ஒன்றியக்குழு உறுப்பினர் - விருதுநகர் - திரு.புலி நாயக்கர் (எ) P.K. சங்கர்ராஜ் நாயக்கர்
திரு.புலி நாயக்கர் (எ) P.K.சங்கர்ராஜ் நாயக்கர் அவர்கள் 1970-இல் விருதுநகர் மாவட்டம், சந்திரகிரிபுரம் கிராமத்தில் திரு.பெரிய கெங்கைய நாயக்கர்-திருமதி.போவக்கம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். நடுநிலைப்பள்ளி வரை கல்வி பயின்றவர், தனது பெற்றோர்களுக்கு உதவியாக விவசாயப்பணிக்கு திரும்பினார். இவருக்கு திருமணமாகி திருமதி. S.இராஜலட்சுமி என்ற மனைவியும், S.முருகலட்சுமி, S.கங்காதேவி,S.சங்கீதா,S.வர்ஷா என்கிற நான்கு மகள்களும்,S.புலிராஜ் என்ற மகனும் உள்ளனர்.
திரு.புலிநாயக்கர் அவர்களின் தாத்தா திரு.பெரிய முத்து நாயக்கர் அவர்கள் பாவாளியில் பிரசித்திபெற்ற பச்சையம்மன் கோவில் திருவிழாவின்போது தமிழர்களின் வீரவிளையாட்டான சிலம்பாட்டத்தில் புலிவேடமிட்டு செம்மறி ஆட்டை பற்களால் கவ்வி முதுகிற்கு பின்பக்கமாக இறக்குவாராம். இந்த அசாத்திய பலத்தைக்கண்ட அன்றைய பாவாளி ஜமீன்தார் திரு.பெரிய முத்து நாயக்கரை “புலிநாயக்கர்” என்று பட்டப்பெயரிட்டு அழைத்தாராம். அதிலிருந்து புலிநாயக்கர் என்ற பெயர் குடும்பப் பெயராக அமைந்துவிட்டது. சிறுவயதிலிருந்தே விவசாயப்பணிகளில் ஈடுபட்டு வருபவரும் திரு.புலிநாயக்கர் அவர்கள், கூடுதலாக விவசாயப்பணிக்கு டிராக்டர் வாடகைக்கு இயக்குவதுடன், P.K.S. என்ற பெயரில் ஹோட்டலையும் நடத்திவருகிறார் திரு.புலி நாயக்கர்.
2006-ஆம் ஆண்டில் விருதுநகர் மாவாட்டம் பாவாளி ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதின் மூலம் பொதுவாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார் திரு.புலி நாயக்கர் அவர்கள். அதன் பின் 2007-ஆம் அண்டில் திமுக-வில் இணைந்தார். 2009-ஆம் ஆண்டிலிருந்து விருதுநகர் மேற்கு ஒன்றிய அவைத்தலைவராக அக்கட்சியில் பொறுப்பேற்று இன்றுவரை அப்பதவியில் தொடர்ந்து வருகிறார். திரு.புலி நாயக்கர் பாவாளி ஊராட்சி மன்றத் தலைவராக பொறுப்பு வகித்த காலத்தில், தனது ஊராட்சிக்குட்பட்ட நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தியுள்ளார். மேலும், பத்து கிராமங்களை உள்ளடக்கிய 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களைக்கொண்ட பாவாளி ஊராட்சியில், அனைத்து கிராமங்களிலும் உள்ள பள்ளிகளுக்கு கூடுதல் கட்டிடம் மற்றும் நூலகங்களைப் பெற்றுத்தந்துள்ளார். மேலும் தனது ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 70க்கும் மேற்பட்ட சின்டெக்ஸ் டேங்குகள் தெருவுக்குத் தெரு அமைத்ததின் மூலம், மக்கள் குடிநீருக்கு நீண்டதூரம் செல்வது தடுக்கப்பட்டதுடன், குழாயடிச் சண்டைகள் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுதவிர, 30000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 உயர்மட்ட டேங்குகளையும், 50000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 உயர்மட்ட டேங்குகளையும் அமைத்து குடிநீர் தட்டுப்பாடற்ற ஊராட்சியாக பாவாளி ஊராட்சியை ஐந்தாண்டு காலத்திற்குள் மாற்றினார். மேலும் 400க்கும் மேற்பட்டோருக்கு முதியோர் உதவித்தொகை பெற்றுத்தந்துள்ளவர், தொகுப்பு வீடுகள், காங்கிரீட் சாலைகள், சாக்கடை வசதி, தெருவிளக்குகள், கழிப்பிட வசதி, மயானக்கூரை, ரேசன்கடை போன்ற பல்வேறு அடிப்படைவசதிகளை பாவாளி ஊராட்சியில் நிறைவேற்றியுள்ளார். அதுதவிர 15-க்கும் மேற்பட்ட அதிக மதிப்பெண்பெற்ற பள்ளி மாணவர்களுக்கு தனியார் அமைப்பின் மூலம் வருடம் தலா. ரூ.25000/- பெற்றுக்கொடுத்து, அவர்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று பொறியியல் பட்டயம் பெற உறுதுணையாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல்பணி தவிர சமுதாயப்பணியிலும் அதிக ஆர்வமுள்ளவர், த.வீ.க.ப.கழகத்தின் விருதுநகர் மாவட்டச் செயலாளராகவும், மாவட்ட அவைத்தலைவராகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாளில் மதுரைக்கும், நினைவு நாளில் கயத்தாறுக்கும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் ஆட்களைத் திரட்டி ஊர்வலமாகச் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தவிர பாஞ்சாலங்குறிச்சி அருள்மிகு வீரசக்கதேவி சித்திரைத் திருவிழாற்கு ஜோதியுடன் கலந்துகொள்ளும் திரு.புலி நாயக்கர் அவர்கள், சென்னை.வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் ஜனவரியில் நடத்தும் குடும்ப விழாவில், சுமார் 500 கிமீ தூரம் பயணித்து உறவுகள் புடைசூழ கலந்து கொண்டு சமுதாயப்பணிக்கு ஊக்கமளிப்பவர் திரு.புலி நாயக்கர்.
அரசியல்கட்சி, சமுதாய அமைப்புகள், சமுதாய உறவினர்கள் நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தன் பங்களிப்பை செவ்வனே செய்துவரு திரு.புலிநாயக்கர் ஏற்கனவே பாவாளி ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்த நிலையிலும், கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், நண்பரின் விருப்பத்தை மதித்து அவருக்கு ஊராட்சி மன்றத் தலைவராக போட்டியிடும் வாய்ப்பை வழங்கிவிட்டு, திரு.புலிநாயக்கர் அவர்கள், விருதுநகர் ஒன்றியம் 19-ஆவது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தலில் திமுகழக வேட்பாளராக களமிறங்கி மகத்தான வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து தரப்பு மக்களின் அன்பைப்பெற்றவரான திரு.புலி நாயக்கர் அவர்கள், வெற்றியைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும் வகையில் சாதி,மதம்,மொழி,இனம் கடந்து அனைத்து தரப்பு மக்களுக்கும் பாடுபட்டு, வாய்ப்பளித்த கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.