🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஊராட்சி மன்றத் தலைவர்-அந்தியூர்-ஊர் நாயக்கர் - திரு.K.M.விஸ்வநாதன்

ஊர்நாயக்கர் (எ) K.M. விஸ்வநாதன் அவர்கள் 14.07.1980-இல் ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகேயுள்ள கேத்தநாயக்கனூரில் திரு.முத்து நாயக்கர் – திருமதி. மாரக்காள் தம்பதியினருக்கு செல்வாக்கான விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். உயர்நிலைப்பள்ளி கல்வியை முடித்து, கல்லூரியில் B.B.M., துறையைத் தேர்ந்தெடுத்து, இடையில் படிப்பைக்கைவிட்டு விவசாயப்பணிக்கு திரும்பினார். இவருக்கு திருமணமாகி திருமதி.K.V.அமராவதி என்ற மனைவியும், K.V.ஆதித்யவர்மன் என்ற மகனும் K.V.ஆர்த்தி என்ற மகளும் உள்ளனர்.


கேத்தநாயக்கனூர் ஊர்நாயக்கர் குடும்பத்தைச் சேர்ந்தவரான திரு.K.M.விஸ்வ நாதன் அவர்கள். இவரின் தந்தை “ஊர்நாயக்கர்” திரு.முத்து நாயக்கர் அவர்கள், செல்வச்செழிப்புமிக்க பெரும் நிலக்கிழாராகவும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராகவும் அப்பகுதியில் இருந்தவர். இப்படி மதிப்புமிக்க குடும்பத்திலிருந்து வந்தவரான திரு.விஷ்வநாதன் அவர்கள், தந்தையார் திடீரென காலமானதைத் தொடர்ந்து, ஒன்பதாவது வகுப்பு பள்ளி மாணவனாக, 14 வயதே நிரம்பிய நிலையில், 1996-இல் ஊர்நாயக்கராக பட்டம் சூட்டப்பட்டார். தந்தையார் இறந்த ஒருசில ஆண்டுகளில் தாயாரும் காலமாகிவிட, ஒரே தங்கையுடன் தனித்து நின்றார் திரு.விஸ்வநாதன்.

ஊர்நாயக்கராக இளம் வயதிலேயே சிறப்பாக செயல்பட்டாலும், தாய் –தந்தையை மிக இளம் வயதிலேயே இழந்து, செய்வதறியாது இளைய சகோதரியுடன் நிற்கதியாய், மனதை ரணப்படுத்திய கடந்த கால நினைவுகளை மனம் திறக்கிறார் திரு.விஸ்வநாதன். எதுவுமறியா மாணவப் பருவத்தில், கட்டுப்படுத்த ஆளின்றி, இளைஞர்கள் கூட்டம் புடைசூழ, பெரிய வீட்டுப்பையன், பெரும் குடிகாரராக மாறிப்போனதை ஒளிவு மறைவின்றி ஒத்துக்கொள்ளும் நேர்மை திரு.விஸ்வநாதனிடம் உள்ளது. ஆம் மதுப் பிரியர்களின் உலகம் தனித்துவமானது, நட்பு வட்டம் மிகப்பெரியதாக இருப்பது எதார்த்தத்தில் காண்பதே. காலையில் துவங்கும் திருவிழா, முன்னிரவு இடைவேளைக்குப்பின், அடுத்தடுத்த நாட்களுக்கு நீண்டது ஏதோ ஓரிரு வருடங்களில் முடிவுபெற்றுவிடவில்லை, ஆண்டுகள் பல தொடர்ந்து, சுயநினைவின்றி தொலைத்துவிட்ட இளமைக் காலத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் துணிச்சல் திரு.விஸ்வநாதனிடம் உள்ளது. ஒருபுறம் தனிப்பட்ட வாழ்க்கையில் தறிகெட்டுப்போனாலும், பேச்சில் இருந்த நாணயமும், கொடுத்த வாக்கை காப்பாற்றும் உறுதியும் “ஊர்நாயக்கருக்கே” உரித்தான குணத்தில் குறைவில்லாமல் பார்த்துக்கொண்டார்  திரு.விஷ்வநாதன். மறுபுறம் வயதும், குடும்ப கடனும் ஏறிக்கொண்டே சென்றதையும், நல்ல அண்ணனாக இல்லாமல் போனாலும், தங்கையொருத்தி தாயாக இருந்து  அண்ணனை மீட்டதை நினைவில் கொண்டு அசைபோட்டுப் பார்க்கிறார் திரு.விஷ்வநாதன்.


