த குட்டிபாப்பா சுதர்ஷனாவுக்கு அந்த விளையாட்டின் மீது அளவுகடந்த ஆர்வம் இருந்துவந்தது. எல்கேஜி யில் சேர்ந்தபோதும் இது தொடர்ந்தது. சுதர்ஷனாவின் திறமையைக்கண்டு வியந்த பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும் குட்டிப்பொண்ணுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வந்தனர்.
பள்ளியில் நடைபெறும் போட்டிகளில் தொடர் வெற்றிகளைக் குவித்த சுதர்ஷனாவை பள்ளிக்கு வெளியே நடைபெறும் போட்டிகளிலும் பங்கேற்க ஆதரவளித்தனர். அங்கும் தனது வெற்றிப்பயணத்தைத் தொடர்ந்து தான் படிக்கும் பள்ளிக்கு பெருமை சேர்த்தார். இதனால் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள ஊக்கமளித்தனர். அங்கும் தனது திறமையை நிரூபித்து வருகிறார் சுதர்ஷனா.
இதற்கிடையே கடந்த ஜூன் 22-இல் இந்திய செஸ் கூட்டமைப்பு (ICC) சார்பில் கோவை சிங்காநல்லூரிலுள்ள வேங்கட லட்சுமி திருமண மண்டபத்தில் மாநில அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது. இதில் மாணவியர் இடம்பெற்ற 11-வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் 65 பேர் கலந்துகொண்டனர். இதில் சுதர்ஷனா இரண்டாமிடம் பிடித்து வெற்றி பெற்றார்.
இதேபோல்
கடந்த மே மாதம் 22 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை கோவை பெரியநாயக்கன் பாளையத்திலுள்ள
யுனைடெட் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற ஃபிட் ரேட்டட் (Fide Rated) செஸ் டோர்னமென்டில்
திருப்பூர் மாவட்டத்திற்கான ‘பெஸ்ட் ப்ளேயர்’ விருதும், ரூபாய் மூன்றாயிரம் பரிசும்
பெற்றார்.
விளையாட்டுப்போட்டிகளில் மட்டுமின்றி விளையாட்டு சம்மந்தப்பட்ட ‘புதிர்” போட்டிகளிலும் கலந்துகொண்டு தனது திறமையை நிரூபித்து வருகிறார் சுதர்ஷனா. இதனொருபகுதியாக சமீபத்தில் சென்னை முகப்பேரில் இன்டர்நேஷனல் புக் ஆப் ரேக்கார்ட்ஸ் நடத்திய புதிர் போட்டியில் பங்கேற்ற சுதர்ஷனா, 90 விநாடிகளில் 50 புதிர்களுக்கு விடையளித்து முந்தைய சாதனையை முறியடித்தார். இதற்கு முன்பு 90 விநாடிகளில் 49 புதிர்களுக்கு விடையளித்தது மட்டுமே சாதனையாக இருந்துவந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து
செஸ் போட்டிகளில் சாதனைமேல் சாதனை புரிந்து பள்ளிக்குப் பெருமை சேர்த்துவரும் சுதர்ஷனாவுக்கு
பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.