சிறுவயதிலேயே சிகரத்தை தொடும் தருண்...
செல்வன்.R.தருண்(12) கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள சின்ன தொட்டிபாளையம் கிராமத்தில் திரு.B.ராஜேஷ் குமார் B.Tech – திருமதி.சத்யப்ரியா M.B.A., தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப்பிறந்தார். தந்தையார் திரு.இராஜேஷ்குமார் விவசாயம் தவிர புரவிஷனல் ஸ்டோர்ஸும் நடத்திய வருகிறார். காரமடையிலுள்ள SVGV மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார்.
மேட்டுப்பாளையத்திலுள்ள NLP பொறியியல் கல்லூரியில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ள திரு.ராஜேஷ்குமார், பள்ளிக்காலங்களில் இருந்தே ஓட்டப்பந்தயம் மற்றும் கால்பந்து விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமாக பங்கேற்று வந்துள்ளார். திறமையிருந்தும் குடும்ப பொருளாதார சூழல் காரணமாக விளையாட்டு போட்டிகளை தொடரமுடியாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நெருக்கடிக்கு ஆளானார். தன்னால் சாதிக்க முடியாத அந்த ஏக்கத்தை தன் ஒரே வாரிசான தருண் மூலமாக சாதிக்க நினைத்தவர், தருண் மூன்றாம் வகுப்பு படிக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே விளையாட்டுப் போட்டிக்கும் தயார்படுத்தி வந்தார். அந்த இளம் வயதிலேயே தந்தையின் விருப்பத்தையும், ஆசையையும் நிறைவேற்றும் பொறுப்புணர்ந்து செயல்பட்ட தருண்,கராத்தே என்ற தற்காப்பு கலையுடன், கூடைப்பந்து போட்டியிலும் ஆர்வத்துடன் பங்கேற்றத் தொடங்கினார்.
ஏதோ விளையாட்டுபோட்டிகளில் மட்டுமே ஆர்வத்தையும், திறமையும் வெளிப்படுத்தியவரல்ல தருண். படிப்பிலும் கெட்டிக்காரராக இருந்து வருகிறார். 2018-ம் ஆண்டு நடைபெற்ற SOF(Science Olympiad Foundation) நடத்திய தேசிய அளவிலான கணித போட்டியில் கலந்துகொண்டு வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
கடந்த நான்காண்டுகாலமாக கராத்தே மற்றும் கூடைப்பந்து பயிற்சி மேற்கொண்டு வரும் தருண், கடந்த 2020 மற்றும் 2021 என தொடர்ந்து இருமுறை மாநில அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டு மூன்றாமிடம் பிடித்து சான்றிதழும், பதக்கமும் வென்றுள்ளார். தொடர்ந்து பயிற்சிகளில் ஈடுபட்டு வரும் செல்வன்.தருண் உள்நாட்டிலும், சர்வேதாச அரங்கிலும் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவதை இலட்சியாமகக் கொண்டுள்ளார்.
கராத்தே போட்டிகளில் கலந்துகொண்டாலும், கூடைப்பந்து போட்டிகளிலும் கவனம் செலுத்தி வரும் தருண், தேசிய கூடைப்பந்துக் கழகம் (NBA - National Basketball Association) நடத்திய பத்து வயதிற்குட்பட்டோர்களுக்கான 2019-20 தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிகளில் 35-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டதில் செல்வன்.R.தருண் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.
போர்க்குடிகளான கம்பளத்தார் சமுதாயம், காலமாற்றத்திற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்வதில் இதுவரை இருந்து வந்த சுணக்கம் நீங்கி, பல்வேறு துறைகளில் இளம் சமுதாயத்தினர் சாதனை படைத்து வருவதை சமீப காலங்களில் பார்த்து வருகிறோம், அந்த வகையில் மற்றுமொரு புதுவரவாக, வரும்காலத்தில் சிறந்த்தொரு சாதனையாளராக திகழப்போகும் செல்வன்.R.தருண் கல்வியிலும், விளையாட்டுப்போட்டிகளிலும் கலந்துகொண்டு சர்வதேச அளவில் வெற்றிகளை குவித்து சமுதாயத்தை பெருமை கொள்ளச்செய்ய வேண்டுமாய் அன்புடன் வேண்டி 40 லட்சம் கம்பளத்தாரின் சமுதாயத்தின் சார்பில் வாழ்த்துகிறோம்.