🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தளி எத்திலப்ப நாயக்கரின் 266-வது பிறந்த நாள்.

உடுமலை அருகே திணைக்குளம் கிராமத்திலுள்ள தூக்குத்தோட்டத்தில் காணப்படும் ஆங்கிலேயரின் சமாதி, அதன் மேலுள்ள கல்வெட்டு. திருமூர்த்தி அணைக்கு பின்புறமுள்ள ஆலமரத்தடியில் வைக்கப்பட்டுள்ள எத்தலப்பரின் கல்வெட்டுகள். சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்ட இந்தியர்களை தூக்கிலிட்டு ஆங்கிலேயர்கள் கொன்றிருக்கிறார்கள். ஆனால், ஆங்கிலேயர் ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றிய குறுநில மன்னர் ஒருவர், திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வாழ்ந்திருக்கிறார். அத்தகைய வீரத்துக்கும், பெருமைக்கும் உரிய தியாகியின் கல்வெட்டுகள் வீதியில் கிடப்பது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. உடுமலை-திருமூர்த்தி மலைக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது தளி பேரூராட்சி.

இங்கு, கி.பி.1800-ல் தென் கொங்கு நாடு என்று அழைக்கப் பட்ட பழநி, விருப்பாச்சி, ஆயக்குடி, இடையகோட்டை, ஊத்துக்குழி, தளி ஆகிய 6 பகுதிகளில், பாளையக்காரர்கள் ஆட்சி செய்து வந்துள்ளதாக, எத்தலப்பன் வரலாற்று நூல் கூறுகிறது. தளி பாளையத்தை, அவர்களது வம்சாவழியில் 16 பேர் ஆண்டுள்ளனர். இதற்கான கல்வெட்டுகள், திருமூர்த்தி அணை பின்புறமுள்ள ஆலமரத்தடியில் கிடக்கிறது. இறுதியாக மலையாண்டி எத்தலப்பர், அவரது தம்பி வெங்கிடுபதி எத்தலப்பர் ஆண்டுள்ளனர்.


கி.பி.1799-ல் வீரபாண்டிய கட்டபொம்மனை ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்ட செய்தி, எத்தலப்ப நாயக்கருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜயநகரப் பேரரசு காலத்தில், மைசூர் மன்னராக இருந்த திப்பு சுல்தானையும், வீரபாண்டிய கட்ட பொம்மனையும் வீழ்த்திய பிறகு, ஆங்கிலேயர்கள் தங்களின் ஆதிக்கத்தில் அனைத்துப் பகுதிகளையும் கொண்டுவரும் நோக்கில், பாளையங்களுக்கு தூதர்களை அனுப்பியுள்ளனர். அந்த வகையில், தஞ்சாவூரில் இருந்து தளிக்கு அனுப்பப்பட்ட தூதுவர்களின் தலைவன் அந்திரை கேதிஷ். ஆங்கிலேயருக்கு தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கவும், கட்ட பொம்மனை தூக்கிலிட்ட வெள்ளையருக்கு பாடம் புகட்டவும், அவனை மட்டும் தனியே அழைத்து கைது செய்து துக்கிலிட்டுள்ளனர்.

திணைக்குளம் கிராமத்தில் வெள்ளையனை தூக்கிலிடப்பட்ட அந்த இடம், தூக்கு மரத் தோட்டம் என்று அழைக்கப்படுகிறது. கொங்கு பாளையக்காரர்களின் சுதந்திர கிளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் இந்த கல்வெட்டே ஆதாரமாக உள்ளது. தற்போது அந்த இடம், தனியார் ஒருவரின் தென்னந்தோப்பாக உள்ளது. அங்கு புதைக்கப்பட்ட வெள்ளையருக்கு சமாதி எழுப்பப்பட்டு, அதன்மேல் கல் சிலுவையும் வைக்கப்பட்டுள்ளது. சமாதியை மூடியுள்ள கல்வெட்டில், கி.பி.1801 துன்மிகி வருடம் சித்திரை மாதம் 13-ம் தேதி, பரங்கியர் அந்திரை கேதிஷ், தெய்வமாகி அடங்கின சமாதி என தமிழில் எழுதப்பட்டுள்ளது. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் திரு.பூங்குன்றன் கூறுகையில், ஆங்கிலேயனை தூக்கிலிட்ட சுதேச வீரர்கள் வரிசையில், தளி பாளையக்காரர் எத்தலப்பர் இருந்துள்ளார் என்பதற்கு ஆதாரமாக, இந்தக் கல்வெட்டு உள்ளது. இதனை, அரசு கையகப்படுத்தி பாதுகாக்க வேண்டும் என்றார்.


நான்குபுறமும் சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்புத் தடுப்புவேலி, அந்த சமாதியை நூற்றாண்டுகளாக காத்து நிற்கிறது. இதுதொடர்பாக தகவல் அறிந்து, பலரும் பார்வையிட்டு செல்கின்றனர். சொந்த மண்ணில் அந்நியருக்கு எதிரான போரில் எத்தலப்பர் கொல்லப்பட்டார். அவர் வாழ்ந்த அரண்மனையும் சூறையாடப்பட்டது. இத்தகைய வீரமும், தேச உணர்வும் கொண்ட ஒருவரின் வரலாறு, இன்றைய தலைமுறையினர் பலருக்கும் தெரியாது வேதனை. 

தளி எத்தலப்ப நாயக்கர் புகழ் ஓங்குக!


தகவல் உதவி:

கம்பளவிருட்சம் அறக்கட்டளை, உடுமலை.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved