சமுதாய தியாகிகள் - நாகமநாயக்கன்பட்டி - திரு.சீனிகுருசாமி. B.A.,

அமரர்.ஐயா.சீனிகுருசாமி, B.A., 30.08.1926-இல் மதுரை மாவட்டம், எழுமலை அருகேயுள்ள நாகமநாயகன்பட்டி கிராமத்தில் பிறந்தார். 1950-இல் பதிவுசெய்யப்பட்ட இராஜகம்பள மகாஜன சங்கத்தின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவர். தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் சார்புச் செயலாளராகப் பணியாற்றியவர். அரசு அதிகாரியாக இருந்துகொண்டே தமிழ்நாடு முழுவதும் உள்ள கம்பளத்தார் வசிக்கும் கிராமங்களுக்குச் சென்று சமுதாயப்பணியாற்றி கம்பளத்து காந்தியாக வாழ்ந்தவர். கம்பளத்தார் இனத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக தன் வாழ்நாளெல்லாம் பாடுபட்டவர்.
தென்மாவட்டத்து பட்டதாரி இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கான கவனம் தலைநகர் சென்னையை நோக்கி திரும்பவும், அப்படி வந்த பட்டதாரி இளைஞர்களுக்கு இவரது வசிப்பிடம் வேடந்தாங்களாக இருந்துள்ளது. சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விடுதியொன்றில் தங்கி பணியாற்றி வந்தவரின் அறையில் தங்கி 1970-80 வேலைவாய்ப்பு அல்லது பிழைப்புதேடிக்கொண்டவர்கள் அநேகம் என்று பலரும் இன்றும் நினைவுகூறுவது அவரின் தியாகத்திற்கு சான்றாக உள்ளது.
பிள்ளையார்நத்தத்தில் கம்பளத்தாரின் முதல் மாநாட்டினை நடத்துவதற்கு முக்கியப்பங்காற்றிய ஐயா.சீனிகுருசாமி அவர்கள்,அதனைத்தொடர்ந்து எழுமலை, கல்லுப்பட்டி,விருதுநகர்,பேரையூர் ஆகிய இடங்களில் மாநாடு நடைபெறுவதற்கு அடித்தளமிட்டவர் ஐயா.சீனிகுருசாமி அவர்கள்.
தலைமைச்செயலக ஊழியாராக பணியாற்றிய காரணத்தால் அரசின் நடவடிக்கைகள், திட்டங்களை, நகர்வுகளை நன்கு உள்வாங்கிய அறிவுஞானமிக்கவராக இருந்தார் ஐயா.சீனிகுருசாமி அவர்கள். 1959-இல் பிற்படுத்தப்பட்ட மக்களை அடையாளம் கண்டு இடஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்ய அமைக்கப்பட்ட முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையமான நீதியரசர்.காகா கலேகர் ஆணையத்திடம் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை திருவாளர்கள்.வையப்ப நாயக்கர், பா.இராமசாமி ஆகியோருடன் இணைந்து விசாரணை ஆணையத்திடம் முன்வைத்தனர். அப்பொழுது உங்கள் சாதியில் தீண்டாமை உள்ளதா? என்ற கலேகரின் கேள்விக்கு சான்று அளிக்க முடியாமல் போகவே பழங்குடியினர் பட்டியலில் தொட்டிய நாயக்கர்களை இணைப்பது தடைபட்டுப்போனது என்பது குறிப்பிடத்தக்கது. 1961-இல் கர்மவீரர் காமராஜர் ஆட்சிகாலத்தில் அவருக்கு மிகநெருக்கமாக இருந்த மகாஜனசங்க தலைவர் ஐயா.வையப்ப நாயக்கர் மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தொட்டிய நாயக்கர்களை சேர்ப்பதில் மூலகாரணமாக இருந்தார்.
சுதந்திரத்திற்குப்பிந்தைய கம்பளத்தார் வரலாற்றில் ஒப்பாரும், மிக்காரும் இல்லாத ஒரே அரசியல் தலைவரான கா.சுப்பு அவர்களை அடையாளம் கண்டு, சட்டம் படிக்க உதவி செய்தவர். அவரை அரசியல் ஆளுமையாக வார்த்தெடுத்து பாஞ்சாலங்குறிச்சி கோட்டை அமைக்கவேண்டும் என்ற மகாஜன சங்கத்தின் தலைவர்களால் நிறைவேற்றப்பட்டு நீண்டநாட்களாக கிடப்பில் இருந்த கோரிக்கைக்கு க.சுப்பு மூலம் அன்றைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி ஆட்சியில் செயல்வடிவம் தந்த முதன்மை சிற்பி ஐயா,சீனிகுருசாமி அவர்கள். அதேபோல் மாவீரன் கட்டபொம்மன் போக்குவரத்துக்கழகம் உருவான பின்னனியிலும் இருந்தவர். எம்.ஜி.ஆர் ஆட்சிகாலத்தில் கட்டபொம்மன் பெயரில் மாவட்டம் அமையவும் அரும்பாடு பட்டவர். அம்முயற்சி சிலபல காரணங்களால் நிறைவேறாமல் போனது.
கம்பளத்தார் இனத்தில் வராது வந்த மாமனிபோல் பிறந்த க.சுப்பு அவர்களின் ஆற்றலை, ஆளுமையை சமுதாயத்திற்காக முழுமையாக பயன்படுத்திக்கொண்டவர் ஐயா.சீனிகுருசாமி அன்றால் மிகையல்ல. 12.09.1996-இல் தனது இறுதி மூச்சு நிற்கும்வரை சமுதாய சிந்தனையுடனும், அக்கறையுடனும் வாழ்ந்த தியாகசீலரின் ஒப்பற்ற சமுதாயபணியாலும், சேவையாலும் எழுந்து நின்கிறது கம்பளத்தார் சமுதாயம்