ஆந்திர மண்ணில் கம்பளத்தாரின் கவசகுண்டலம் கோட்டைச்சாமி!
திரு.S.கோட்டைச்சாமி அவர்கள் 1957-ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள வாழவந்தான்புரம் கிராமத்தில் திரு.செல்லையா நாயக்கர் – திருமதி.லட்சுமியம்மாள் அவர்களுக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாக பிறந்தார். தனது இரண்டாவது வயதில் தாயை இழந்தவர், தந்தையார் திரு.செல்லையா நாயக்கர் பராமரிப்பில் வளர்ந்தார். தொடக்கப் பள்ளிப்படிப்பு மட்டுமே பயின்றவர், தனது தந்தையாருக்கு உதவியாக விவசாயப்பணிகளில் ஈடுபட்டார். திருமதி.செல்வம் அவர்களை மணமுடித்த திரு.கோட்டைச்சாமி அவர்களுக்கு சமுதாயமே பிள்ளைகள்.
அரசு வட்டாரத்தில் தண்ணியில்லாத காடு என்றழைக்கப்படும் வறண்டபூமியான இராமநாதபுரத்தில், விவசாயத்தை நம்பி வாழ்வது எதிர்காலத்திற்கு உகந்ததல்ல என்று தீர்மானித்தவர், சொந்த தொழில் துவங்கும் முயற்சியில்,1980-களில் ஆந்திரா மாநிலம் நெல்லூர் நகருக்கு சென்றார். செக்கச்சிவந்த நிறம், மெல்லிய உடல்வாகு, அளவான உயரமுடைய அந்த இருபது வயது இளைஞனுக்கு அப்போது தெரியாது, வாழவந்தான்புரத்தில் பிறந்த தனக்கு, இந்தமண் தான் வாழவைத்தபுரமாக மாறும் என்று. திருப்பூர்,ஈரோடு பகுதிகளிலிருந்து பனியன், லுங்கிகளை கொள்முதல் செய்து, நெல்லூர் நகரின் தெருமுனைகளில் தன் விற்பனையைத் துவங்கினார். தன் தொழிலை வளர்த்தெடுக்க கல்வியோ, மொழியோ தடையல்ல என்பதை உணர்ந்தவர், தனக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் கெட்டியாகப்பற்றி முன்னேறினார். ஆம், முதலில் ஈரோடு, திருப்பூர் போன்ற மொழியறிந்த ஊர்களில் சரக்குகளை கொள்முதல் செய்தவர், மொழி அச்சம் ஏதுமின்றி குஜராத்திலுள்ள சூரத், அன்றைய பம்பாய், டெல்லி, வங்கத்திலுள்ள கொல்கத்தா போன்ற நகரங்களுக்கு சென்று சரக்குகளை கொள்முதல் செய்து குறைந்தவிலையில் விற்பனை செய்ததின் மூலம், சக போட்டியாளர்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தினார். படிப்படியாக தொழிலை விரிவுபடுத்தி, சொந்தமாக கடைகளை உருவாக்கி, ஜவுளித்தொழிலில் தன் வெற்றிக்கொடியை நாட்டினார்.
தன்னை நிலைநிறுத்திக்கொண்டபின் தென்திசைநோக்கி தான் பிறந்த சமுதாயத்தை பார்த்தார். விளைவு, கமுதி பகுதியிலுள்ள சமுதாய இளைஞர்களை அழைத்துச்சென்று, தன்கடையில் அமர்த்தி வேலைகொடுத்தார். இது ஒருகட்டத்தில் தூத்துக்குடி,இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சமுதாய இளைஞர்களின் பார்வை நெல்லூரிலுள்ள திரு.கோட்டைச்சாமி அவர்களின் பக்கம் திருப்பியது. ஆட்கள் கொஞ்சம் கொஞ்சமாக வேலைதேடி நெல்லூருக்கு படையெடுத்து வர, தன்னை நாடிவந்தவர்களுக்கெல்லம் வாழ்வழிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார். அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 1996-வாக்கில் வி.கே.சி, பாரகான் போன்ற பிரபல கம்பெனிகளின் காலணிகளை கொள்முதல் செய்து விற்பனை செய்யும் தொழிலில் இறங்கினார். அதேவேளையில் தன்னிடம் வேலையிலிருந்து, திறமையாக பயிற்சி பெற்றவர்களுக்கு, அங்கேயே கடையமைத்துக் கொடுத்து முதலாளியாக்கி அழகு பார்த்தார். திரு.கோட்டைச்சாமி அவர்களிடம் புதிதாக ஒரு இளைஞன் தொழிலாளியாக வேலைக்கு சேரும் அதேவேளையில், அவரிடம் வேலை பயின்ற ஒருவர் முதலாளியாக உயர்ந்தார். கிராம வாழ்க்கையானாலும், அரசியல், தொழில் என எந்ததுறையை எடுத்துக்கொண்டாலும், தன்னைத்தவிர தன் சமுதாயத்தை சேர்ந்த எவரும் மேலே சென்றுவிடக்கூடாது என்ற அறுவறுக்கத்தக்க குணமுடைய ஒருசமுதாயத்தில், தன்னிடம் வந்தவரையெல்லாம் உயர்த்திப்பார்க்கும் அற்புத மனம் படைத்தவர் திரு.கோட்டைச்சாமி அவர்கள்.தனி ஒருவர், கம்பளத்தார் சமுதாயத்தில் 35க்கும் மேற்பட்டோருக்கு வேலை கொடுக்கலாம், ஆனால் முதலாளி ஆக்கிடமுடியுமா என்ன?. அதிசயம் தான், அதையும் நடத்திக்காட்டினார் இவர். முப்பத்தைந்திற்கும் மேற்பட்ட நமது சமுதாயத்தினரை முதலாளியாக்கி வாழவந்தான்புரத்திலிருந்து வந்த தன்னை, வாழவைத்தபுரமாகிய நெல்லூரில் பலரையும் வாழவைத்தானாக உயர்ந்து நிற்கின்றார் திரு.கோட்டைச்சாமி அவர்கள்.
சரி தன்னிடம் வேலை செய்பவர்கள் மட்டுமே முதலாளிகளாக வேண்டுமா என்ன? சமுதாயத்தில் திறமையுள்ள இளைஞர்கள் யார் தன்னை நாடிவந்தாலும், அவர்களின் திறமையில் நம்பிக்கையிருக்கும் பட்சத்தில் உடனே தொழில் தொடங்க நிதியுதவி அளிக்கும் தாராள மனம் படைத்தவர். இப்படி பலவகையிலும் உதவிசெய்து ஊக்குவித்ததின் விளைவாக இன்று 100க்கும் மேற்பட்ட குடும்பங்களின் எல்லைச்சாமியாக இருக்கிறார், இந்த எளிய மனிதர் கோட்டைச்சாமி அவர்கள். இது ஏதோ புகழ்ச்சிக்கான வார்த்தையன்று, இன்று நெல்லூரில் கால்பதித்துள்ள 400க்கும் மேற்பட்ட குடும்பங்களை கண்டும், கேட்டும் கள எதார்த்தத்தை அறியலாம்.
வந்தவரையெல்லாம் வாழவைக்கும் ஒருவர், உள்ளூரில் இருந்தால் என்ன, உலகில் எந்த மூளையில் இருந்தால் என்ன? நெல்லூர் தூரமாயிற்றே என யாரும் இருக்கவில்லை, உதவிகேட்கும் கைகள் எத்தனையிருந்தாலும் இருந்தாலும், வாரிக்கொடுப்பதை நிறுத்தியவரல்ல திரு.கோட்டைசாமி அவர்கள். ஆம், நம்மினத்தவர்கள் யார் உதவி கேட்டு வந்தாலும் மறுக்காமல், கோவில் கட்டவா? அன்னதானத்திற்கா? சமுதாயப்பணிகளுக்கா? பாஞ்சாலங்குறிச்சியில் சமுதாயக்கூடம் கட்டவேண்டுமா? இல்லை, அன்னதான நிதி வேண்டுமா? இதோ இந்த கோட்டைச்சாமி இருக்கிறான் என்று தன்னை நாடிவரும் மக்களுக்கு நம்பிக்கையூட்டியவர். இதையெல்லாம் செய்தவர், மாவீரன் கட்டபொம்மன் பிறந்தநாளைக் கொண்டாடாமல் விடுவாரா? நெல்லூரில் நடக்கும் பிறந்த விழாவிற்கு வருடாவருடம் தானே முன்வந்து அன்னதானம் செய்து விழாவை சிறப்பாக நடத்தி வருகிறார்.
உதவி எனும் வேண்டும் கரங்களில், ஜாதி, மதங்களைப் பார்த்தவரல்ல இந்த கோட்டைச்சாமி. அதற்கு சாட்சிகள் இல்லாமல் இல்லை. ஆம், ஓராண்டுக்கு முன்னாள் 2019-ல் நோய்வாய்ப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையிலிருந்தபொழுது இந்த எளிய மனிதனுக்காக நெல்லூர் நகர கோவில்களில் அர்ச்சனை நடந்தது, சர்ச்சுகளில் பிரார்த்தனை நடந்தது, மசூதிகளில் சிறப்பு தொழுகை நடந்தது, உதவிபெற்றவர்கள் அவரவர் மத விருப்பப்படி தங்கள் இஷ்டதெய்வத்திடம் இவருக்காக வேண்டினர். அதுமட்டுமா, இந்த எளிய மனிதனைக்காண இத்தனைபேரா என்று அப்பலோவே அசந்துபோகும்மளவில் பார்வையாலர்கள் நிறைந்தது சத்தியமான உண்மையன்றோ! பெற்றால் தான் பிள்ளையா என்று தினமொருவர் தலைமேட்டில் காத்துக்கிடந்தது கனவோன்றும் இல்லையே!
இவரின் புகழை வெறும் எழுத்துகளால் நிரப்பிவிடமுடியாது, வாளும் வள்ளல். எல்லோருக்கும் கொடுத்தார், எங்களுக்கு வாரிக்கொடுத்தார் என்று சொல்லுமளவிற்கு, சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் கட்டுமானப்பணிக்காக ரூ.200000/- அதிகமாக நன்கொடை வழங்கும் “பர்பிள் கிளப்” உறுப்பினர்களில் ஓருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சாதாரண எளிய குடும்பத்தில் பிறந்து 100 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நேரடியாகவும், ஆயிரக்கணக்கானோருக்கு மறைமுகமாகவும் உதவி, அவர்களின் நெஞ்சங்களிலெல்லாம் வாழும் திரு.கோட்டைச்சாமி அவர்கள், உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, தன் கடைகளையெல்லாம் இளைஞர்களிடம் ஒப்படைத்துவிட்டு, முறையான பயிற்சிக்குப்பின் தொழில் துவங்க நினைக்கும் சமுதாய இளைஞர்களுக்கு மட்டும் மூலதனத்திற்கு நிதியுதவி செய்து வருகிறார். திரு.கோட்டைச்சாமி அவர்கள் மேலும் பல்லாண்டுகள் வாழ்ந்து, இன்னும் சமுதாயத்திலுள்ள ஏழை-எளியோரின் வாழ்வில் ஒளியேற்றிட வேண்டுமாய் அன்புடன் வேண்டி, வாழ்த்துகிறோம்.