முழுநேர குடிகாரருக்கு தாய்-தந்தை மீதான பக்திக்கு குறைவில்லை. ஆம் எந்த நிலையிலும் தாய்-தந்தையர் படத்தை வணங்காமல் வீட்டை விட்டு செல்வதில்லையாம் இன்றுவரை திரு.விஷ்வநாதன். ஊர்நாயக்கர் குடும்பமல்லவா! எத்தனை குடும்பங்களுக்கு உணவளித்திருக்கும்? எத்தனை குடும்பங்களை வாழவைத்திருக்கும்? கேத்தநாயக்கனூரில் எத்தனை குழந்தைகள் ஊர்நாயக்கர் வீட்டுப்பாலை உண்டு, உறங்கியிருக்கும். கொடுத்தவர்கள் மறைந்திருக்கலாம், வாங்கியவர்கள் மறந்திருக்கலாம். ஆனால் காலப்பெட்டகத்தின் குறிப்பேடுகளை காளன் கூட அழிக்கமுடியாதே. படங்களில் இருந்தாலும், தினம் வணங்கிச்செல்லும் மகனைப் பார்க்காமலா இருந்திருப்பர் பெற்றோர்கள்?. 14-வயதில் ஊர்நாயக்கராகப் பொறுப்பேற்ற தன் மகன் விஷ்வநாதனுக்கான விடியலை அடுத்த 14-ஆண்டுகள் கழித்து காட்டினர், முன்னோர்கள் செய்த பாக்கியம். 

ஆம் 2010-இல் உள்ளூர் கோயில் புணரமைக்கப்பட வேண்டிய சூழல் வந்தபொழுது, ஊர்நாயக்கர் பொறுப்பு வகிக்கும் விஸ்வநாதனுக்கு அக்னி பரீட்சை காத்திருந்தது. திருக்கோவில் அமைக்கும் பணியை முன்னின்று நிறைவேற்ற வேண்டிய பொறுப்பில் உள்ள ஊர்நாயக்கர் விஷ்வநாதன், மதுவின் கோரக்கரங்களில் சிக்கித் திணறியது, அவருக்கே பெரிய சவாலாக இருந்தது. ஊர் நலனா? மனதை மயக்கும் மதுவா? முப்பது வயது இளைஞன் முன்னிருந்த கேள்வி. ஆனால் இப்பொழுது பாசமலர் தங்கையுடன், அரவணைத்துச் செல்லும் அன்பு மனைவி “அமராவதியும்” உடனிருந்தார். காசி -விஸ்வநாதர்” தலையில் கங்கை குடி கொண்டிருப்பதாக ஐதீகம். ஆனால் இந்த கேத்தநாயக்கனூர் விஸ்வநாதன் தலையில் “அமராவதி” அல்லவா குடிகொண்டுள்ளாள். என்ன அதிசயம் நடந்ததோ தெரியவில்லை! ஒரு அதிகாலைப்பொழுதில், ஒருகுடம் கங்கையில் தலைமுழுகி, மதுவை விட்டொழித்து, கோவில் கங்கனத்தைக் கையில் கட்டி திருப்பணியைத் துவங்கியவர், பாரெங்கும் பரந்து பாராளும் தேவிக்கு நிதி திரட்டி, குடமுழுக்கு நடத்தி தேவியை குடியமர்த்தி, ஊரார் போற்றும் ஊர் நாயக்கராக திரும்பிவந்தார் தவிஸ்வநாதன். பார்போற்ற வாழ்ந்த குடும்பம் இழந்த பெருமையை இரு மங்கையர் இணைந்து மீட்டுக்கொடுத்தது, பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தும்.


அன்றிலிருந்து மக்களோடு மக்களாய், உள்ளூர் மக்களின் சுக-துக்கங்களில் பங்குபெற்றுவரும் திரு.விஸ்வநாதன் அவர்கள், அரசியலில் தந்தை வழியே காங்கிரஸ் பேரியக்கத்தில் வளர்ந்து வந்தவர் என்றாலும் தேர்தல் அரசியலில் பங்கெடுப்பதை தவிர்த்து வந்தார். ஆனால் உள்ளூர் மக்களின் வாழ்வில் இரண்டரக்கலந்து விட்ட திரு.விஸ்வநாதன் அவர்கள், அதை நீண்டநாட்கள் தள்ளிப்போட முடியவில்லை. கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மூங்கில்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் வேட்பாளராக சுயோட்சியாக களமிறங்கி மகத்தான வெற்றி பெற்றார். மக்கள் நலன்காக்க மூத்தோர்களின் ஆலோசனையை ஏற்று ஆளும்கட்சியான அதிமுக-வில் இணைத்துக் கொண்டார். பல்வேறு சோதனைகளைக் கடந்து, வெற்றிகரமான, பண்பாளராக உயர்ந்துள்ள ஊர்நாயக்கர் திரு.விஸ்வநாதன் அவர்கள், இப்புதிய பொறுப்பின் மூலம் சாதி,மத,இன,மொழி பாகுபாடின்றி அனைவருக்கும் பணியாற்றி வருவதைத் மேலும் சிறப்புற தொடர்ந்து, சார்ந்துள்ள கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்கவேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved