🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சமுதாயப் பெருந்தலைவரின் 80-வது பிறந்தநாளில் போற்றி வணங்குகிறோம்!

மதுரை திருமங்கலத்தையடுத்த பிள்ளையார் நத்தத்தில் 1941-ல் பிறந்தவர் திரு.க.சுப்பு. கல்லூரி நாட்களில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தலைசிறந்த சொற்பொழிவாளருக்கான விருது பெற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டராக தன் அரசியல் வாழ்வை துவக்கிய திரு.க.சுப்பு, இராஜபாளையத்தில் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய பல்வேறு கூட்டங்களில் பேச்சாளராக பங்கேற்றார். 1971ம் ஆண்டு ராஜபாளையம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

தமிழக அரசியலில் அவரது பேச்சு என்றும் நிலைத்திருக்கிற அளவில் தன் இருப்பை உறுதி செய்தவர் திரு.க.சுப்பு. இராஜபாளையத்தில் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், ஆலை அதிபர்களுக்கு எதிராகவும் மேடைகளில் பேசி வந்தார். இதனால், ஆலை முதலாளிகளிடம் கடும் எதிர்ப்பை சம்பாதித்தார். ஒரு கட்டத்தில் க.சுப்புவின் பேச்சுக்களால், ஆலை அதிபர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அவரது குடும்பத்தினருக்கு மிரட்டல் வரத் தொடங்கியது. அந்த அளவுக்கு  துணிச்சலான பேச்சாளராகத் விளங்கினார்.

சென்னை வந்த அவர், கம்யூனிஸ்ட் தலைவர்களுள் ஒருவரான மணலி கந்தசாமியோடு இணைந்து கட்சிப் பணியாற்றினார். மணலி கந்தசாமியின் மாணவரைப் போல. அவரின் சுக துக்கங்களில் சுப்பு பங்கு கொண்டார்.  கம்யூனிஸ்ட் கட்சியில் எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக ஒருகட்டத்தில் தி.மு.க.வில் க.சுப்பு சேர்ந்தார்.

எம்.ஜி.ஆருக்கு எதிராக பிரச்சாரம்:

1977 -ம் ஆண்டு, வில்லிவாக்கம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. வாக தேர்வு செய்யப்பட்டு,எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தார். சட்டசபையில் எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு எதிராக தி.மு.க., எம்.எல்.ஏ.க்களான க.சுப்பு, துரைமுருகன், ரகுமான்கான் மூவரும் அதிரடி கருத்துக்களை எடுத்து வைத்தனர். 'இடி, மின்னல், மழை' என்ற தலைப்பில் அவர்கள் தமிழகம் முழுவதும் வலம் வந்து, சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டைப் பற்றி விவாதித்தார்கள்.

"இடி' என்ற தலைப்பில் ரகுமான்கான், 'மின்னல்' என்ற தலைப்பில் துரைமுருகன், இறுதியில் 'மழை' என்ற தலைப்பில் க. சுப்பு ஆகியோர் பேசினார்கள். க.சுப்பு எடுத்து வைக்கும் விமர்சனங்களுக்கு பதில் அளிக்க முடியாமல் ஆளும்கட்சி திணறியது. ஆளும் அரசாங்கத்தைக் கேள்விகளாலும், பேச்சாலும் கதிகலங்க அடித்தார்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான பேச்சு:

1983 ஜூலை 31-இல் ராமநாதபுரத்தில் முகவை மாவட்ட தி.மு.க. மாநாடு நடந்தது. அந்த சமயத்தில் ஈழத்தில் இலங்கைச் சிறையில் குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் உள்பட மொத்தம் 37 பேர் சிங்களக் கைதிகளால் அடித்துக் கொல்லப்பட்டனர். இதனால் ஈழத்தமிழர்களுக்கான மாநாடாகவே தி.மு.க. மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் க.சுப்பு சிறப்பு பேச்சாளராகப் பேசிய பேச்சு ஈழ இன விடுதலைப்போராட்டம் குறித்து, ஆழமாகப் பேசினார்.

அவரது உரையில் இருந்து ஒரு பகுதி, "வை.கோபால்சாமி நாடாளுமன்றத்தில் பேசியதை பிரசுரித்த இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை, “He Spoke With blooding heart ” என்று போட்டிருந்தது. இதயத்தில் ரத்தம் கசியப் பேசினார் என்று போட்டார்கள். ரத்தம் கசியப் பேச வேண்டிய பேச்சு ஏன் வந்திருக்கிறது என்பதை இந்த நாடு முழுவதும் அறியும்.

நமக்கும், இலங்கைக்கும் இடையில் இருப்பது கடல். இந்த கடல் நம்மைப்பிரித்து வைக்கலாம். இருந்தாலும் இதயத்திலே ஒன்றாக இருக்கக்கூடிய இலங்கைத் தமிழனையும், இந்தியாவில் உள்ள தமிழர்களையும், உலகம் முழுவதும் பரவிக் கிடக்கின்ற தமிழ் இனத்தையும் எந்த சக்தியாலும் பிரித்து வைக்க முடியாது என்ற உணர்வால் நாம் எல்லாம் பிணைக்கப்பட்டிருக்கின்றோம் என்ற உண்மையினால்தான் உலகத்தில் மூலை முடுக்கெல்லாம் வாழக்கூடிய தமிழனாக இருந்தாலும் அவன் இதயத்தால் அழுதுகொண்டிருக்கின்றான். உணர்வால் உந்தப்பட்டிருக்கின்றான்.

நம் சகோதரர்கள் தாக்கப்படுவதைக் கேட்டு, கவலையோடு இருக்கின்றான் என்று பேசியவர்,  "வீரச் சிங்கங்களே! எழுங்கள்! ஒன்று சேருங்கள்! என கலைஞர் குரல் கொடுத்தால், தங்கள் இன்னுயிரைத் தர லட்சக்கணக்கான தொண்டர்கள் தயார்" என்று க.சுப்பு உணர்ச்சிகரமாகப் பேசி முடித்தார்.

அவர் எடுத்து வைத்த கருத்துக்கள் தி.மு.க. தொண்டர்களை உசுப்பியது. கருணாநிதி சுப்புவை பாராட்டினார். மறுநாள் முரசொலி நாளிதழில் ஒன்றரைப் பக்கம் அளவுக்கு க.சுப்புவின் பேச்சு மட்டும் இடம்பெற்றது. சுப்புவின் அந்த பேச்சு இன்றளவும் சிறந்த பேச்சாகக் கருதப்படுகிறது.

அப்போது தான் நடத்தி வந்த இதழ் ஒன்றில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஆண்டன் பாலசிங்கத்தின் பேட்டியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். திமுகவுடன் முரண்பட்டபோது அ.தி.மு.க வில் இணைந்து மேல்சபை உறுப்பினரானார். பிறகு, காங்கிரஸ் கட்சியில் 1991-ம் ஆண்டு இணைந்தார். அப்போது காங்கிரஸ் பேச்சாளர்கள் எப்படி பேச வேண்டும் என்று க.சுப்பு வகுப்பு எடுத்தார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கும் இதுபோல வகுப்பு நடத்தினார். அவரது அனுபவம் புதிய பேச்சாளர்களுக்கு உதவிகரமாக இருந்தது.

அடுத்துவந்த சட்டசபைத் தேர்தலில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. தலைவர் கருணாநிதியை எதிர்த்து க.சுப்பு களம் இறக்கப்பட்டார். கருணாநிதிக்கு எதிராக பிரச்சார மேடைகளில் பல்வேறு விமர்சனங்களை எடுத்து வைத்தார். ராஜிவ் காந்தி படுகொலையால் எழுந்த அலையால் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றபோதிலும், துறைமுகம் தொகுதியில் க.சுப்பு தோல்வியடைந்தார்.

அ.தி.மு.க.,வில் இருந்து கொண்டு கருணாநிதிக்கு வாழ்த்து:

1996-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, அங்கு ஐக்கியமானார். பின்னர் 2001- ம் ஆண்டு அ.தி.மு.க.வில் இணைந்தார். 2007-ம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதியின் சட்டமன்ற பொன்விழா நடைபெற்றது. அப்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் சட்டமன்ற ஆலோசகராக இருந்த க. சுப்பு, கருணாநிதியை  வாழ்த்திப் பேசினார். இதனால்  அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா க.சுப்பு மீது கடும் அதிருப்தி அடைந்தார்.

