🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மாவீரன் பிறந்தநாள் மாலையிட்ட முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர்!..

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 262-வது பிறந்தநாளான நேற்று (03.01.2021) நாடெங்குமுள்ள இராஜகம்பளத்து சமுதாய மக்களால் மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. தமிழகத்தின் தென்கோடி முதல் வடகோடி வரை பல கிராமங்கள், நகரங்களிலும் மாவீரனின் திருவுருவப்படம் அலங்கரித்து மேடையில் வைக்கப்பட்டிருந்தது. 


சமீப காலமாக அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்த்துவரும் சமுதாயமாக இராஜகம்பளத்தார் சமுதாயம் உள்ளது. 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலுள்ள இராஜகம்பள சமுதாய வாக்குகள் 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக்கூடிய வலிமை பெற்றது என்பதை அரசியல் கட்சிகள் சட்டமன்றத்தேர்தலுக்காக பணியமர்த்தியுள்ள நிறுவனங்கள் மூலம் புள்ளி விபரங்களை திரட்டியுள்ளது.


அதன் அடிப்படையில் பல்வேறு கட்சிகளிலும் கம்பளத்தார்களுக்கு உரிய பொறுப்புகளை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே சட்டமன்றத் தேர்தலில் கம்பளத்தாருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை சமுதாய இளைஞர்களிடமிருந்து குரல்கள் வீரியமாக எழுந்து வரும் நிலையில், இரு பிரதான திராவிடக்கட்சிகளில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளின் வளர்ச்சியை ஜுரணிக்கமுடியாத சில சக்திகள், மேலிடத்தில் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி கம்பளத்தார்களுக்கு எதிராக கருத்துகளை பரப்பி வருகின்றனர். இந்த உள்ளடி வேலைகளை ஈரோடு மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் மிக அதிகமாக அரங்கேற்றி வருவதாக சமுதாயத்தைச் சேர்ந்த அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


இந்த கலோபரங்களுக்கிடையே,  தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாரில் உள்ள மாவீரன் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. முதல்வரின் கயத்தாறு வருகை ஒட்டுமொத்த சமுதாய மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.ஆனால் அந்நிகழ்ச்சி திடீரென்று இரத்து செய்யப்பட்டு, கோவில்பட்டியில் உள்ள கல்லூரி வளாகத்தில் மாவீரன் கட்டபொம்மன் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


ஏற்கனவே பாஞ்சையில் உள்ள கோட்டை சீரமைப்பு பணி, நல்லப்பசுவாமிகள் மணிமண்டம் என கம்பளத்தார் சமுதாயத்திற்காக சிலபணிகளை தமிழக அரசு மேற்கொண்டதில் அடிப்படையில் கம்பளத்தார்களின் கவனத்தை ஈர்த்திருந்தார் தமிழக முதல்வர். ஆனாலும், ஏற்கனவே கொரோனா ஆய்வுப்பணிக்காக தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக முதல்வர் வைப்பாரிலுள்ள கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவிக்க வருகைதர இருப்பதாக செய்தி வெளியான நிலையில் கடைசி நேரத்தில் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதேபோல் தற்பொழுது கயத்தாரிலிருந்து ஒருசில கிலோ மீட்டர் தொலைவில் தங்கியிருந்த தமிழக முதல்வர், ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த நிகழ்சியை ரத்து செய்தது, மிகவும் உணர்வுப்பூர்வமாக அணுகும் கம்பளத்து சமுதாயத்தினருக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. கட்டபொம்மன் மீதான கம்பளத்தாரின் மரியாதையும், உணர்வும் நேற்று தமிழகமெங்கும் கூடிய கூட்டங்களே சாட்சி என்பது கவனிக்கத்தக்கது.


முதல்வரின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது ஏமாற்றத்தையளித்திருந்த நிலையில், துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் சடையால்பட்டி கிராமத்திலுள்ள மாவீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு, 500க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சேலைகளை வழங்கினார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நடைபெற்ற நிகழ்வில் தமிழக அமைச்சர் பெருமக்கள் மாண்புமிகு.செங்கோட்டையன் மற்றும் மாண்புமிகு.கருப்பணன் ஆகியோரும், கோவை ஈச்சனாரியில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் மாண்புமிகு.வேலுமணி அவர்களும் கலந்து கொண்டனர்.


இதேபோல் எதிர்க்கட்சித்தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 2-ஆம் தேதி மாலை பெருந்துறையிலும், பிறந்தநாளான நேற்று (03.01.2021) காலை ஈரோடு மாவட்ட திமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மாவீரன் கட்டபொம்மன் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து மாலை கரூர் சென்ற திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இராஜகம்பளத்தார் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்றிய செயலாளர் திரு.மணிகண்டன் தலைமையில் வீரவாள் பரிசளித்தனர்.


தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.கனிமொழி, பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் திரு.சண்முகசுந்தரம், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் திரு.சண்முகம் ஆகியோரும் மாவீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் ஆந்திர மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் திரு.அனில்குமார் யாதவ் அவர்களும், நெல்லூர் மாநகராட்சியின் 44,45,46-வது வார்டு மாமன்ற உறுப்பினர்களும், சிபிஐ எம்எல் மாநில தொழிலாளர் அணி தலைவர் திரு.J.கிஷோர்பாபு அவர்களும், ஆளும் YSR காங்கிரஸ் மற்றும் தெலுங்குதேச கட்சியின் நிர்வாகிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved