ஊராட்சி மன்றத் தலைவர் - கடலாடி - திருமதி.M.மாணிலா

திருமதி M.மாணிலா அவர்கள் 05.04.1994 - இல் இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே T.கரிசல்குளம் கிராமத்தில் திரு.அப்பணசாமி – திருமதி.குருலட்சுமி தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் மகளாகப் பிறந்தார். மேல்நிலைப்பள்ளிவரை பயின்றுள்ளவர் திரு.முருகன் என்பவரை மணந்துள்ளார். திரு.முருகன் அவர்கள் ஜவுளி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர்களுக்கு M.பாலசுந்தர், M. மகேஷ் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
திரு.அப்பணசாமி அவர்கள் 1970-இல் இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள T. கரிசல்குளம் கிராமத்தில் திரு.சக்கரை நாயக்கர் – திருமதி.இராசம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தெய்வத்திரு குருலட்சுமியை மணமுடித்த இவருக்கு A.மாணிலா, A.மாரீஸ்வரி என்ற இரு மகள்களும், A.குணசேகர், A.குரு என்ற இரு மகன்களும் உள்ளனர்.
தனது துணைவியார் திருமதி குருலட்சுமி அவர்களின் திடீர் மரணமும், அதையொட்டிய போராட்டமும் அப்பணசாமி அவர்களை பொதுவாழ்வில் கொண்டுவந்து நிறுத்தியது. 2003-இல் மனைவி குருலட்சுமிக்கு செய்யப்பட்ட குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட தவறால் அவர் மரணத்தைத் தழுவ நேர்ந்தது.
மனைவி இழந்த துக்கத்தோடு தவறான சிகிச்சைக்கு எதிராக இழப்பீடு வழங்கக்கோரி அரசுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கிய அப்பண்ணசாமிக்கு, அதுவே அவரின் பொதுவாழ்விற்கு அஸ்திவாரம் போட்டது. இழப்பீடு பெறுவதற்காக அரசின் ஒவ்வொருதுறையின் கதவுகளைத் தட்டி தினமும் அலைந்தபடி இருந்தார். கிராமத்திலிருந்து நகரத்திற்கு அதுவும் குறிப்பாக அரசிடம் நிவாரணம் கேட்டுச்ச்செல்கையில், கிராமத்திலுள்ள உறவுகளும், மற்றவர்களும் அரசு அலுவலகங்களிலும், நகரிலும் தங்களுக்கு வேண்டியதை அப்பண்ணசாமியிடம் செய்துகொடுக்குமாறு தேடிவந்தனர். மாணவர்களுக்கு சாதிச்சான்றிதழ், கல்வி உதவித்தொகை, வருமானவரிச்சான்று, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பதிவுச்சான்றிதழ், ஆதார்கார்டு என அனைத்து தேவைகளுக்கும் கிராம மக்கள் அப்பணசாமியின் உதவியை நாட, பின் அதுவே அவருக்கு வாழ்வாகிப்போனது.
இதன் தொடர்ச்சியாக தி.மு.கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு அரசியலில் அடியெடுத்து வைத்தார். கட்சி அவருக்கு ஊராட்சிக்கழக செயலாளர் பொறுப்பு வழங்கியது. சில ஆண்டுகளில் கட்சி அமைப்புகளில் இருந்து அப்பொறுப்பு நீக்கப்பட்டதையடுத்து கிளைக்கழகச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இப்பொறுப்பில் இருந்துகொண்டு அரசின் மக்கள் நலத்திட்டங்கள், உதவிகள் போன்றவற்றை அடித்தட்டு மக்களுக்குப் பெற்றுத்தருகிறார். தவிர உள்ளூரில் அனைத்து முக்கிய நிகழ்விலும், சுக, துக்கங்களிலும் கலந்து கொண்டு மக்களோடு மக்களாக, மக்கள் எளிதில் அணுகும் அரசியல் தலைவராக இருந்து வருகிறார் திரு.அப்பணசாமி.
இந்நிலையில், பொதுமக்கள் விருப்பத்தின் பேரில் கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் கரிசல்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு தனது மூத்த மகள் திருமதி.மாணிலா முருகன் அவர்களை வேட்பாளராக்கி, போட்டியின்றி ஊராட்சி மன்றத் தலைவராக்கினார்.
தனது அன்பு மனைவியின் நினைவாக பொதுநலச்சேவையில் ஈடுபட்டு, மக்களுக்கு உதவுவதின் மூலம் மகிழ்ந்திருக்கும் அப்பணசாமி அவர்களும், மகள் மாணிலா அவர்களும் இப்புதிய பொறுப்பின் மூலம் சாதி,மத,இன, மொழி பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் சேவையாற்றி, சார்ந்திருக்கும் கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.