2007-ம் ஆண்டு ஜூனியர் விகடனுக்கு அளித்த பேட்டியில், " மாற்றுக் கட்சியில் இருந்தாலும், ஒருவரோட சாதனையை வாழ்த்திப் பேச வேண்டியது நல்ல மரபு. முதல்வரைப் பற்றி ஜெயலலிதா வாழ்த்துவாங்கன்னு எதிர்பார்க்க முடியாது. அதனால, அந்தக் கட்சி சார்பா நான் பேசினேன். பொன்விழாவு பாராட்டு நடக்குற அன்று, ஜெயா டி.வி-யில் கருணாநிதியின் சர்க்காரியா ஊழலைப் பத்தித் திட்டிப் பேசச் சொன்னாங்க. ஒரு கல்யாணம் நடக்குது... அந்தக் கல்யாணம் உங்களுக்குப் பிடிக்கலைன்னா போகாதீங்க. ‘எனக்குப் பிடிக்கலை. அதனால அந்தக் கல்யாணத்துல போய் நான் ஒப்பாரி வைப்பேன்’னு சொன்னா, நல்லாவா இருக்கு? அதனால அன்னிக்கு முதல்வரை எதிர்த்துப் பேச முடியாதுன்னு சொல்லிட்டேன்.

எதிர்பார்த்த மாதிரியே கட்சிக்குள்ள எதிர்ப்பு!  ஒதுக்கினாங்க. ஒதுங்கி இருந்தேன். வேற எனக்கு என்ன தெரியும்? மீண்டும் தலைவர் கருணாநிதிகிட்ட போனேன். ‘என்னய்யா... நல்லா இருக்கியா? நீ முதன்முதலா கம்யூனிஸ்ட் கட்சியைவிட்டு வந்து சேர்ந்தது இன்னும் ஞாபகத்துலயே நிக்குதுய்யா! நீயும் வரப் போகத்தான் இருக்கே!’னு சிரிச்சுக்கிட்டே சொன்னாரு!’’ என்று நடந்ததைச் சொன்ன சுப்பு, நிமிட நேர மௌனத் துக்குப் பிறகு, ‘‘சில சமயம் தோணும்...

இந்த 65 வயசுல எதுக்கு இந்தப் பாடுன்னு! ஆனா, கையும் வாயும் சும்மா இருக்க மாட்டேங்குதே! அ.தி.மு.க-வுல இருக்குறப்ப கருணாநிதியைத் திட்டி எழுதுறதுக்காகவே தனியா சம்பளம் கொடுத்தாங்க. ‘ஜெயலலிதாவை இவர் திட்டாத திட்டா? இப்ப, வெட்கமில்லாம அங்கேயே போய்ச் சேர்ந்துக்கிட்டாரு பாரு’னு கேலி பேசினாங்க. ஆரம்பத்துல ஒரு மாதிரிதான் இருந்துச்சு. இப்ப பழகிருச்சு.

எனக்கு எது சரின்னு தோணுதோ, பாதுகாப்பானதோ... அதும்படி நடக்க வேண்டியதா இருக்கு. ஒவ்வொரு முறையும், ‘இனிமே இடம்மாறக் கூடாது. சாகுறவரைக்கும் இங்கேயே தான் இருக்கணும்’னு தோணும். ஆனா, சந்தர்ப்ப சூழ்நிலைகள் அனுமதிக்க மாட்டேங்குதே! சர்க்கரை நோய் அதிகமாகி, என் இடது காலை ஆபரேஷன்ல எடுத்துட்டாங்க. ஒரு விபத்துல சிக்கிட்டோம்னா, அந்த வேதனையிலேயே வாழ்நாள் பூரா உழண்டுகிட்டு இருக்க முடியுமா? மனசளவில் அந்த வேதனையிலிருந்து மீண்டு வரணும்தானே? நான் கட்சி மாறுறது சிலருக்கு வேணா கேலியாவோ ஆச்சர்யமாவோ தெரியலாம். எனக்கு அது வாழ்க்கைப் போராட்டம்!’’- நினைவுகளை எங்கோ நழுவவிட்ட சுப்பு, சுதாரித்து சின்ன சிரிப்போடு விடை கொடுத்தார்!     

எதிர்காலம் குறித்து வேதனை:

கடைசியாக க.சுப்பு தி.மு.க.வில் இருந்தார். சர்க்கரை நோய் காரணமாக ஒரு கால் எடுக்கப்பட்டு, நடக்க முடியாத நிலையில் இருந்தார். 2010ம் ஆண்டு தி.மு.க.வில் சொற்பொழிவாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சொற்பொழிவாளர்கள் ஆளுக்கு ஒரு கருத்துச் சொன்னார்கள். அப்போது சுப்பு உட்கார்ந்திருந்த இடத்துக்கே 'மைக்' வந்தது. அப்போது வேதனையுடன் பேசிய சுப்பு, "ஒரு காலத்தில் மேடைப் பேச்சுக்கு மகத்துவம் இருந்தது. மாதம் 30 நாளும் நாங்கள் கூட்டம் பேசினோம். இன்றைக்கு அவ்வளவாக கூட்டங்கள் நடப்பதில்லை. நடந்தாலும் மக்கள் கூடுவதில்லை. எல்லோரும் டி.வி. முன்னால் உட்கார்ந்துவிட்டார்கள். இந்த நிலையில் பேச்சாளர்களது எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்டது...'' என்றவர், ''நான் தி.மு.க-வுக்கு வந்து சேர்ந்ததும் சென்னையில் மூன்று கூட்டங்களுக்குக் கூப்பிட்டார்கள். அதற்குப் பிறகு யாருமே என்னை அழைக்கவில்லை!'' என்று வருத்தப்பட்டார்.

அது தனிப்பட்ட ஒரு பேச்சாளரின் வேதனை அல்லாமல் பேச்சாளர்களின் எதிர்காலம் குறித்த ஒட்டுமொத்த கவலையாக இருந்தது.

சுப்புவின் பேச்சு பாணி:

ஒவ்வொரு விஷயம் குறித்தும் ஆழமான கருத்துக்களை எடுத்து வைப்பது சுப்புவின் பாணி. எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் பேசுவதற்கு முன்பு அது குறித்து முன்பே தயாரித்திருப்பார். மேலோட்டமாக இல்லாமல் ஆழமாக ஒரு விஷயத்தைப் பற்றி உரையாற்றுவார். நகைச்சுவையாக கருத்துக்களை எடுத்து வைப்பதிலும் வல்லவர். அரசியல் நையாண்டியில் அவர் சிறந்து விளங்கினார்.

2011-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக க.சுப்பு உயிரிழந்தார். சுப்புவுக்கு பேபி,ரமணி என்ற இரு மனைவிகளும், ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

க.சுப்புவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய கருணாநிதி, " சுப்பு ஆற்றல் மிக்க பேச்சாளர். இன்றைக்கும் அவர் பேசினால் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அப்படி வேடிக்கையாகவும், அதே நேரத்திலே அறிவுப் பூர்வமாகவும், அரசியல் ரீதியாகவும் பேசக் கூடியவர்.

தோழர் சுப்புவின் மறைவு, பாட்டாளி வர்க்கத்திற்கு மாபெரும் இழப்பு. அவர் சட்டமன்றத்தில் ஆற்றிய பணிகளை நேரடியாகவே அறிந்தவன் நான். அவருடைய பேச்சாற்றலும், வாதத்திறமையும் பகைவர்களையும் வசீகரிக்கக் கூடியவை என்பதை அனுபவத்தில் உணர்ந்தவன். அவருடைய மறைவு தொழிலாளர் வர்க்கத் திற்கும், சாதாரண சாமான்ய மக்களுக்கும், சமுதாயத்திற்கும் பெரும் இழப்பாகும்" என்றார்.

கம்பளத்தார் குலத்தில் பிறந்து பார்போற்றும் தலைவராக இருந்த ஐயா.க.சுப்பு அவர்களின் 80-ஆவது பிறந்தநாளில் அவரின் புகழைப்போற்றி வணங்குவோம்.

தகவல்: வாட்ஸப் பதிவு.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved