சமுதாய தியாகிகள்- இராமநாயக்கன்பட்டி- திரு. எம். நல்லப்பன்.B.E.,
அமரர்.திரு.M.நல்லப்பன்.B.E., அவர்கள் 1947-இல் நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அருகேயுள்ள இராமநாயக்கன்பட்டியில் திரு.மசல நாயக்கர்-திருமதி.சின்னம்மாள் தம்பதியினருக்கு எளிய விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். தன் தொடக்கக் கல்வியை இராசிபுரத்தில் பயின்றவர், கோவையில் புகழ்பெற்ற CIT கல்லூரியில் மெக்கானிக்கல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றார்.
பொறியியல் படித்து முடித்தவுடன் தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறையில் பணியமர்த்தப்பட்டார். படிப்படியாக பதவி உயர்வு பெற்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றியவர், இறுதியில் நெடுஞ்சாலைத்துறையில் தலைமைப் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.
தமிழகம் முழுவதிலும் சமுதாய பணி செய்பவர்களுக்கு பெரும் உந்துசக்தியாக இருந்ததுடன், சமுதாயப்பணிக்கு நிதி உதவிவேண்டி செல்பவர்களுக்கு அள்ளிக்கொடுக்கும் வள்ளலாக இருந்தவர் திரு.நல்லப்பன் அவர்கள். திருமணங்கள், பொதுநிகழ்ச்சிகள் என எதில் சமுதாய இளைஞர்களை சந்தித்தாலும், பல்வேறு ஆலோசனைகளையும் உதவிகளையும் செய்து வழிகாட்டியாக இருந்தவர். பணிநிமித்தமாக தான் மாறுதலாகிச் செல்லுமிடமெல்லாம் நம் இன மக்கள் வசிக்கும் பகுதிகளை தேடிச்சென்று உறவுகளை மேன்மையடையச் செய்ததுடன், மிகப்பரந்த நட்பு வட்டத்தையும் பெற்றிருந்தார்.
இன்று சென்னையில் ஓங்கி வளர்ந்து நிற்கும் வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலசங்கத்தின் துவக்ககால கட்டிடப்பணிக்கு உதவியதுடன், “முதல்தள” கட்டுமானப்பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று பணியிணை துவக்கி வைத்தார். இவர் அச்சங்கத்தின் மதிப்புமிக்க ரூபாய்.200000/- க்கும் (ரூபாய் இரண்டு லட்சம்) அதிகமாக நன்கொடை வழங்கிய “பர்பிள் கிளப்” மெம்பர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2018-ஆம் ஆண்டு திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஓரிரு வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்கை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி உயிர்நீத்தார். திரு,நல்லப்பன் அவர்களின் மறைவையொட்டி, சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் புகழஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், அகில இந்திய தெலுகு சம்மேளனத்தின் தலைவர் திரு.சி.எம்.கே.ரெட்டி அவர்கள் கலந்துகொண்டு திருவுருவப்படத்தை திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதுமிருந்து சமுதாய பெரியோர்கள் கலந்து கொண்டனர்.