ஊராட்சி மன்றத் தலைவர் - விளாத்திகுளம் - திருமதி.இராஜேஸ்வரி
திருமதி .V. இராஜேஸ்வரி அவர்கள் 1994-இல் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகேயுள்ள P.ஜெகவீரபுரம் கிராமத்தில் திரு.இராஜேந்திரன் - திருமதி.இராமலட்சுமி தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகளாகப் பிறந்தார். உயர்நிலைப்பள்ளி கல்வி வரை பயின்றுள்ளவர், அதேவூரைச்சேர்ந்த திரு.P. விஜயகாந்த் அவர்களை மணமுடித்துள்ளார்.
திரு.P.விஜயகாந்த் அவர்கள் 07.04.1985-இல் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகேயுள்ள P.ஜெகவீரபுரம் கிராமத்தில் திரு.பால்பாண்டி - திருமதி. நீலாவதி தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். உயர்நிலைப்பள்ளி வரை கல்வி பயின்றவரான திரு.விஜயகாந்த் அவர்கள் விவசாயப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார். திரு.விஜயகாந்த் – திருமதி.இராஜேஸ்வரி தம்பதியினருக்கு V.நித்யஸ்ரீ என்ற மகள் உள்ளார்.
இளம் அரசியல் தலைவரான திரு.விஜயகாந்த் அவர்கள் பொதுசேவையில் அதிக ஆர்வம் கொண்டவர். எந்த அரசியல் இயக்கத்திலும் இணையாமல் பொதுதளத்திலிருந்து பணியாற்றி வருபவரான திரு.விஜயகாந்த், உள்ளூர் மக்கள் எளிதில் அணுகும் வகையில் எளிய தலைவராகவும், மக்களின் பிரச்சினைகளை தீர்க்க உடனடியாக களத்தில் இறங்கி தேவையானதை நிறைவேற்றிக்கொடுக்கும் ஆற்றல் மிக்கவராகவும் உள்ளார். உள்ளூர் மக்களின் சுக-துக்கங்கள், கோவில் திருவிழாக்கள் , முக்கிய நிகழ்வுகள் அனைத்திலும் தன் பங்களிப்பை சிறப்பான முறையில் செய்து வருகிறார்.
தனது 21-ஆவது வயதிலேயே 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் கந்தசாமிபுரம் ஊராட்சி மன்றத் தேர்தலில் களமிறங்கி ஒருசில வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தவரான திரு.விஜயகாந்த் அவர்கள், ஆதரவாளர்களின் வற்புறுத்தலின் பேரில் கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தனது துணைவியார் திருமதி. இராஜேஸ்வரியை கந்தசாமிபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் வேட்பாளராக சுயோட்சையாகக் களமிறக்கி மகத்தான வெற்றி பெற்றுள்ளார். வளர்ந்து வரும் இளம் அரசியல் தலைவரான திரு.விஜயகாந்த் தம்பதியினர் இப்புதிய பொறுப்பின் மூலம் சாதி, மத, இன,மொழி வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் பணியாற்றி வெற்றிகளைக் குவித்து, வாய்ப்பளித்த மக்களுக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.